பெருஞ்சாத்தன் நல்வாழ்வு வாழ்ந்து முடிவில் வானுலகு பெயர்ந்தான். அப்போது அவன் பிரிவாற்றாது வருந்திய சான்றோருள் குடவாயில் கீரத்தனார் என்பாரும் ஒருவர். குடவாயில் சோழநாட்டில் உள்ளதோர் ஊர். கீரத்தனார் அவ் வூரினராயினும், அவர்க்கு யாதும் ஊரே; யாவரும் கேளிரே. அதனால் அவர் மனத்தின்கண் பெருஞ்சாத்தன் பிரிவு பெரு வருத்தத்தை யுண்டாக்கியது. பெருஞ்சாத்தன் இறந்தபின் கீரத்தனார் குடவாயில் நோக்கிச் செல்வாராயினர். அக்காலையில் ஒல்லையூர் நாட்டைக் கடந்து வருபவர் வழியில் முல்லைக் கொடி பூத்திருப்பக் கண்டார். அதன் அழகும் மணமும் கீரத்தனார் உள்ளத்தில் பல எண்ணங்களை எழுப்பின. இன்பக் காலத்தில் முல்லைப் பூவை இளையர் பலரும், செவ்வி மகளிரும் வரைவின்றிச் சூடிக் கொள்வர்; பாணருள்ளும் பாண்மகன் அதனைத் தன் யாழ்க் கோட்டால் வாங்கிச் சூடிக் கொள்வான்; பாண்மகளும் தன் கூந்தலிற் சூடி இன்புறுவாள். பெருஞ்சாத்தன் இறந்தபின் இவர்கள் துயருறுகின்றனர். இன்பக் காட்சியும் துன்பக் காட்சியும் கீரத்தனார் கண்களில் மாறி மாறித் தோன்றின. முல்லைக் கொடியை நோக்கினார்; முல்லையே, பெருஞ்சாத்தன் இறந்தபின் இத் துன்பக் காலத்தில் நின்னை இளையரும் சூடார்; வளையணியும் பருவ மகளிரும் கொய்து குழலிற் சூடார்; பாணனும் சூடான்; பாடினியும் அணியாள், இந்த ஒல்லையூர் நாட்டில் நீ ஏனோ பூத்துள்ளாய் என்பாராய் இப்பாட்டைப் பாடினார். | இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி யணியாள் ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த | 5 | வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை | | முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே. |
திணையும் துறைவு மவை. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது.
உரை: இளையோர் சூடார் - இளைய வீரர் சூடார்; வளையோர் கொய்யார் - வளை யணிந்த இளைய மகளிர் பறியார்; நல்லி யாழ் மருப்பின் மெல்ல வாங்கி - நல்ல யாழ்க் கோட்டின் மெல்ல வளைத்து; பாணன் சூடான் - பாணன் பறித்துச் சூடிக் கொள்ளான்; பாடினி அணியாள் - பாடினி சூடாள்; ஆண்மை தோன்ற தன்னுடைய ஆண்மைப்பாடு யாவர்க்கும் வெளிப்பட; ஆடவர்க்கடந்த - வீரரை எதிர் நின்று கொன்ற; வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை - வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு; முல்லையும் பூத்தியோ - முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ; ஒல்லையூர் நாட்டு - அவனது ஒல்லையூர் நாட்டின்கண்; எ - று.
அவனையிழந்து கொடியேனாய் வாழ்கின்ற யானேயன்றி நீயும் கொடியையாய்ப் பூக்கின்றாயோ? என எச்சவும்மையாய் நின்றது; என்றது, பூச்சூடி நுகர்வார் இன்மையின் பயனில்லை யென்றதாம். |