| ஒருகால் ஆத்திரையனார் தமதுஊராகிய கள்ளிலைவிட்டு வேங்கடத்துக்குச் சென்ற ஆதனுங்கனைக் கண்டு அளவளாவியிருந்தார். இருவரும் சொல்லாடுகையில் ஆத்திரையனார் தமக்கு ஆதனுங்கன்பால் உள்ள அன்பினை யெடுத்தோதவேண்டிய நிலையுண்டாயிற்று. அவர், இறைவ, நீ எப்போதும் என் நெஞ்சில் இடம் பெற்றுள்ளாய்; என் நெஞ்சைத் திறப்போர் நின்னை அங்கே காண்பர்; பலரையும் புரத்தலை மேற்கொண்டிரக்கும் அறத்துறையாகிய நின்னை ஒருகாலும் மறவேன்; மறத்தற்குரிய காலமொன்றுண்டாயின் அஃது என்னுயிர் என் யாக்கையை விட்டுப் பிரிந்தேகும் காலமாமே யன்றிப் பிறிதில்லையென்ற கருத்துடைய இப் பாட்டைப் பாடினார். பின்பு ஒருகால், இவர் வேங்கடஞ் சென்றபோது, ஆதனுங்கன் இறந்தானாக அவன் வழித்தோன்றலாகிய நல்லோர் முதியன் என்பானைக் கண்டார். அவனும் இவரை வரவேற்று இன்புறுத்தச் சமைந்திருந்தான். அவனை இவர், ஆதனுங்கன் போல நீயும் பசித்த வொக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும(புறம்.389) என்று கூறுமாற்றால் ஆதனுங்கனைத் தாம் மறவாமையை விளக்கினார். ஆதியருமன் என்றொரு வள்ளலும் இவ்வாத்திரையனாரால் (குறுந்.893) பாராட்டப் படுகின்றான்.
| எந்தை வாழி யாத னுங்கவென் நெஞ்சந் திறப்போர் நிற்காண் குவரே நின்னியான் மறப்பின் மறக்குங் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் | 5 | என்னியான் மறப்பின் மறக்குவென் வென்வேல் | | விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக விடைகழி யறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும் | 10 | பயிர்புர வெதிர்ந்த வறத்துறை நின்னே. (175) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
உரை: எந்தை வாழி - என்னுடைய இறைவ வாழ்வாயாக; ஆதன் நுங்க-; என் நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவர் - யான் ஒன்றைச் சொல்ல நினைப்பின் நினது புகழல்லது சொல்லாமையான் என் நெஞ்சை வெளிப்படுத்திக் காணலுறுவோர் ஆங்கு நின்னைக் காணாநிற்பர்; நின் யான் மறப்பின் - நின்னையுடைய யான் நின்னை மறப்பின்; மறக்குங்காலை - மறக்குங் காலமாவது சொல்லக் கேட்பாயாக; என் உயிர் யாக்கையிற் பிரியும்பொழுதும் - என்னுடைய உயிரானது என் உடம்பை விட்டு நீங்கும் காலத்தும்; என் யான்மறப்பின் - என்னை யான் மறக்குங்கால முண்டாயின்; மறக்குவென் - அப்பொழுது மறப்போனல்லது மறவேன்; வென்வேல் விண்பொரு நெடுங்குடை - வென்றி வேலையுடைய விசும்பைத் தோயும் நெடிய குடையினையும்; கொடித் தேர் - கொடியணிந்ததேரினையுமுடைய; |