| அன்று - அதுவன்றி; நிறை யருந் தானை வேந்தரை - நிறுத்தற்கரிய படையையுடைய அரசரை; திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்து - திறை கொண்டு அவரை மீட்கும் தலைமையுமுடைத்து எ-று.
இரவலர் சுட்டி யென்று பாடமோதி, இரவலர் கருதிக்கொண்டு புகழ்களைத் தொடுத்துண்ணக் கிடக்கினும் கிடக்கும் எனவும், இரவலர் எமது எமதென்று கூறிட் டுண்ணக் கிடக்கினுங் கிடக்கும் எனவும் உரைப்பினு மமையும். இது கொடைச் சிறப்பும் வென்றிச் சிற்புபம் கூறியவாறு.
விளக்கம்: கொண்பெருங் கானக் குன்றத்துக்கும் ஏனைக் குன்றங்கட்குமுள்ள வேற்றுமை கூறுவார், கொண்பெருங் கானம் வண்மையும் வலியுமாகிய இரு நலங்களையும் உடைத்து; ஏனைக் குன்றங்கள் இரண்டனுள் ஒன்றே யுடைய என்றார். இவையே யன்றி, கொண்பெருங் கானம் இரவலர்க்குக் கடன் கொடுத்தோராலும் திறை செலுத்தும் வேந்தராலும் சூழப்பட்டிருக்கும் என்றார். எனவே, இச் சிறப்பு ஏனைக் குன்றங்கட்கு இல்லை யென்பதாம். இரவலர்க்குக் கடன் கொடுத்தோர், இரவலர் பரிசில் பெறுவதில் தப்பாராகலின் தமக்குரிய கடனைத் தாம் தவறாதே பெறலாம் என்ற கருத்தால் குன்றத்தைச் சூழ்ந்திருந்தன ரென்றா ரெனக் கொள்க.
157. ஏறைக் கோன்
ஏறைக் கோனை ஏறை யென்றும் வழங்குப. நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுரை யெனப்படுவோர் வரிசையுட் காணப்படும் ஏற்றை வேறு, ஏறைக் கோன் வேறு. இவனைப் பெருங்கல் நாடனெம் மேறைக்குத் தகுமேஎன்றதனால், ஏறை யென்பது இயற் பெயராதல் விளங்குகிறது. ஆண் மக்கட்கு ஆற்றல் பொருளாக ஏற்றை யென்றும் ஏறையென்றும் பெயர்கள் அக்காலத்து வழங்கின வென்று இதனால் அறியலாம். இவன் குறிஞ்சிநிலத்துக் குறவர்க்குத் தலைவன்; வில்லும் வேலும் வல்லவன்; காந்தட்பூவாற் றொடுத்த கண்ணி சூடுபவன்; தனக்குரியோர் பிழை செய்யின் அதனைப் பொறுத்தலும், பிறர்க்குண்டாகிய வறுமை கண்டு நாணுதலும், படையாளுமிடத்துப் பழிபடாமையும், வேந்தர் அவைக்களத்துப் பெருமிதமுற்று விளங்குதலும் ஏறைக் கோனுடைய சீரிய பண்புகளாகும். இவனைக் குறமகள் இளவெயினி யென்பார் இப்பாட்டால் சிறப்பிக்கின்றார்.
வேறுநிலத் தலைவர்களும் சான்றோர்களும் கூடிய அவையின்கண், சான்றோராகிய குறமகள் இளவெயினி யென்பார் தமது நாட்டுத் தலைவன் பண்புகளை யெடுத்தோத வேண்டிய நிலையுண்டாயிற்று. அப்போழ்து, அவர்,தமர் பிழை பொறுத்தல் முதல் வேந்தர் அவையில் ஓங்க வீற்றிருந்தல் ஈறாகக் கூறப்படும் பண்புகள் நும்மோர்க்குத் தகுவனவல்ல; பெருங்கல் நாடனாகிய எம் ஏறைக்கே தகும்என இப்பாட்டைப் பாடியிருக்கின்றார். |