| எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும் - எறிகின்ற அலைகளையுடைய பெரிய கடல்முடிவெய்தும் ஊழிகாலமே வரினும்; தெறுகதிர்க் கனலி தென்றிசை தோன்றினும் - வெதுப்புகின்ற கதிர்களையுடைய ஞாயிறு கீழ்த்திசை மாறித் தென்றிசையிற் றோன்றுங் காலமே வரினும்; யாம் என்னென்று அஞ்சலம் - யாங்கள் இதற்குச் செய்வது என்னோவென்று அஞ்சு வேமல்லேம்; வென்வேல் அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் - வென்றி தரும் வேலைக் கையிலேந்தி அரிய போர்களை வஞ்சியாது செய்து வெல்லும் ஆற்றலையுடைய; அவன் - அக்கிள்ளிவளவனுடைய; திருந்து கழல் நேரன்றாள் தண்ணிழலேம் - திருந்திய கழலணிந்த வலிய தாள்கள் செய்யும் தண்ணிய நீழலின்கண் உள்ளே மாதலால்; எ - று.
வெள்ளி யெழுந்து விளங்குதலும், புள்ளினம் சிலைத்தலும், தாமரைப் போது விரியத் தொடங்கலும் திங்களின் ஒளி மழுங்குதலும் விடியற்காலத்து நிகழ்ச்சிகள், பாடு, ஒலி. எழுதல் - முற்படுதல். வேந்தர் அரண்மனைகளில் விடியற்காலையில் முரசமும் வலம்புரியும் முழங்குவது இயல்பு. இரவுப் போதிற்கு அந்திமாலை அகமும் விடியற்காலை புறமும்போலக் குறிப்பார், விடியலை இரவுப்புறம் என்றார். இரவுப்புறம் பெற்ற வேம வைகறை (புறம். 398) என்று பிறரும் கூறுதல் காண்க.காவலாற்சிறப்புடையதாதல் பற்றி, பாசறை ஏமப்பாசறை யெனப்பட்டது. பல வேறு தொழிற் பாடு விளங்கத் தொடுக்கப்படுவது பற்றித்தார், பலகோட் செய்தார் என்றார். உள்ளிவந்த என்றது, பண்டுவந்தமை தான் அறிந்துகொண்டமை தெரிந்தவாறு. பூவியல் நறவமென்றற்கு மணநாறு தேறல் என்றார். உடைக்குப் பாம்பின் தோலை உவமம் செய்தல் மரபு பிறரும், பாம்புரியன்ன வடிவின காம்பின், கழைபடு சொலியினிழையணி வாரா வொண்பூங் கலிங்கம் (புறம். 383) என்று கூறுதல் காண்க. திருவள்ளுவர் நிரப்பின் வெம்மையை நெருப்பிலும் பெரிதென்றராக இவ்வாசிரியர், வேனிலன்ன வெப்பு என்றார். ஓதல் முதலிய அறுவகைத் தொழிலுடையராதலின் அறுதொழிலந்தணர் எனப்பட்டனர். ஓதல் முதலிய தொழில் ஆறும் பார்ப்பார்க்குரிய வாதலின், அறவோராகிய அந்தணர் இம்மைக்குரிய உழவு வாணிக முதலிய தொழில்களைச் செய்யாமைபற்றி அறு தொழிலந்தணர் எனப்பட்டன ரென்றல் சிறப்பென அறிக: அறுதொழில், அற்றதொழில் என விரியும்; அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுதேத்த (சிலம். 17) என்புழிப்போல. மேனாட்டுக் கிரேக்கர், உரோமானியர் முதலியோர் நாடுகளும், கிழக்கிலுள்ள கடாரம் சாவகம் முதலிய நாடுகளும் தீவு எனப்படுமாதலால் வலம்படு தீவின் எனப் பொதுப்படக் கூறினார். இறுதி, இறுதிக் காலமாகிய ஊழிக்காலம். வளவனுடைய தாணிழலின் பெருமை கூறவார். செலினும் தோன்றினும் அஞ்சலம் என்றார். ஏர்தரும்; தோன்றின; விழித்தன; சுருங்கின்று; காலை தோன்றி, அகற்றம்; கேளியர்; மார்ப, துயில் எழுமதியென இத்துணையும் கிணைவன் பாடிய துயிலெடை நிலையாயிற்று. மார்ப, துயில் எழுமதியென ஒற்றி, தோன்றியேன்; நயந்து, என, சூடும்தேறலும் கலிங்கமும் சொரிந்து, நீங்க, நல்கியோன்; நாடன், |