பக்கம் எண் :

262

 

வரிசையறிவது “அரிதாயிற்று” “பொதுநோக்கான் வேந்தன் வரிசையா
நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர்” (குறள். 528) என்று
திருவள்ளுவனாரும் கூறுதல் காண்க.

                  122. மலையமான் திருமுடிக்காரி

     திருமுடிக்காரி தன் வண்மையிற் சலியாதிருத்தலைக் கண்ட கபிலர்
பெருவியப்புற்று, “திருமுடிக்காரி, நின் நாடு கடலாலும் கொள்ளப்படாது;
பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அஃது
அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத்
துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின்
ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை;
அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்துக்குக் காரணம் அறியேன்”
என்று இப் பாட்டிற் குறித்துள்ளார்.

 கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
5மூவரு ளொருவன் றுப்பா கியரென
 ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
10நினதென விலைநீ பெருமிதத் தையே. (122)

     திணை: பாடாண்டிணை. துறை : இயன்மொழி. அவனை அவர்
பாடியது.

    உரை : கடல் கொளப்படாது - கடலாற் கொள்ளப்படாது;
உடலுநர் ஊக்கார் - அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற்
கொள்ளார்; கழல் புனை திருந்தடி காரி - வீரக்கழலணிந்த
இலக்கணத்தால் திருந்திய நல்ல அடியையுடைய காரி; நின் நாடு -
நினது நாடு; அழல் புறந்தரூஉம் அந்தணரது - அது
வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; வீயாத் திருவின்
விறல் கெழு தானை- கெடாத செல்வத்தினையும் வென்றி
பொருந்திய படையையுமுடைய; மூவருள் ஒருவன் துப்பாகியர் என
- மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டுமென்று; ஏத்தினர்
தரூஉம் கூழ் - அம் மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து
நினக்குத் தரும் பொருள்; நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரது
- நுமது குடியை வாழ்த்தினராய் வரும் பரிசிலருடையது; வடமீன்
புரையும் கற்பின் - ஆதலால் வட திசைக்கண் தோன்றும்
அருந்ததியை
யொக்கும் கற்பினையும்;