| மைந்தர்க்கு மைந்து - வலியோரிடத்து மிக்க வலியை யுடையன்; துகளறு கேள்வி உயர்ந் தோர் புக்கில் - குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடம்; அனையன்என்னாது - அத்தன்மையையுடையோ னென்று கருதாது; அத் தக்கோனை நினையாக் கூற்றம் அத் தகுதியையுடையோனை அவ்வாறு கருதாத கூற்றம்; இன்னுயிர் உய்த்தன்று - இனிய உயிர்கொடு போயிற்று; பைதல் ஒக்கல் தழீஇ - அதனால் பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை அணைத்துக்கொண்டு;அதனை வைகம் வம்மோ - அக்கூற்றத்தை வைவேமாக வாரீர்; வாய்மொழிப் புலவீர்- மெய்யுரையை யுடைய புலவீர்; நனந்தலை யுலகம் அரந்தை தூங்க - நல்ல இடத்தினையுடைய உலகம் துன்பமாக; கெடுவில் நல்லிசை சூடி - கேடில்லாத நல்ல புகழ்ச்சிமாலையைச் சூடி; நடுகல் ஆயினன் புரவலன் எனவே - நடப்பட்ட கல்லாயினான் எம்மைப் பாதுகாப்போன் எனச் சொல்லி; எ - று.
ஈத்த புகழ், ஈதலால் உளதாகிய புகழ் எனவும், ஈத்த அன்பு ஈத்தற்கு ஏதுவாகிய அன்பெனவும் கொள்க. வாய்மொழிப்புலவீர், அத்தக்கோனைக்கூற்றம் இன்னுயிருய்த்தது; அதனால் புரவலன் கல்லாயினானென ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ எனக் கூட்டி வினை முடிவு செய்க.
சாயல், மைந்து, புக்கில் என்பன ஆகுபெயர். புக்கில்: வினைத் தொகை. கேடென்பது கெடுவெனக் குறைந்துநின்றது.
விளக்கம்: அறவோர் புகழ்தற்கமைந்தது அறநூன்முறை யாதலின், ஆராய்ந்து நடத்தும் முறைமைக்குக் கருவியாகிய நீதி நூல் அவாய்நிலையால் வருவித்து நீதி நூற்குத் தக என்பது கூறப்பட்டது. கோல், உவமை யாகுபெயராய் அரசுமுறை குறித்துநின்றது. முறையாவது, ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந், தேர்ந்துசெய்வஃதே முறை (குறள். 541) என்பது காண்க. சான்றோரென்றது மறவர்களுட் சிறந்தவர்களை. சான்றோர் மெய்ம்மறை (பதிற். 14) என்று பிறரும் கூறுவர். மகளிர் மெல்லிய இயல்பினராதலின் அவர்பால் மென்மையும், வலியுடைய மைந்தர்க்கு வலிமையும் கொண்டொழுகினானென்பார்,மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து என்றார். வணங்கிய சாயல் வணங்கா வாண்மை (பதிற். 48) என்று பிறரும் கூறுதல் காண்க. புக்கில் என்பது புகும் இல் என விரிவது பற்றி, அதனை வினைத்தொகை யென்றார். தக்காரது தகுதி பற்றியே உலகம் உளதாகின்றதாகலின், கூற்றம் அதனை நினைப்பது கடனாகவும், அக்கடனை நினையா தொழிந்ததென்பார், நினையாக் கூற்றம் என்றும், பொய்கூறி வைதார்க்கு வசை பயன் தாராமையின், வாய்மொழிப் புலவீர் என்றும் கூறினார். கூற்றின் நினையாச் செயல் நனந்தலையுலகிற்குத் துன்பம் தருவதாயிற்றென்றற்கு, உலகம் அரந்தை தூங்க என்றார். கெடுவென்பதனை முதனிலைத் தொழிற்பெயர் என்பர். |