| இறுத்தற்கரிய கடன்களை முற்றவும் ஆற்றினமையின், பெருஞ் செயாளன் என்றார். செய் என்னும் முதலிலைத் தொழிற்பெயர் அரிய வினை குறித்து நின்றது. தாங்கிய என்னும் வினையெச்சம் கிளரகலமென இயையும் வினைத்தொகையது வினையொடு முடிந்தது. கிளர் தாரென வியைத்து வண்டு கிளரும் மாலையென வுரைப்பினுமமையும்; அவ்வழி, தாங்கிய அகலம் என இயையும். கிளரகல மென்றவழித் தார் இடை நிலை. இம் மறவன் தன்னோடு ஒத்த மறவரோடே பொருது வீழ்ந்தான் என்பார், அருங்கடன் இறுமார் வயவர் எறிய என்றார். கட்புலனாகத் தோன்றும் உடம்பும் தோன்றாத உயிரும் கெட்டன என உடம்பையும் உயிரையும் பிரித்தோதினார். இருத்தற்குரிய இடங் காட்டலாகாமை விளக்குதற்கு கெட்டன்றென்பதை உடம்புக்கும் கூட்டுக. இனி உடம்பும் தோன்றாதெனக் கொண்டு தோன்றதென்பது ஈறு தொக்கதென்றுரைப்பினுமமையும். அலகை, காப்பாகும் அளவு. வாயென்ற ஆகு பெயரால் அதனால் உரைக்கப்படும் செய்யுள் மேலாதாயிற்று. பெருஞ் செயாளனை வினவுதி: ஆயின் அவன் உடம்பும் உயிரும் கெட்டன; பலகையல்லது ஒழியாது; அவன் புலவர் வாயுளான் என வினைமுடிபு செய்க.
விளக்கம்: எஃகு, வேலும் வாளும் குறித்துநின்றது; இது முதலாகு பெயர்.அருங்கடன் என்றது, ஏனைப் பாண்கடன், புரவுக் கடன் முதலியன போலாது போரிற் பகைவரை வஞ்சியாது பொருந் தொழில்;இது படைக்கடன் (புறத். 1279). செஞ்சோற்று நிலை (புறம். 1354) எனவும் கூறப்படும். இது பெருஞ்செயலாகப் பேணப்படுவதுபற்றி, இதற்குரிய மறவரைப் பெருஞ்செயாளரென்றும்,பெருஞ் செயாடவர் (புறத். 199)என்றும் சான்றோர் சிறப்பிப்பர். செய்கையென்னும் வினைப்பெயரின் செய்யென்னும் முதலிலை மட்டும் நின்று பெயராய் வினையை யுணர்த்துதலால், இது முதலிலைத் தொழிற்பெயரெனப்படுவதாயிற்று. தோன்றாவுயிரெனவே, உடம்பு தோன்றும் என்பது வருவிக்கப்பட்டது. உயிர்க்குக் கேடு கூறியது, உடம்பின்கண் நில்லாது நீங்கிய நீக்கம் குறித்து நின்றது. புலவர் வாயுளான் என்றமையின், கேடு உடம்பிற்கும், நீக்கப் பொருண்மை உயிர்க்கும் கொள்க. மாறு எதிர் கழறிய என்பது பாடமாயின்,எதிர் மாறு கழறிய என இயைத்து எதிர்மாற்றம் கழறிக் கூறிய என்று உரைக்க. சேண்விளங்கு நல்லிசை, நாடிடையிட்டும் காலமிடையிட்டும் சென்று நிற்றல்பற்றிச் சேண்விளங்கு நல்லிசை யென்றார். சேண் என்றதற்குத் துறக்கவுல கென வுரைத்து, புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவனேவா வான வூர்தி, யெய்துப வென்பதஞ் செய்வினைமுடித் (புறம். 27) தென்பதைக் காட்டுவாருமுளர். 283. அண்டர்நடுங்கல்லினார்
கரந்தைப் போருடற்றி மேம்பட்ட வீரனொருவனைக் கல் நாட்டி ஆயர் சிறப்புச் செய்ய, அதனை அண்டர் நடுங் கல்லெனப் பாராட்டிப் பாடியதனால், இவர் அண்டர் நடுங்கல்லினார் எனப்படுகின்றார். இவர் பெயர் அடைநெடுங்கல்லியாரென்னும் காணப்படுகிறது. அடைநெடுங் கல்வியாரென்றோதி, இவர் ஒருவரையடுத்து அரிதிற் பெறுதற்குரிய கல்வியை எளிதில்பெற்று நெடிதுடையார் என்று பொருள் கூறவும் படுகிறது. இவரைப் பற்றித் தெரிந்துகோடற்குரிய குறிப்புகள் கிடைத்தில. |