பக்கம் எண் :

14

     
 முற்றிய திருவின் மூவ ராயினும்
பெட்பின் நீதல் யாம்வேண் டலமே
விறற்சினந் தணிந்த விரைபரிப் புரவு
உறுவர் செல்சார் வாகிச் செறுவர்
5தாளுளந் தபுத்த வாண்மிகு தானை
 வெள்வீ வேலிக் கோடைப் பொருந
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக
10ஆர்கலி யாணர்த் தரீ இய காலிவீழ்த்துக்
 கடல்வயிற் குழீ இய வண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா வாங்குத் தேரொ
டொளிறுமருப் பேந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே.

   திணையும் துறையு மவை. கடியநெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்
தானைப் பெருந்தலைச் சாத்தனால் பாடியது.


    உரை: முற்றிய திருவின் மூவராயினும் - நிறைந்த செல்வத்தையுடைய
மூவேந்தராயினும்;  பெட்பு  இன்று  ஈதல்யாம் வேண்டலம் - எம்மைப்
பேணுதலின்றியீ  தலையாங்கள்   விரும்பேம்;  விறல் சினம் தணிந்த -
வென்றியான் உளதாகியசினம்  தீர்ந்த; விரைபரிப் புரவி - விரைந்த
செலவையுடைத்தாகிய குதிரையையுடைய; உறுவர் செல் சார்வாகி - அஞ்சி
வந்து அடைந்த பகைவர்க்குச் செல்லும் புகலிடமாய்; செறுவர் தாள் உளம்
தபுத்த - அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவருடைய முயற்சியையுடைய
கிளர்ந்த உள்ளத்தைக் கெடுத்த; வாள் மிகுதானை - வாட்போரின் மிக்க
படையினையுடைய; வெள்வீவேலிக் கோடைப் பொருந - வெள்ளிய
பூவையுடைத்தாகிய  முல்லை வேலியையுடைய கோடை யென்னும்
மலைக்குத் தலைவ; சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய -
சிறியனவும்  பெரியனவுமாகிய  புழைகளைப்  போக்கற விலக்கிய;
மான்கணம்  தொலைச்சிய- மானினது  திரட்சியைத் தொலைத்த;
கடுவிசைக் கதநாய் நோன் சிலை வேட்டுவ - கடிய செலவையுடைய 
சினமிக்க   நாயையும் வலிய வில்லையுமுடைய வேட்டுவ; நோயிலையாகுக
- நீ நோயின்றி யிருப்பாயாக; ஆர்கலியாணர்த் தரீ இய - இடியினது
மிக்க ஓசையையுடைய புதுப்பெயலைத் தரவேண்டி; கால் வீழ்த்துக்
கடல்வயின் குழீஇய - கால்வீழ்த்துக் கடலிடத்தே திரண்ட; அண்ணலங்
கொண்மூ தலைமையையுடைய முகில்; நீரினின்று பெயரா ஆங்கு
- நீரின்றி  மீளாதவாறுபோல;  பரிசிலர் கடும்பு   -    பரிசிலரது
சுற்றம்; தேரொடு ஒளிறு மருப்பு ஏந்திய செம்மேல் களிறு இன்று பெயரல
தேருடன் விளங்கிய கோடுயர்ந்த தலைமையையுடைய களிற்றையின்றி
மீளா; எ - று.