| | நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல் இரங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறா அன் மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த | 5 | குடப்பாற் சில்லுறை போலப் | | படைக்குநோ யெல்லாந் தானா யினனே. |
திணை: அது. துறை: தானை நிலை. மதுரைப் பூதனிளநாகனார் பாடியது.
உரை: நறு விரை துறந்த நரைவெண் கூந்தல் - நறிய விரைப்பொருள்களைத் துறந்த நரைத்த வெளிய கூந்தலையும்; இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலை - இரவமரத்தின் விதை போலத் திரங்கிய கண்ணையுடைய வற்றிய முலையையுமுடைய; செம்முது பெண்டின் காதலம் சிறாஅன் - செம்மைப்பண்பு பொருந்திய முதியவளுடைய அன்புடைய மகன்;மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர் - இளமைப் பான்மையையுடைய ஆய்க்குல மகளுடைய வளவிய உகிரினால்; குடப்பால் தெறித்த சில்லுறை போல - குடம் நிறையவைத்த பாலின்கண் தெளித்த சிவவாகிய பிரை அக்குடவளவிற்றான பால் முற்றும் கலங்கிக் கெடுதற்குக் காரண மானாற்போல; படைக்கு நோயெல்லாம் தானாயினன் - பேரளவினதாகிய பகைவர் படைத்திரள் உடைந்து கெடுதற்குரிய நோய் முழுதுக்கும் தான் ஒருவனே காரணனாயினான்;எ - று.
முதுபெண்டின் முதுமையைச் சிறப்பித்தற்குத் தலைமயிர் முதலியன எடுத்துரைத்தார். செம்மைப்பண்பு கூறியது, மாற்றார் படைக்குண்டாய நோய் முழுதுக்கும் அவள் வயிற்றிற் பிறந்த காதல் மகனது மறமாண்பு காரணமென்பது விளக்குதற்கு. மடமையுடைய ஆய்மகள் என்றமையின் அதற்கேற்ப வள்ளுகிரால் தெறித்தாள் என்றார். முது பெண்டின் சிறாஅன் சில்லுறைபோலத் தானாயினன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: ஒப்பனை செய்துகோடற்குரிய செவ்வி கழிந்தமை தோன்ற, நறுவிரை துறந்த என்றும், இளமை கழிந்தமை தோன்ற, நரைவெண் கூந்த லென்றும் விளக்கினார். இரங்காழ், இராவென்னும் மரத்தின் விதை. மறப்பண்புகுன்றாமை விளங்க, செம்முது பெண்டுஎன்றார்.பால்,பருவம், மடம், இளமை. மடவளம்ம நீ இனிக் கொண்டோளே (ஐங். 67) என்றாற்போல. மடப்பால், இளமைச்செவ்வி. குடவளவிற்றாய பாலில் அளவறிந்திட்ட பிரை அதனை யுறையப் பண்ணும்; அதனிற் குறையின், பால் தன் தன்மை கெட்டுத் தயிராய் உறைதலுமின்றிக் கலங்கித் தோன்றுமாதலின், அக்கருத்து விளங்க, ஆய்மகள் வள்ளுகிர்த்தெறித்த குடப்பால் சில்லுறை யென்றார். தும்பைத் தானைநிலையாவது, இருபடையும் மறம்பழிச்சப் பொரு களத்துப் பொலிவெய்தின்று (பு. வெ. மா. 7:22) என்பர். இதனைத் தொல்காப்பியவுரைகாரர்கள் |