உரை: உவவுமதி உருவின்-உவாநாளின் மதியினது வடிவு போலும் வடிவினையுடைய; ஓங்கல் வெண்குடை- உயர்ந்த வெண்கொற்றக் குடை; நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற-நிலைபெற்ற கடலெல்லைக்கண் நிலத்தை நிழற்செய்ய; ஏம முரசம் இழுமென முழங்க- காவலாகிய வீரமுரசம் இழுமெனமுழங்கும் ஓசையையுடைத்தாய் முழங்க; நேமி யுய்த்த நேஎ நெஞ்சின் -சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்; தவிரா ஈகை-ஒழியாத வண்மையினையுமுடைய; கவுரியர் மருக-பாண்டியர் மரபினுள்ளாய்; செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ-குற்றமற்ற கற்பினையுடைய சேயிழைக்குத் தலைவ; பொன் ஓடைப் புகர் அணி நுதல்-பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த மத்தகத்தினையும்; துன்னருந் திறல்-அணுகுதற் கரிய வலியையும்;கமழ்கடா அத்து-மணநாறும் மதத்தினையும்; கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்-கயிற்றாற் பிணித்தலைச் செய்த கவிழ்ந்த மணியணிந்த பக்கத்தையும்; பெருங்கை-பெருங்கையையுமுடைய; எயிறு படையாக -கொம்பு படைக்கலமாகக் கொண்டு; எயிற் கதவிடா -பகைவர் மதிலின்கட் கதவைக் குத்தி;யானை இரும்பிடர்த் தலையிருந்து-யானையினது பெரிய கழுத்திடத்தே யிருந்து; மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயா-பரிகாரமில்லாத கூற்றத்தினது பொறுத்தற்கரிய கொலைத்தொழிலுக்கு இளையாத; கருங்கை ஒள்வாள்-வலிய கையின்கண்ணே ஒள்ளிய வாளினையுடைய; பெரும்பெயர் வழுதி-; நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்-நிலம் பிறழினும் நினது ஆணையாகிய சொல் பிறழா தொழியல் வேண்டும்; பொலங் கழற்கால்- பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்த காலினையும்; புலர்சாந்தின் விலங்கு அகன்ற வியன்மார்ப-பூசிப் புலர்ந்த சந்தனத்தை யுடைத்தாகிய குறுக்ககன்ற பரந்த மார்பினையு முடையோய்; ஊர்இல்ல-ஊரில்லாதனவும்; அரிய உயவ- பொறுத்தற்கரிய உயங்குதலை யுடையனவும்; நீரில்ல- நீரில்லாதனவும்; நீள்இடைய-நீண்ட வழியனவுமாகிய; பார்வல் இருக்கை-வம்பலரை நலியச் சேய்மைக்கண்ணே பார்த்திருக்கும் இருப்பினையும்; கவி கண் நோக்கின்-கையாற் கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும்; செந்தொடை பிழையாவன்கண்-செவ்விய தொடை பிழையாத தறுகண்மையையுமுடைய; ஆடவர்-மறவர்தம்; அம்பு விட வீழ்ந்தோர்வம்பப் பதுக்கை-அம்பை விடுதலாற் பட்டோரது உடல் மூடிய புதிய கற்குவையின்மேலே; திருந்து சிறை வளைவாய்ப் பருந்து-திருந்திய சிறகினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்து; இருந்து உயவும்-இருந்து வருந்தும்; உன்ன மரத்த துன்னருங்கவலை-உன்ன மரத்தினை யுடையவாகிய அணுகுதற் |