| அம்பியின் என்புழி இன் அசைநிலை. அம்பியின் அற்றாக என்று பாடமோதுவாருமுளர். கண்: அசை. மன்: கழிவின்கண் வந்தது. எந்தை பேரில்லே! செதுக்கணாராப் பயந்தனை முன்; இனி, மகடூஉப் போலப் பல அணியும் இழந்து புல்லென்றனையாய் அம்பியற்றாகக் கண்டேன்;கண்ட என்கண் சோர்க எனக்கூட்டுக. ஓசை யென்றது ஆகுபெயரான் ஓசையையுடைய கறியை; இஃது ஒரு திசைச்சொல். செதுக்கணார வென்பதற்குச் செதுக்கின குடர் நிறைய என்றுமாம்; கைம்மிஞ்ச என்றுமாம்.
விளக்கம்: பொலிவிழந்த மனையைக் கண்டதும் மனம் கலங்கி வருந்துகின்றாராதலின், அந்தோ! எந்தை அடையாப் பேரில் என்றார். வரையாத வண்மையுடையன் என்பது தோன்ற, அடையாப் பேரில் எனப்பட்டது. நறவுண்ணும் கலம் மண்டை; நறவு குறையாமையால் மண்டையும்ஒழியாதாயிற்று. முரிவாய் முற்றம் என்பதில் வாயென்றது குறடு; அது பலரும்சார்தலால் தேய்ந்து முரிந்து கொண்டு முரிவாய் முற்றம் எனப்பட்டது. நீர்வற்றிய யாற்றில் ஓடம் பயன் படாமையால் அதனை நாடுவார் இலர்; அவ்வாறே பேரில்லமும் மக்கள் வழக்கற்றமையின், பொலிவற்றுக் கிடக்கின்றது என்பதாம். இத்தகைய நிலை எய்துமென எக்காலத்தும் எதிர்பார்த் திலராதலால், எய்தக்கண்ட ஆசிரியர் பிறரறிய வற்புறுத்துவாராய்கண்டனென் மன்ற என்றும் பெருஞ் செல்வ நிலையிற் கண்ட கண்கள்,அவ்வண்ணமே காணாது இந்நிலையிற் காண்டலின் வருந்துவார்,சோர்கவென் கண்ணே என்றும் கூறினார். காரியாதி குறுநிலத் தலைவனாதலால், முடிவேந்தர் மனையை ஒப்பாக நினைக்கின்றார்.முடிவேந்தர் பெருமனை முன்றிலில் மதங்கொண்ட யானைகள் நின்று நெட்டுயிர்ப்புக் கொள்வதால் எழும் ஓசைபோல, இத்தலைமகன் பேரில்லத்தின்முன்றிலில் நெய்யுலை சொரிந்த மையூனோசை எழுந்தது. இது முன்பு வந்ததோது ஆசிரியர் கண்டகாட்சி. புதுவோர் புதுமை காரணமாகப் பிறந்த மருட்கை கொண்டு அதனை நோக்கினாராதலால், செதுக்கண் ஆர என்றார். செதுக்கண், ஒளி மழுங்கின கண். புதுக் கண் என்ற விடத்துக் கண்ணென்பது அசைநிலை; அதனால் புதுக்கண் மாக்கள் என்றதற்குப் புது மாந்தர் என உரை கூறப்பட்டது. ஒசையென்றே வழங்குகின்றனரென்பார், இஃதொரு திசைச் சொல் என்று உரைகாரர் குறிக்கின்றார். கல்லா வல்வில் என்றவிடத்து வில்லென்றது வில்லேந்திய வீரர்களை. அவர்க்ள வழிவழியாக வில்லேருழவராயிருந்ததலால், குலவிச்சை கல்லாமற் பாகம்படும் என்பதற்கேற்ப அவர் தனியே கற்க வேண்டாராயின ரென்பார், கல்லா வல்வில் என்றார். வல்வில் ஆட்டியென இயையும். ஆட்டுதல், அலைத்தல்; ஒருவனாட்டும் புல்வாய்போல (புறம். 193) என்பதன் உரை காண்க. வில் வீரரையலைத்தலால் கூகை முதலியன வேண்டும் இரை கிடைப்பதுகண்டு தம் இனத்தை யழைப்பவாயின என்பதுபட, உழைக்குரற் கூகை யழைப்ப ஆட்டி என இயைய வுரைத்தார். பெருங்குரலுடைமைபற்றி, உழைக் குரல் என்றார். நாகினது முலை எழுந்து காட்டாது மேலே பரந்து காட்டுவது போலக் கரந்தைப்பூவும் கொடியினின்றும் எழுந்து நில்லாது அதனோடே படிந்து விரிந்து காட்டுவது கண்கூடு. இதுபற்றியே நாகு முலைன்ன நறும்பூங் கரந்தை யென்றார். |