| மக்கள் இடையறாது அச்சமின்றி வழங்குதற் கேதுவாகிய காவலமைந்த நாடென்பார் அத்தம் நண்ணிய நாடு என்றும், இத்துணைக் காவற் சிறப்புடையவன் பெருஞ்செல்வமுடையனல்லன் என்றற்கு கைப்பொருள் யாதும் இலன் என்றும், அதனால் இரவலரக்கு இலனென்னும் எவ்வம் உரையாத அவர் வேண்டும் களிறு தேர் முதலிய களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன் என்றும். கூறினார். இவன் கருதும் புகழ், போருடற்றிப் பொருளீட்டியும் ஈத்தும் பெறற்குரித்தாயினும், அதனாற் சலிப்புறாத திண்மை அவன்பால் உண்டென்றற்கு, கழிமுரி குன்றத்தற்றாய் எள்ளமைவின் றென்றார். பெருவிறல், இலன், எனினும் கடவன், உள்ளிய பொருள் குன்றத்தற்றாய் எள்ளமை வின்றென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: வல்லாண்முல்லையாவது, இல்லும் பதியும் இயல்புங் கூறி, நல்லாண்மையை நலமிகுத்தன்று (பு, வெ. மா, 8:23) என வரும். வெறியறி சிறப்பின் (தொல். புறத். 5) என்ற சூத்ரித்து சீரசால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல் என்றதற்கு வேந்தர்க்கு உரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவற்குரியவாக அவன்றன் படையாளரும் பிறரும் கூறுதல் என்றுரைத்து, இப் பாட்டை யெடுத்துக் காட்டி, இது படையாளர் கூற்று. இதற்கு முடியுடை வேந்தன் சிறப்பெடுத்துரைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகாதென்றுணர்க என்று கூறுவர். நன்னீர் உளதாயவிடத்துச் செல்லும் வழி பலவாதல் போலப் பயன்படும் செல்வம் நிறைந்த செல்வமுறையும் நாட்டிற்குச் செல்லும் வழி பலவாமாதலால், அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் என்றார; உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும் (புறம். 204) என்று சான்றோர் கூறுவது காண்க. ஆண்மைவாயிலாகப் பெறும் பொருளத்தனையும் ஓம்பர் தீயும் உயர்ந்த கொடையுடையன் என்பது விளங்க, கைப்பொருள் யாதொன்று மிலனே யென்றும் இரவலர் வருங்கால் கைப்பொருளில்லை யாயினும், வாடாத ஆண்மையுளதாகலின், பகைவருடைய களிறுகளையும் தேர்களையும் தான்கொண்டதாகத் துணிந்த வழங்கும் சிறப்புடையவன் என்றற்கு, களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன் என்றும் கூறினார். ஒன்னாராரெயிலவர் சுட்டாகவும் நுமதெனப், பாண்கட னிறுக்கும் வள்ளியோய் (புறம். 203) என்று பிறரும் கூறுவது காண்க. கழிமுரி குன்றம், கழி சூழ்ந்த குன்றம். உமணர்க்குரிய செல்வ வருவாயாகிய கழி சூழ்ந்த குன்றம் உப்பு விளையும் நிலத்தே யுளதாயினும் சலியாமையால் சிறப்புறுவது போல, பொருளின்மையாகிய நிலையிலிருந்தே வள்ளன்மை குன்றாத மனமாண்பால், எள்ளற்பாடெய்தாமை தோன்ற, எள்ளமை வின்று என்றார். |