| கார்ப் பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்து - கார்காலத்து மழையான் மிகுந்த பெரிய செவ்வியையுடைய ஈரத்தின்கண்; பூழி மயங்கப் பல உழுது வித்தி - புழுதி கலக்கப் பல சால்பட வுழுது வித்தி; பல்லி ஆடிய பல்கிளைச் செவ்வி - தாளியடிக்கப்பட்ட பல கிளையையுடையசெவ்வியின்கண்; களை காழ் கழாலின் - களையை யடியினின்றும் களைதலான்; தோடு ஒலிபு நந்தி - இலை தழைத்துப் பெருகி; மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப - மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையை யொப்ப; நீடி - ஓங்கி; கருந் தாள் போகி - கரிய தண்டு நீண்டு; ஒருங்கு பீள் விரிந்து - எல்லாம் ஒருங்கு சூல் விரிந்து; கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து - கதிரினது அடியும் தலையும்ஒழியாமல் மிகக் காய்த்து; வாலிதின் விளைந்த - சீரிதாக விளைந்த; புது வரகு அரிய - புதிய வரகை யறுக்க; தினை கொய்ய - தினையையரிய; கவ்வை கறுப்ப - எள்ளிளங் காய் கறுப்ப; அவரைக் கொழுங் கொடி விளர்க்காய் கோட் பதமாக - அவரையினது கொழுவிய கொடியின்கண் வெள்ளைக் காய் அறுக்கும் செவ்வியாக; நிலம் புதைப்பழுனிய மட்டின் தேறல் - நிலத்தின்கட் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை; புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து - புல்லாலே வேயப்பட்ட சிறியமனையின்கண் குடியுள்ள இடந்தோறும் நுகரக்கொடுக்க; நறு நெய்க் கடலை விசைப்ப - நறிய நெய்யிலே கடலைதுள்ள; சோறு அட்டு - சோற்றை யட்டு ஊட்டுதற்கு; பெருந்தோள் தாலம் பூசல் மேவர - பெரிய தோளையுடைய மனையாள் கலம் பூசுதலைப் பொருந்த; வருந்தா யாணர்த்து - வருந்த வேண்டாத புதுவருவாயை யுடைத்து முன்பு; நந்துங் கொல் - இனியது கெடும் போலும்; இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை - கரிய பலவாகிய கூந்தலையுடைய மடந்தையர்களுக்குத் தந்தையாகிய; ஆடு மழை நரலும் சேட்சிமை - அசைந்த மூங்கில் இழைந்தொலிக்கும் உயர்ந்த உச்சியையுடைய; புலவர் பாடி ஆனாப் பண்பின் - புலவர் பாடப்பட்டமையாத தன்மையையுடைய; பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட - பகைவரது புறக்கொடுத்தோடும் வீரக் கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற; செரு வெஞ் சேஎய் பெருவிறல் நாடு - போரை விரும்பிய சேயை யொக்கும் பெரிய வென்றியை யுடையவனதுநாடு எ-று.
வித்தி ஆடிய செவ்வி யென இயையும். நந்தி யென்பது முதலாய வினையெச்சங்கள் விளைந்த வென்னும் பெயரெச்ச வினையோடும், அரிய வென்பது முதலாக மேவர வென்ப தீறாக நின்ற வினையெச்சங்கள் யாணர்த் தென்னும் குறிப்பு வினையோடும் முடிந்தன. பகர்ந் தென்பது பகர வெனத் திரிக்கப்பட்டது. விசைப்பச் சோறட்டு மேவர வென இயையும். செரு வெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங்கொல்லோ எனக் கூட்டுக. பெருந்தோ ளென்பது
|