| வேறுபடுத்தறியவேண்டுவனவாம். சேரநாடு கேரள நாடாய்ச் செந்தமிழ் மொழியும் நாட்டு மக்களுடைய பண்பாடுகள் பலவும் திரிந்து வேறுபட்ட இடைக்காலத்துச் சேரநாட்டு வஞ்சியும் தண்பொருநையும் பெயருருத் தெரியாது மறைந்தன. இடைக் காலத்தறிஞர் கருவூரையே சேரநாட்டு வஞ்சியாமெனப் பிறழ வுணர்ந்தனர். இதுபற்றிய ஆராய்ச்சிக் குறிப்பைப் புறநானூற்றுச் சொற்பொழிவுகள் என்ற நூலிற் (பக். 34-5) காண்க.
விளக்கம்: செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடைவழங்கும் தலைவன் பலர்க்குத் தலைவன் என்பதும், அவனைக் கிணைப்பொருநன் பாடிச் சென்றபோது அவன் பொருநனது சிறுமை நோக்காது இனிது வரவேற்றதும், கொடைபல புரிந்ததும் அவனது ஒளியின் சிறப்பும் கூறிப்பொருநை மணலினும், நெல்லினும் பல வூழி வாழியென்பதும் பாலி ஆதனார் இப்பாட்டின்கட் கூறுவனவாகும். இவற்றுள் முற்றத்தே நின்று கிணைப் பொருநனது செயலை முதற்கண்ணோதிப் பின்னர்ச் சேரமானுடைய வென்றி நலத்தை விரித்தோதுகின்றார். தான் சேரமானைப் பாடவரும்போது தன் கிணைப்பறைக்குப் பதுப்போர்வை யணிந்து செம்மையுற வந்ததாகவுரைத்துச் சேரமான் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட யானைகளின் சிறப்பை மாறுகொண்டோர் மதில்இடறி நீறாடிய நறுங்கவுள என்றும், பூம்பொறிப் பணையெருத்தின என்றும் அவை திருந்திய தொழில்புரியும் பயிற்சியுடையவை யென்றற்கு, திருந்து தொழிற் பலபகடு என்றும் பொருநன் உரைக்கின்றான். அக்காலை அவன் வேந்தனை முன்னிலைப்படுத்தி வேந்தே. நினக்கு நின் பகைப்புலமன்னர் நல்கும் திறைப்பொருளைத் தந்து பொருநர், பாணர், கூத்தர் முதலிய நகைப்புலவாணர் நல்குரவகற்றி மிகப்பொலியர்தன் சேவடி என்று வாழ்த்தினான். அந்நிலையில் ஆங்கிருந்த சான்றோர் பலரும் அவன் செயலை நனிநன்றென வியந்து அக்கிணைவனை யூக்கினராக. அவன் இவைபோல்வன் பிறவும் எடுத்தோதினன். அச் சான்றோர் பலரும் அவையனைத்தும் செவியும் நெஞ்சம் குளிர இனிதிருந்து கேட்டனர் என்பான், நனிநன்றெனாப் பலபிற வாழ்த்த இருந்தோர் என்று இசைக்கின்றான். பின்பு அச் சான்றோர் சென்று அருளொழுக நோக்கிச் சிறப்பித்த செயலை, என் சிறுமையின் இழித்து நோக்கான், தன் பெருமையின் தகவு நோக்கி களிறும் மாவும் நிரையும் பிறவும் நல்கினன் என்று கூறுகின்றான். இழித்து நோக்கற்குரிய சிறுமை என்பால் இருப்பவும், தன்தகுதி நோக்கற்குரிய பெருமையுடையனாதலால் அவன் அது செய்யானாயினன் என்றான். விழையா வுள்ளம் விழையு மாயினும், என்றும். கேட்டவை தோட்டியாக மீட்டாங்கு அறனும் பொருளும் வழாமை நாடித் தற்றகவுடைமை நோக்கி மற்றதன் பின்னாகும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோ ரொமுக்கம் (அகம், 281) என ஆசிரியர் ஓரம்போகியார் உரைப்பதனால், பெருமை தன்தகவு நோக்கற் பெருமகன் என்றார். இவ்வாறு பரிசில்பெற்றுச் செல்லுங்கால் பகைவர் எதிருற்று வளைத்துக் கொள்வாராயின், அவர்க்குச் செல்வக்கடுங்கோ வாழியாதன் செய்த சிறப்பு இஃது என்றால், அவர்கள் தமது வணக்கத்தின் அறிகுறியாகத் தம் குடையைப் பணித்துப் பரிசிலரை இனிது செல்ல விடுவரென்பது. --- |