| வைகலும் பகைக்கூழ் அள்ளற்பட்டு - அது நாடோறும் பகையாகிய செறிந்த சேற்றிலே யழுந்தி; மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தரும் - மிகப் பல தீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும் எ-று.
இஃது உலகாளும் முறைமை கூறுதலை யுட்கொண்டு சகடம் செல்லுறுமாற்றைக் கூறினமையின், நுவலா நுவற்சி யென்னும் அலங்கார மாயிற்று; ஒட்டென்று கூறுவாருமுளர். அன்றி, இதற்கு உலகத்தின்கண்ணே உலகியற்கையை நிறுத்தி, அதனோடு ஞாலத்தின்கண்ணே செலுத்தப்படும் காப்பாகிய சகடம் தன்னைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின், தனக்கு ஓரிடையூறின்றாகி நெறிமுறைமையே நடக்கும்; அதனைச் செலுத்துதல் தெளியானாயின், அச் சாகாடு மறுதலை யென்னும் செறிந்த அள்ளலிலே அகப்பட்டுத் தனக்கும் தன்கீழ் வாழ்வார்க்கும் மிகப் பலவாகிய தீக்கேட்டினை மேன்மேலே தருமெனவும் பொருளுரைப்பர். இப் பொருட்குப் பாரென்றது, உலகிற்கையை. கால் - உருளை.
விளக்கம்: உலகாளு முறைமை கூறுதலை யுட்கொண்டு உரைக்கும் மிடத்து, அரசியலாகிய சகடத்தை யுகைப்போனாகிய வேந்தன் மாட்சிமைப்படின், ஊறுபாடின்றி ஆட்சியைக் கடைபோக இனிது செலுத்துவன்; அதனைச் செலுத்து முறைமையை அறியானாயின், நாளும் உட்பகையும் புறப்பகையுமாகிய இவற்றிடையே அகப்பட்டுத் தனக்கும் தன்னாட்டவரக்கும் மிகப் பல துன்பத்தை மேன்லேும் செய்து கொள்வன் எனவரும். இப் பாட்டின் கருத்தைத் திருத்தக்கதேவர், ஆர்வலஞ் சூழ்ந்த ஆழியலைமணித் தேரை வல்லான், நேர்நிலத் தூருமாயின் நீடுபல் காலஞ் செல்லும், ஊர்நில மறிதல் தேற்றா துருமேல் முறிந்து வீழும், தார்நில மார்பவேந்தர் தன்மையு மன்ன தாமே(சீவக. 2909) என்று கூறுதல் காண்க.
186. மோசி கீரனார்
மோசிகீரனார், சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையையும், கொண்கானங் கிழானையும் பாடிப் பெரும் பரிசில் பெற்று மேம்பட்டவர். வினையான் மிக்க வேந்தர் போந்து தானையொடு சூழ்ந்து கொண்ட காலையில், தன் தானை யழியவே, இனித் தன்னையின்றித் தன் எயில்சூழ் இருக்கைக்கு வேறு அரணில்லையென்பதைத் தெரிந்து நன்னனென்பான், தான் தங்கியிருந்த கானத்தினின்றும் வெளிப்பட்டு வந்து தான் பிடித்த வேலைக் கைவிடாது பகைவரை வென்று தன் பண்டைப் புகழை நிறுவிய சிறப்பினைப் பெரிதும் பாராட்டிப் பேசுவர். ஆய் அண்டிரனுக்குரிய பொதிய மலையிலுள்ள வேங்கையும் காந்தளும் போல மகளிர் மேனி மணங்கமழும் என்பர். இத்தகைய சிறப்பமைந்த இக் கீரனார் தம்மோடொத்த சான்றோர் சூழ வேந்துடை யவையத்திருந்தகாலை அரசர்க்கும் அவர் குடை நிழல் வாழும் குடிகட்குமுள்ள தொடர்புபற்றி ஓர் ஆராய்ச்சி நிகழ்ந்தது; உயிர்க்கும் உடம்புக்குமுள்ள தொடர்பே அரசுக்கும் அவன் நாட்டிற்கும் உள்ள தொடர்பு என்பது அவ் வாராய்ச்சியில் முடிபாயிற்று. ஆகவே, உடம்பின் நலத்துக்கும் கேட்டுக்கும் உயிரினது உண்மையும் இன்மையுமே ஏதுவாதல் போல வேந்தன் உளனானால் நாடு
|