பக்கம் எண் :

80

     

     விளக்கம்: கலந்த கேண்மையை விளக்கற்கு, நீயும் யானும் கலந்த
நட்பு என்றார். இம்மையில் தன்னோடு கூடியிருந்து கலந்த கேண்மையால்
இடைவிடாத காட்சி நல்கி இன்புறுத்தினா னாதலின், “உம்மைப் பிறப்பில்
உடனுறை வாக்குக பால்” என்றார். பால், விதி. “உயர்ந்த பால்” என்றார்,
இம்மையிற்போல மறுமையிலும் உடனிருந்து பயன் தரும்
உயர்வுடைமைபற்றி. பிறரும் “வாழச்செய்த நல்வினை யல்லது, ஆழுங்
காலைப் புணைபிறி தில்லை” (புறம்: 367) என்று விதியின் உயர்வை
எடுத்தோதுவது காண்க.

---

237. இளவெளிமான்

     வெளிமானாகிய வள்ளலைக் காண்டற்குப் பெருஞ்சித்திரனார்
அவனுடைய ஊர்க்குச் சென்றதும், அக்காலை அவன் துஞ்சும் நிலையில்
இருந்ததும், தன் தம்பி இளவெளிமானை நோக்கிப் பெருஞ்சித்திரனாரை
நன்கு மதித்துப் பேணுமாறு அவன் பணித்ததும், பின்னர் அவன் இறந்ததும்,
இளவெளிமான் தனக்கு மூத்தோன் உரைத்தலை மதியாது
பெருஞ்சித்திரனார்க்குச் சிறிதளவே தந்து இகழ்ந்ததும் முன்பே நாம்
கண்டுள்ளோம். அப்போது அவர் அவன் கொடுத்த சிறு பரிசிலைப்
பொருளாக மதியாது தமது நெஞ்சொடு நொந்து “உலகம் பெரிது; நம்மைப்
பேணுவோர் பலர்; செல்வோம் வருக” என எழுந்து சென்றதும் நாம்
அறிந்த செய்தியே. வெளிமானைக் கண்டு பரிசில் பெற விழைந்தவர்,
வெளிமான் இறந்ததனால் உள்ளம் உடைந்தார்; அதனால் உண்டாகிய
கவலை, இளவெளிமான் சிறிது கொடுத்து இகழ்ந்ததனால் மிகவும்
பெரிதாய்க்   கையறவினைப்   பயந்தது.  சோறாக்குதற்கேற்றிய
உலைப்பானையில் சோறு வாராது நெருப்பு வந்தது போல, நாம் நாடிப்
போந்த நல்லோன் நம்நசை பழுதாக மாய்ந்தான்; தான் கொல்லக் கருதிய
களிறாகிய இரை தவறுமாயின், வயப்புலி, வேறோர் எலியை வேட்டம்புரிந்து
கொன்று பசிதீர நினையாது; அதுபோல் நாமும் இச் சிற்றளவாகிய பரிசிலை
விரும்பி யேற்றல் முறையன்று; வேற்றிடம் சென்று பெரும் பரிசிலைப்
பெறலாம்” எனத் தமது நெஞ்சோடு இனைந்து வருந்தித் தேறினார்.
அத் தேற்றம் இப் பாட்டுருவில் வெளி வந்தது.

 நீடுவாழ் கென்றியா னெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாட் கண்ணே
கோடைக் காலத்துக் கொழுநிழ லாகிப்
பொய்த்த லறியா வுரவோன் செவிமுதல்
5வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென
 நச்சி யிருந்த நசைபழு தாக
அட்ட குழிசி யழற்பயந் தா அங்கு
அளியர் தாமே யார்க வென்னா
அறனில் கூற்றந் திறனின்று துணிய
10ஊழி னுருப்ப வெருக்கிய மகளிர்
 வாழைப் பூவின் வளைமுறி சிதற