பக்கம் எண் :

183

     

ஆனிரைகள் மீட்கப்பட்டு ஊர் நோக்கிச் செல்லத் தொடங்கின; அங்கே
அந்நிலையில்; பகைவர் எறிந்த வேலொன்று தலைவன் மார்பையுருவிச்
சென்றது. அவனும் வீழ்ந்து மாண்டான். பிணங்களைச் சூழ்ந்துகொண்டிருந்த
பருந்து முதலிய புள்ளினங்கள் அவன் பிணத்தையும் சூழ்ந்து
ஆரவாரித்தன. இதற்குள் செய்தியறிந்த அவன் மனையோள் அவன்
வீழ்ந்த இடம் நாடி வந்தாள். அங்கே போருடற்றி வெற்றிபெற்ற வீரர்
பலரும். ஆனிரைகள் பின் வந்தனர். போர் நிகழ்ந்தவிடத்தே துடியரும்
பாண்மக்களும் பிறரும் இருந்தனர். காட்டில் குறுநரிகள் ஊளையிட்டன.
அக் காட்சியைக் கண்டவள், துடியர் முதலாயினாரை யழைத்து “இப்
புள்ளினங்கள் சூழ்ந்து செய்யும் ஆரவாரத்தை நீக்குமின்; யான் விளரிப்
பண்ணைப் பாடிக்கொண்டு சென்று குறுநரிகள் நெருங்காவாறு ஓட்டி
வருகிறேன்” என்று சொல்லி நரிகளை வெருட்டிவிட்டுத் தலைவன்
பிணத்தருகே வந்தாள். அவன் புண்பட்ட மார்பில்வேந்தன் அணிந்த
பன்மணி கலந்த பல் வட மாலையைக் கண்டாள்.வேந்தன்சிறப்புச்
செய்யினும் செய்யா தொழியினும் பயன் நோக்காதே வெறிதேயும்
வேந்தன் பொருட்டுச் சாதலை விரும்புவோன் என் தலைவன்;இப்
பெற்றியோனுக்குக்  காதலால் தன்  மாலையை யணிந்து இவன்
மாலையைத்  தான்  அணிந்து  கொண்டான் வேந்தன்;  என்போல்
வேந்தனும் இவன்பால் காதலுடையனாதலால், யான்  இவனைப் பிரிந்து
ஆற்றாது பெருநடுக்கம்  கொள்வது  போலத்  தானும் பெருவிதுப்பு
எய்துவானாக என வாய்விட்டரற்றினாள். இதனை யறிந்த நெடுங்களத்துப்

பரணர் இந்த இனிய பாட்டின்கண் அவள் கூற்றைப் பொருளாகத்
தொடுத்துப் பாடியுள்ளார்.

 சிறாஅஅர் துடியர் பாடுவன் மகாஅஅர்
தூவெள் ளறுவை மாயோற் குறுகி
இரும்புட் பூச லோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
5 என்போற் பெருவிதுப் புறுக வேந்தே
 கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை
மணிமருண் மாலை சூட்டி யவன்றலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.

     திணை: அது; துறை: வேத்தியல். நெடுங்களத்துப்பரணர்
பாடியது.

     உரை: சிறா   அஅர் - சிறுவர்களே;   துடியர் - துடிப்பறை
கொட்டுபவர்களே; பாடுவல் மகா அஅர் - பாடுதல்வல்ல பாணர் மக்களே;
தூவெள் அறுவை மாயோன் குறுகி - தூய வெள்ளிய ஆடையையுடைய
கரியவனை யணுகி; இரும்புள் பூசல் ஓம்புமின் - கரிய பறவைகள் சூழ்ந்து
செய்யும் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; யானும் விளரிக் கொட்பின்
வெண்ணரிகடிகுவென் - யானும் விளரிப் பண்ணைச் சுழற்சியுறப் பாடித்
தின்னவரும் குறுநரிகளை யோட்டுவேன்; என்போல் வேந்து
பெருவிதுப்புறுக- என்னைப் போல வேந்தனும் பெரிய நடுக்கத்தை
எய்துவானாக; கொன்னும் சாதல் வெய்யோற்கு - வேந்தன்பொருட்டு