| ஆயினும் என்பதைக் காலைக்குங் கூட்டுக. இதனைப் போருறு காலை என்று பாடங் கொண்டு வெள்ளிமீன் ஏனைக் கோள்களோடு போர்செய்யுங் காலையென்று பொருள் கூறுதலுமுண்டு. ஆதனுங்கனது முதுமையும் தமது இளமையுந் தோன்ற, பிள்ளையம்பொருந என்று குறித்தார். ஈவார்மேல் புகழ்நிற்கு மாகலின் ஈத்தனனே இசைசால் நெடுந்தகை யென்றார். ஆதனுங்கள் இறந்து உயர்ந்தோருலகில் இருக்கின்றனென்பார் இன்று சென்றெய்தும் வழியனுமல்லன் எனவும், அங்குச் செல்லின் அவனைக் காண்டல் எளிது என்பார், செலினே காணாவழியனுமல்லன் எனவும் தெரித்தார். இனி ஆதனுங்கன் வேங்கடத்திலும், நல்லேர்முதியன் பிறிதோரிடத்திலும் ஒரு காலத்தவராய் வாழ்ந்தவரென்றும், ஆத்திரையனார்க்கு வேங்கடத்தினும் முதியனூர் அண்மையில் இருந்ததாமென்றும், முதியனுக்கு ஆதனுங்கன் இயல்பு தெரிவித்தற்கு இன்று சென்றெய்தும் வழியனுமல்லன் செலினே காணாவழியனுமல்லன் என எடுத்தோதினாரென்றலுமுண்டு; ஆயினும் ஒத்தகாலத்து ஒத்த நிலையிலுள்ள வள்ளியோனொருவளைக் காட்டி வேறொரு வள்ளியோனைச் சான்றோர் பாடும் வழக்கம் தொகை நூல்களிற் காணப்படாமையை ஈண்டுக் கருதுதல் வேண்டும். மடப்பிடியினையக் கன்று தந்து மன்றத்துப்பிணிக்கும் குன்றநல்லூர் என்றது, ஆதனுங்கனுடைய நெடுமனை புலம்ப அறக்கடவுள் அவனை உயர்நிலை யுலகிற் கொண்டுய்த்த தென்னும் குறிப்பைத் தன்னுட்கொண்டு நிற்கிறது. இக்குறிப்பையே மகளிர் நெய்தல் கேளன்மார் நெடுங்கடையானே என்றது வற்புறுத்திநிற்கிறது. மனஞ்செல்வுச்சேறல்நிறையாகிய நற்பண்பில்லாதார் செய்கையாய் ஒருவற்குச் சிறுமைபயக்கு மாதலின் அதனை நாடாது பெருமைக்குரிய பண்பும் செயலும் நல்லேர் முதியன்பால் உண்மை தோன்ற, செல்வுழியெழாஅ நல்லேர் முதிய என்றார், ஏர், அழகு; நல்லேர் என்றது பெருமையு முரனுமாகிய அழகு குறித்ததாம். செல்வத்துக்குப் பயன் சேர்ந்தோர் புன்கண் அஞ்சி அதனைக் கடிதிற் களையும் மென்மையுடைமை யாதல் பற்றி, பசித்தோர் பழங்கண் வீட நல்குமதி என்றும் ஆதனுங்கன் பிரிவால் கறங்கிய நெய்தற்பறை மீளவும் கறங்கலாகாதென்ற கருத்தை வற்புறுத்தலின், நெய்தல் கேளன்மார் என்றும், கூறினார். வலிப்பத்திரங்கக்களியும் கோடையாயினும், போகுறு காலையும், பொருந, உள்ளுமோ என்று ஈத்தனன், நெடுந்தகை; அல்லன், அல்லன், கிழவோனாகிய முதிய. நீயும், ஆதனுங்கன்போல, பழங்கண் வீட நன்கலம் நல்குமதி; பெரும மகளிர் நெடுங்கடையில் நெய்தல் கேளன்மார் எனக்கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: இங்கே குறிக்கப்படும் ஆத்ன்நுங்கனைப் போல, நுங்கன் என்று பெயர் தாங்கிய வேந்தர்பிற்காலத்தே ஆந்திரநாட்டில் குடிபுரந்து அரசுபுரிந்துள்ளனர் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் அன்போதி நாயுடு என்பான் தன் சிறிய தந்தையான பாரி நாயுடுவுக்கும் சிற்றன்னை நுங்கன் சானிக்கும் நன்றுண்டாகக் கல்லூர்க் கங்காதரேசுரர்க்கு எண்ணெயாடும் செக்கு நல்கினான் (Nel. Ins. Darsi. 33). பதினான்காம் நூற்றாண்டில் அசனதேவமகாராயர் காலத்தில் உண்டான கல்வெட்டொன்று, அவருடைய தந்தையார் நுங்கதேவமகாராயரென்றும், அசனதேவர் மகன் பெயரும் நுங்கராயரென்றும் கூறுகிறது. கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் குண்டூர் சில்லாவிலுள்ள ஓங்கோல் தாலூகாவைச் சேர்ந்த கணுபார்த்தி பகுதியில் வீரனுங்கள் என்றொரு வேந்தன் இருந்தானென்றும், அவன் மகன் வீர |