| பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய உயர் மருப்பு ஏந்திய - பனையை யொக்கும் பெருங் கையுடனே முத்துப்படும்படி முதிர்ந்த உயர்ந்த கொம்பேந்திய; வரை மருள் நோன் பகடு - மலையை யொக்கும் வலிய களிற்றை; ஒளி திகழ் ஓடை பொலிய - ஒளி விளங்கும் பட்டம் பொலிய; மருங்கில் படு மணி இரட்ட ஏறி - பக்கத்தே யொலிக்கும் மணி ஒன்றற்கொன்று மாறி யொலிப்ப ஏறி; செம்மாந்து செலல் நசைஇ உற்றனென் - தலைமை தோன்ற இருந்து போதலை விரும்பினேன்; விறல் மிகு குருசில் - வென்றி மிக்க தலைவனே; இன்மை துரப்ப இசை தர வந்து- எனது வறுமை பின்னே நின்று துரத்த நின் புகழ் கொடுவர வந்து; நின் வண்மையில் தொடுத்த என் நயந்தனை கேண்மதி - நினது கைவண்மையிலே சிலவற்றைத் தொடுத்த வென்னைக் காதலித்துக் கேட்பாயாக; வல்லினும் வல்லே னாயினும் - சிலவற்றைச் சொல்ல அறிவேனாயினும் அறியேனாயினும்; வல்லே என் அளந்து அறிந்தனை - விரைய என் கல்வி யறிவை ஆராய்ந்தறிந்தனையாய்; நோக்காது சிறந்த நின் அளந்து அறிமதி - ஆராயாது சிறந்த நின் அளவை அளந்தறிவாயாக; பெரும - பெருமானே; என்றும் - எந்நாளும்; வேந்தர் நாணப் பெயர்வேன் - எனது மிகுதியைக் கண்டு அரசர் நாணும்படி பெயர்வேன்; சாந்து அருந்திப் பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் - சாந்து பூசப்பட்டுப் பல நல்ல இலக்கணத்தைப் பொருந்திய மேம்பட்ட அழகினையுடைய மார்பை; மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல - மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் தழுவும் தோறும் விரும்ப; நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்- நாட் காலையே முரசு முழங்கும் இடனுடைத்தாய் எல்லையின்கண்; நின் தாணிழல் வாழ்நர் நன்கலம் மிகுப்ப - நினது தாணிழற்கண் வாழ்வார் நல்ல ஆபரணத்தை மிகுப்ப; வாள் அமர் உழந்த நின் தானையும் - வாளாற் செய்யும் போரின்கண்ணே உழக்கப்பட்ட நினது படையையும்; சீர் மிகு செல்வமும் பல ஏத்துகம் - நினது சீர்மிக்க செல்வத்தையும் பலபடப் புகழ்வேம் எ-று.
அருஞ் சுரம் சென்று தலைவருவனவல்ல வென முற்றாக்கி, அவ்வருஞ்சுரம் இறந்தோ. ரெனவும், அன்பின்றி யிறந்தோ ரெனவும் கூட்டுக. நின் வண்மையிற் றொடுத்த வென்பதற்கு நின் வண்மையால் வளைத்துக் கொள்ளப்பட்ட வெனினு மமையும். புகல, மிகுப்ப வென்னும் செயவெனெச்சங்கள் வாளம ருழந்த வென்னும் பிறவினையொடு முடிந்தன.
துன்புறுவி மருளப் பகடேறிச் செலல் நசைஇ உற்றனென் எனவும், மகளிர் புகலத் தாணிழல் வாழ்நர் நன்கல மிகுப்ப வாளம ருழந்த நின் தானையும் செல்வமும் ஏத்துக மெனவும் கூட்டுக. |