| 171. பிட்டங் கொற்றன்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், பன்முறையும் பிட்டங் கொற்றனைக் காண்டற்குச் செவ்வி பெறாதிருந்து முடிவில் ஒருகால் அச்செவ்வி பெற்று, தமது செவ்வி பெறாநிலையும் பெறுதலின் அருமையும் தமது சுற்றத்தின் வறுமையும் விளங்க இனியதொரு பாட்டைப் பாடிய செய்தியை முன்பு நும்படை செல்லுங்காலை(புறம். 169) யென்றுதொடங்கும் பாட்டிற் கண்டோமன்றோ! அப் பாட்டின் நலத்தில் ஈடுபட்ட பிட்டங்கொற்றன், ஒருமுறைக்குப் பன்முறை அவர்க்குப் பெரும் பரிசில் நல்கினான். கண்ணனார்க்கு அவனது வண்மையின்பாலும் அன்புடைமையின்பாலும் பெருமதிப்புண்டாயிற்று. அவற்றை யெடுத்தோதிப் பாராட்டுதலின் அவர்க்கு விருப்பம் மிக வுண்டாயிற்று. அவரைச் சூழ்ந்திருந் சான்றோர், நீவிர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் தூஞ்சிய நன்மாறன், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியாகிய முடிவேந்தராற் சிறப்பிக்கப்பெறும் பெரும் புலமையுடையீராதலின், நும்பால் இக்கொற்றனது அன்பு பெரிதாக இருக்கலாம்; அவன்பால் நுமக்கு அன்பு பெரிதாக லென்னையோ? வெனக் கூறும் கருத்தினராயினர்; அதனை யுணர்ந்துகொண்ட காரிக்கண்ணனார், இப்பாட்டின்கண், இக்கொற்றன் யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போனாயினும், பிறர்க்கும் அன்ன அறத்தகையன்; அவன் உள்ளடி முள்ளும் நோவ உறாற்க; ஈவோர் அரியராகிய இவ்வுலகின்கண், வாழ்வோர் வாழும் பொருட்டு அவன் தாள் வாழ்கஎன்று குறித்துரைக்கின்றார்.
| இன்று செலினுந் தருமே சிறுவரை நின்று செலினுந் தருமே பின்னும் முன்னே தந்தென னென்னாது துன்னி வைகலுஞ் செலினும் பொய்யல னாகி | 5 | யாம் வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன் | | தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப அருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்றன் இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும் களமலி நெல்லின் குப்பை வேண்டினும் | 10 | அருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை | | பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே அன்ன னாகலி னெந்தை யுள்ளடி முள்ளு நோவ வுறாற்க தில்ல ஈவோ ரரியவிவ் வுலகத்து | 15 | வாழ்வோர் வாழவவன் றாள்வா ழியவே. (171) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி அவனைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. |