| | புல்லென்றனையால் வளங்கெழு திருநகர் வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. |
திணையும் துறையு மவை... தாயங்கண்ணியார் பாடியது.
உரை: குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் - தாளிப்போசை மிக்க கொழுவிய துவையோடு கூடிய அடிசில்; இரவரர்த் தடுத்த வாயில் - இரவலரைத் தன்கண்ணே தகைத்த வாயிலினையும்; புரவலர் கண்ணீர் தடுத்த தண்ணறும் பந்தர் - தன்னாற் புரக்கப்படுவோர் கண்ணீரை மாற்றிய குளிர்ந்த நறிய பந்தரினையுமுடைய மனையிடத்து; கூந்தல் கொய்து - மயிரைக் குறைத்து; குறுந்தொடி நீக்கி - குறிய வளையைக் களைந்து; அல்லி உணவின் மனைவியோடு - அல்லியரிசியாகிய உணவையுடைய மனையாளுடனே; இனி - இப்பொழுது; புல்லென்றனை - பொலிவழிந்தாய்; வளம் கெழு திருநகர் - செல்வம் பொருந்திய அழுகாகிய நகர; வான் சோறு கொண்டு - வான் சோற்றைக் கொண்டு; தீம்பால் வேண்டும் - இனியபாலை வேண்டும்; முனித்தலைப் புதல்வர் தந்தை - வெறுப்பைத் தம்மிடத்தேயுடைய புதல்வர் தந்தை; தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின் - தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தபின்; எ - று.
கொய்து நீக்கி என்னும் வினையெச்சங்களை உணவினையுடைய வென்னும் குறிப்புவினையோடு முடிக்க. நகரே, நீ புதல்வர் தந்தை காடு முன்னியபின் புல்லென்றனை யெனக் கூட்டுக. முனித்தலை, குடிமித்தலை யெனினு மமையும்.
விளக்கம்: தன்கண் வந்த இரவலர்க்கு வேண்டும் உணவை நிரம்ப நல்கி அவரை மீளத் தம் மனையை நோக்கித் திரும்பிப் போகாத வாறு தன்கண்ணே இருத்தற்குரிய விருப்பத்தை யுண்டு பண்ணுதலின், இரவலர்த் தடுத்த வாயில் என்றார். அல்லற்பட்டு ஆற்றாது அழுது கொண்டு வருவோர்க்கு அல்லலைப்போக்கி அவர் கண்ணீர் விட்டுக் கலுழாமல் ஊக்குதல் பற்றி, புரவலர் கண்ணீர்த் தடுத்த பந்தர் என்றார். புரவலர் என்றது, புரக்கப்படுவோர்மேல் நின்றது. திருநகர் என்றது அண்மை விளி. வான்சோறு, வெள்ளிய சோறு. புதல்வர் தந்தை, புதல்வர்க்குத் தந்தை. உணவின் மனைவி யென்றதை உணவினையுடைய மனைவியென விரித்து, விரிந்த உடைய வென்னும் குறிப்புவினையோடு, கொய்து, நீக்கியென்னும் வினையெச்சங்களை முடிக்க என்று கூறுகின்றார் உரைகாரர். |