பக்கம் எண் :

381

     
 தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாளோட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
 5. நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற்
 புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென்
அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி
எஞ்சா மரபின வஞ்சி பாட
 10.எமக்கென வகுத்த வல்ல மிகப்பல
 மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்
டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
 15.செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
 அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெற லிராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
 20.நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
 செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்
கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை யெய்தி
அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே.

     திணை: அது. துறை: இயன்மொழி: சோழன் செருப்பாழி யெறிந்த
இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.


     உரை: தென்பரதவர் மிடல்சாய - தென்னாட்டிற் புகுந்து குறும்பு
செய்த பரதவருடைய வலிகெட்டொடுங்க; வடவடுகர் வாள் ஒட்டிய -
வடநாட்டினின்றும் போந்து குறும்பு செய்த வடுகரது வாட்படையைக்
கெடுத்தழித்த; தொடையமை கண்ணி - நன்கு தொடுக்கப்பட்டமைந்த
கண்ணியையும்; திருந்துவேல் தடக்கை - திருந்திய வேலேந்திய பெரிய
கையையும்; கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் - கடுகிச் செல்லும்
குதிரையைச் செலுத்தற்கென்று காலில் இடப்பெற்ற பரிவடிம் பென்னும்
காலணியையும்; நற்றார்க் கள்ளின் - நல்ல தாரினையும் கள்ளினையுமுடைய;
சோழன் கோயில் - சோழவேந்தனுடைய