| கந்தாரம் - முற்ற விளைந்த இனிய மதுவையுடைய கந்தாரமென்னும் பெயரையுடைய வேற்றுப்புலத்து; நிறுத்த ஆயம்தலைச்சென்று உண்டு - தான் கொண்டுவந்து நிறுத்தின நிரையைக்கள் விலைக்கு நேராகக் கொடுத்து உண்டு; பச்சூன்தின்று - செவ்வித் தசையைச் தின்று; பைந்நிணம் பெருத்த - செவ்விநிணமிக்க; எச்சில் ஈர்ங்கை வில்புறம் திமிரி - எச்சிலாகிய ஈரமுடைய கையை வில்லினது புறத்தே திமிர்ந்து; புலம் புக்கனன் புல்லணல் காளை - வேற்று நாட்டின்கண்புக்கான் புல்லிய தாடியையுடைய காளை; ஒருமுறை உண்ணா அளவை - இவ்விருந்த மறவர் ஒருகால் உண்பதன் முன்னே; பெருநிரை ஊர்ப்புறம்நிறையத் தருகுவன் - பெரிய ஆனிரையை இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக் கொடு தருகுவன்; யார்க்கும் தொடுதல்ஒம்புமதி - யாவர்க்கும் வாராது அதற்பொருட்டுத் தொடுதலைப் பாதுகாத்து வைப்பாயாக; முதுகள் சாடி முதிர்ந்த மதுவையுடைய சாடியை; ஆ தரக் கழுமிய துகளன் ஆவைக் கொண்டு வரக் கலந்த தூளியை யுடையனாய்; அக் கள்வெய்யோன் - அம்மதுவை விரும்புவோன்; காய்தலும் உண்டு விடாய்த்தலும் உண்டாம்; எ - று.
தலைச் சென்றென்பது தலைச் செலவெனத் திரிக்கப்பட்டது. கள் விலையாட்டியிடத்தே செல்ல வென்றுமாம். தீங்கட்டாரம் என்றோதிக் கள்ளாகிய இனிய பண்டமெனினுமமையும். காய்தலும் உண்டு என்பதற்குக்கள் வெய்யோனாதலின் நின்னைவெகுளவுங்கூடு மென்பாருமுளர்.
இவன் நிரை கொள்ளச் செல்கின்றமை கண்டார்கள் விலையாட்டிக்குக் கூறியது.
விளக்கம்:காரையென்பது முட்செடி; அதனால் அதனை முட்கால் காரை யென்றார். தெறித்தல் - முற்றவும் புளித்தல். தன் என்பது தேம் என வந்தது. கந்தாரம் என்பது காவிரிக்கரையைச் சார்ந்த ஓர் ஊர். இவ்வூரினைத் தலைமையாகக்கொண்ட சிறு நாடும் இருந்தது; இதனை நித்தா வினோதவளநாட்டுக் கந்தார நாடு (M. E. R. 1936-37 : NO.31:) எனக்கல்வெட்டுக் கூறுவது காண்க.கவர்ந்து போந்த நிரைகளைக் கொண்டோர் அவற்றைக் தாமுண்ணும் கள்ளுக்கு விலையாகமாறுவது வழக்காதலால், நிறுத்த ஆயத் தலைச் சென்றுண்டு என்றார். பிறரும், அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும் செங்கட், செருச்சிலையாமன்னர் செருமுனையிற் சீற, வரிச்சிலையாற் றந்த வளம்(பு.வெ.மா. 19) என்பது காண்க. காளை புக்கனன் என்றபின், ஒருமுறை யுண்ணாவளவை யெனவே, உண்பவர், புலத்துக்குச்செல்லாது கள்ளுண்டற் கிருந்த மறவரென்பது பெறப்படுதலால், இவ்விருந்த மறவர் என்பது வருவிக்கப்பட்டது. உண்ணா வளவையென்றது, நிரைகோட் கடுமையுணர நின்றது. யாவர்க்கும் வாராது - எல்லார்க்கும் பெய்து கொடுக்காமல். கள்விற்போர்பால் செல்ல ஆநிரைகளை விற்றுவிடுதலின், தலைச்செல்ல எனத் திரிக்கப்பட்ட தென்றார். காய்தலும் என்புழியும்மை,எதிர்மறை. |