பக்கம் எண் :

41

     

நட்புத் திரிந்து என்னை இகழும் சிறுமை அவர்பால் கிடையாது;
இனிமை நிறைந்த குணங்களையுடையர்; உயிரின் நீங்காது பிணிப்புற்ற
நண்புடையர்; பொய்யாமை புகழ்தருவதாகையால், புகழைக் கெடுக்கும்
பொய்ம்மையை விரும்புவது இலர்; தனது பெயரைச் சொல்லவேண்டு
மிடத்து, என்னின் வேறன்மை விளங்க என் பெயரைத் தன் பெயராக
“என் பெயர் கோப்பெருஞ் சோழன்” என்று சொல்லுவர்; இக்காலத்தே
இப்பொழுது வாரா தொழியார்; அவர்க்கு ஓர் இடம் ஒழித்து வைப்பீராக”
என்று கூறினான். அக்கூற்று இப்பாட்டேயாகும்.

 கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும்
காண்ட லில்லா திணாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமைய ராகினும்
அரிதே தோன்ற லதற்பட வொழுகலென்
5றையங் கொள்ளன்மி னாரறிவாளீர்
 இகழ்வில னினிய னியாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த
10காதற் கிழமையு முடைய னதன்றலை
 இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே.

   திணையும் துறையு மவை. அவன் வடக்கிருந்தான் பிசிராந்தையார்க்கு
இடனொழிக்க வென்றது.


    உரை: கேட்டல் மாத்திரையல்லது - நின்னையவன் கேட்டிருக்கும்
அளவல்லது; யாவதும் காண்டல் இல்லாது - சிறிது பொழுதும் காண்டல்
கூடாது; யாண்டு பல கழிய - பல யாண்டு செல்ல; வழுவின்று பழகிய
கிழமையராகினும்-தவறின்றாக மருவிப்போந்த உரிமையையுடையோராயினும்;
அரிது - அரிதே; தோன்றல் - தலைவ; அதற்பட ஒழுகல் - அவ்வழுவாத
கூற்றிலேபட ஒழுகுதல்; என்று ஐயங்கொள்ளன்மின் - என்று கருதி
ஐயப்படா தொழிமின்; ஆர் அறிவாளீர் - நிறைந்த அறிவினையுடையீர்;
இகழ்விலன் - அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய; இனியன் -
இனிய குணங்களையுடையன்; யாத்த நண்பினன் - பிணித்த
நட்பினையுடையன்; புகழ்கெடவரூஉம் பொய் வேண்டலன் - புகழ் அழிய
வரூஉம் பொய்ம்மையை விரும்பான்; தன் பெயர் கிளக்குங்காலை - தனது
பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது; என்பெயர் பேதைச் சோழன்
என்னும் - என்னுடைய பெயர் பேதைமையுடைய சோழனென்று எனது
பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும்; சிறந்த காதற்கிழமையும்
உடையன் - மிக்க அன்புபட்ட
உரிமையையுமுடையன்;