பக்கம் எண் :

424

 

யானும் வெயிலென முனியேன் - யானும் வெளிலென்று நினைந்து
போக்கை வெறேனாய்; பனி யென மடியேன் - பனியென்று கொண்டு
மடிந்திரேனாய்; கல் குயின் றன்ன என் நல்கூர் வளிமறை - விட்டு
நீங்காமையால் கல்லாற் செய்தாற்போன்ற என் நல்குரவின்
மிகுதியான் வளி மறையாகிய மனையிடத்து; நாணலதுஇல்லாக்
கற்பின் - நாணல்லது வேறில்லாத கற்பினையும்; வாணுதல்
மெல்லியல் - குறுமகள் உள்ளி ஒளியை யுடைத்தாகிய நுதலினையும்
மெல்லிய இயலினையுமுடைய குறுமகளை நினைந்து; செவ்வல் -
போவேன்; நின் நாள் சிறக்க - நின்னாயுள் மிகுவதாக எ-று.

     “நோயிலராக நின் புதல்வர்”என்பதூஉம், “சிறக்க நின் நாள்”
என்பதூஉம் குறிப்பு மொழி. அன்றி, பரிசில் மறுத்தலான் இவன்
புதல்வர்க்கும் இவனுக்கும் தீங்கு வருமென்றஞ்சி நோயிலராக வெனவும்,
சிறக்க நின் நாளெனவும் கூறினாராக வுரைப்பினு மமையும். நல்குர
வென்பது நல்லெனக் குறைந்துநின்றது. “கல்குயின் றன்னஎன் நல்கூர்
வளிமறை”யென்பதற்குக் கல்லாற் செய்தாற்போன்ற பயன் கொள்ளாத
யாக்கையுடைய எனது நல்கூர்ந்த வளிமறை யெனவும், கல்லைத்
துளைத்தாற்போன்ற காற்றடை மாத்திரையாகச் செய்யப் பட்ட நல்கூர்ந்த
என் மனை யெனவு முரைப்பாரு முளர்.

     விளக்கம்: கொடுப்பது போலக் காட்டிக் கொடாது நீட்டித்தமை யின்,
இஃது இரப்போர் வாட்டலன்றியும், புரப்போர் புகழ் குறைபடும்
வாயிலுமாதலின், “அனைத்தாகியர்”என்றார். இதனைக் கூறும் பொருட்டே
“ஒல்லுவ தொல்லு மென்றலும்”முதலாயவற்றை யெடுத்தோதினார். என்றல்.
என்று சொல்லிக் கொடுத்தல் அத்தை, அசைநிலை. கண்டனம் எனத்
தன்மைக்கண் கூறுதலின், காணாமை தம் குடியிலுள்ளோர் வினையாயிற்று.
அதனால், எம் குடியிலுள்ளார் முன்பு காணாதது யாம் கண்டேம் என்றார்.
எனவே, இப் பாண்டியன் முன்னோரும், இதுகாறும் பரிசில் நீட்டித்தது
இல்லை யென்றாராயிற்று. குடிப் பிறப்புக்கு மாறாகச் சான்றோர் நோவன
செய்த குற்றத்தால் நின் புதல்வர் நோயுற்று வருந்துவ ரென்பார், “அதனால்
நோயிலராக நின் புதல்வர்” என்று குறிப்பு மொழியார் கூறினார்.
குறிப்புமொழியாவது, “எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்,
பொருட்புறத்ததுவே குறிப்புமொழி யென்ப”(தொல் செய். 177)
என்பதனாலறிக; இதனை எதிர்மறைக் குறிப்பென்றும், கூற்றிடை வைத்த
குறிப்பென்றும் கூறுவர். முனிவுக்குப் பொருள் வெயிலன்மையின், போக்கை
யென்பது வருவிக்கப்பட்டது. நல்குரவு கூர் வளிமறை யென வரற்பாலது,
நல்கூர் என வந்ததற்கு அமைதிகாட்டுவார், “நல்குர வென்பது நல்லெனக்
குறைந்துநின்றது”என்றார். நல், வறுமை. நீங்காது பிணித்துக்
கொண்டிருத்தலால் வறுமையை, “கல்குயின் றன்ன வறுமை’’யேன்றார்.
மனையின் மேற்கூரை வெயிலும் பனியும் மழையும் மறையா தொழியினும்,
சுவர் நின்று காற்றை மறைப்பது தோன்ற, “வளி மறை”யென்றார்,