பக்கம் எண் :

104

     
 கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்பக்
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
எரிப்பூம் பழன நெரித்துடன் வலைஞர்
அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரப்
5 பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொ
 டுறழ்வே லன்ன வொண்கயன் முகக்கும்
அகனாட் டண்ணல் புகாவே நெருநைப்
பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி
ஒருவழிப் பட்டன்று மன்னே யின்றே
10அடங்கிய கற்பி னாய்நுதன் மடந்தை
 உயர்நிலை யுலக மவன்புக வார
நீறாடு சுளகிற் சீறிட நீக்கி
அழுத லானாக் கண்ணள்
மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே.

   திணையும் துறையு மவை...தும்பைச்சொகினனார் பாடியது.

     உரை: கதிர் மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்ப - கதிர்
நுனைபோலும் மூக்கையுடைய ஆரல்மீன் சேற்றின்கீழே செருக;
கணைக்கோட்டு வாளை நீர் மீப் பிறழ - திரண்ட கோட்டையுடைய
வாளைமீன் நீர்மேலே பிறழ; எரிப்பூம் பழனம் நெரித்து - எரிபோலும்
நிறத்தவாகிய பூவையுடைய பொய்கைகளை நெருங்கி; உடன் - உடனே;
வலைஞர் - வலைஞரானவர்; அரிக்குரல் தடாரியின் யாமை மிளிர - ஒலி
நிரம்பா ஓசையையுடைய கிணையினது முகமேபோலும் யாமை பிறழ; பனை
நுகும்பன்ன சினை முதிர் வராலொடு - பனையினது நுகும்பையொத்த
சினைமுற்றிய வராலோடு; உறழ் - மாறுபடும்; வேல் அன்ன ஒண் கயல்
முகக்கும் - வேல்போன்ற ஒள்ளிய கயலை மகந்துகொள்ளும்; அகல்
நாட்டண்ணல் புகா - முன் அகன்ற நாட்டையுடைய குருசிலது உணவு;
நெருநை - நெருநலை நாளால்; பகல் இடம் கண்ணி - பகுத்த இடத்தைக்
கருதி, பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்றுமன் - பலருடனே இயைந்து
ஒருவழிப்பட்டது. அது கழிந்தது; இன்று-; அடங்கிய கற்பின் ஆய் நுதல்
மடந்தை - தன்கண்ணே யடங்கிய கற்பினையும் சிறிய நுதலினையுமுடைய
மடந்தை;   உயர்நிலை   யுலகம்   அவன   புக   வார -   உயர்ந்த
நிலைமையையுடைய விண்ணுலகத்தை அவன் சென்று புக அவனுக்கு
உணவு கொடுத்தல் வேண்டி; நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி - புழுதியாடிய
சுளகளவாகிய சிறியவிடத்தைத் துடைத்து; அழுதலானாக் கண்ணள் -
அழுதலமையாத