| | வாடுமுலை யூறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. |
திணை: அது. துறை: உவகைக் கலுழ்ச்சி. ஒளவையார் பாடியது.
உரை:கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண் - கடல் கிளர்ந்தாற் போன்ற பாசறையொடு கூடிய போர்க்களத்தின் நடுவில்; வெந்து வாய் வடித்த வேல் தலைப்பெயரி - நெருப்பில் வேகவைத்து வாயைக் கூரிதாகத் தீட்டிய வேலைப் பகைவர்பால் திருப்பி; தோடு உகைத்து எழுதரூஉ - மறவர் தொகுதியை முற்படச் செலுத்தித் தானும் முற்பட வெழுந்து சென்று; துரந்தெறி ஞாட்பின் - அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில்; வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி - மேல்வரும் பகைவர் படையைப் பிளந்து தானும் துணைவரும் நின்று பொருதற்கு வேண்டும் இட முண்டாகக் குறுக்கிட்டுத் தடுத்து; இடைப்படை யழுவத்து - படைத்திரளின் இடை நடுவில் உண்டாகிய களத்தில்; சிதைந்து வேறாகிய சிறப்புடையாளன் மாண்பு கண்டு-வெட்டுண்டு துணி துணியாய் வேறு பட்டுக்கிடந்த சிறப்புடையாளனாகிய தன் மகனுடைய மற மாண்பைக் கண்டு; அருளி - அன்பு மிகுந்து; வாடு முலை யூறிச் சுரந்தன - வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன; ஓடாப் பூட்கை விடலை தாய்க்கு - பின்னிடாத கொள்கையினையுடைய காளைக்குத் தாயாகிய இவளுக்கு; எ - று.
வீரர் தொகுதியைத் தன்னோடே முன்வரச் செலுத்துதலின், தானைத் தலைவன் என்பது விளங்கின்று. துரந்தெனவே, அம்பும் வேலும் கொள்ளப்பட்டன. துரத்தற்கமைந்தன அவையாகலின். பகைவரும் வெள்ளம்போல் அணியணியாய் வருதல் தோன்ற வருபடைபோழ்ந்து என்றார். வாய்ப்படை விலங்கி யென்று பாடமாயின், பகைவரிடையே தப்பாத படைகொண்டு குறுக்கிட்டு நின்றெனவுரைத்தலுமொன்று. இடைப்படை யழுவம் புகுந்து போருடற்றுவது சிறப்புடையாளர் செயலாதலின், சிறப்புடையாளன் என்றார். ஈன்ற ஞான்றைய அன்பிலும் மாண்பு கண்டவழிப் பிறந்த அன்பு மீதூர்ந்தமை தோன்ற, அருளி யென்றார். முலையூறிச் சுரந்தன என்புழி இடத்து நிகழ் பொருளின் வினை இடத்தின் மேனின்றது. தலைப்பெயரி, உகைத்து, எழுதரூஉ, போழ்ந்து, விலங்கி, சிதைந்து வேறாகிய என இயையும்; கண்டு, அரளி, தாய்க்கு, ஊறிச் சுரந்தன என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: போர்மேற் செல்லுந் தானை தங்குதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பாசறை, கட்டூர் எனப்பட்டது. அணியணியாய்த் தங்கும் தானைநிலை தெருப்போலக் காட்சியளித்தலின், ஊரெனப்பட்டது. பின்னர் இவ்விடமே ஊராக மாறியதுமுண்டென அறிக; தொண்டை நாட்டூர்களுள் பெருங்கட்டூர் என்றோர் ஊருமுண்டு. கட்டூர் நாப்பண் வெந்து வாய் வடித்த வேல் பெயரி என்பதனால், கட்டூரிடையே கொல்லருலைக்கள மிருந்து, போரிடை மடியும் வேலும் வாளும் செம்மை செய்தலும் வடித்தலும் செய்துகொண்டிருக்குமென்து துணியப்படும். |