34. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இவன் சோழன் வேந்தருட் சிறப்புடையவனாவான். சிறுகுடிக்குரிய பண்ணன் என்பவன் மேல் இவன் பாடியுள்ள பாணாற்றுப்படை இத்தொகை நூற்கண் கோக்கப்பட்டுள்ளது. இவனை ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், ஐயூர் முடவனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார், மாறோக்கத்து நப்பசலையார் முதலிய பல சான்றோர் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். இவன் ஒருகால் கருவூரை முற்றுகை யிட்டிருந்தானாக, அடைபட்ட வேந்தன் போர்க்கு வாராது அஞ்சிக் கிடப்ப, ஆலத்தூர் கிழார்,அஞ்சிய வேந்தன் அடைபட்டுக் கிடக்க அவனொடு பொருதல் நின் பெருமைக்குப் பொருந்தா தெனச் சொல்லிப் பாடினர். இவன் பகைவர் நாட்டினை யழிப்பது கண்ட மாறோக்கத்து நப்பசலையார், புள்ளுறு புன்கண் தீர்த்த சோழன் வழித் தோன்றிய நீ, வேந்தன் நகரத்திருப்பவும் அவனது நல்ல வூரை யழித்தல் அருளற மாகாது என்று தெருட்டினார். இவ்வளவன் ஆவூர் மூலங்கிழாரை நோக்கி, எம்முள்ளீர்? எந் நாட்டீர்? என்று வினவ, எமது நினை வெல்லை சொல்லுதல் வேண்டா; பகைவர் தேயத் திருப்பினும் அது நின்னதே யெனக் கருதிப் பரிசிலர் அனைவரும் நின்னையே நினைப்பர் என்று சொல்லி மகிழ்வித்தார். ஒருகால் கோவூர் கிழார் இவன் பகைவர் நாட்டை யழிக்கும் திறம் கண்டு இவன்பாற் போந்து கொற்றவள்ளை பாடி அருள் மேவியவுள்ள முடையவனாக்கினார். மலையமானோடு பொருத இவ்வளவன் பெருஞ் சினங்கொண்டு அவன் மக்களைப் பற்றிக் கொணர்ந்து யானையின் காலிலிடப் புக்கானாக, அதனை யறிந்த கோவூர் கிழார்,சோழன் குடிவரவும் இளஞ் சிறாரின் இயல்பும் கூறி அவன் செயலைத் தடுத்து மக்களை உய்வித்தார். வெள்ளைக் குடிநாகனார் என்னும் சான்றோர் இவனை கொடைத்திறத்தைப் புலவர் பலரும் பல்லாறாக மகிழ்ந்து பாடியுள்ளனர். இவன் இறந்த பிறகு, மாறோக்கத்து நப்பசலையாரும் ஆடுதுறை மாசாத்தனாரும் ஐயூர் முடவனாரும் இரங்கிப்பாடிய பாட்டுக்கள் மிக்க உருக்கமுடையனவாகும். இவன் இறந்தவிடம் குளமுற்றம் என்னும் ஊர். இதுபற்றியே இவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் எனப் பிற்காலத் தான்றோரால் குறிக்கப் படுகின்றான்.
ஆலத்தூர் கிழாரின் இயற்பெயர் தெரிந்திலது. ஆலத்தூர் - சோழ நாட்டில் உள்ளதாகிய ஓர் ஊர். இவர், கிள்ளிவளவன் உறையூரிலிருந்தானாக, அவனைக் கண்டு பரிசில் பெற்ற திறத்தைப் பாணாற்றுப் படையால் விளக்கிக் கூறுகின்றார். இத் தொகைநூற்கண் ஐந்து பாட்டுக்கள் உள்ளன.
இப் பாட்டின்கண், இவர் கிள்ளிவளவன்பால் பெருஞ் செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை, அவன் எம்மை நினைத்து மீளவும் வருதிரோ? என்று கேட்க, பாணர்க்குத் தொலையாச் செல்வத்தை வழங்கும் எம் கோனாகிய வளவன் வாழ்க என்று பாடேனாயின், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென அறநூல் கூறிற் றாதலின், அக்கூற்றுப்படி, யானுறையும் நாட்டில் ஞாயிறு முறைப்படி தோன்றுதலொழியும்; சான்றோர் செய்த நல்வினையால் நாட்டிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகிய காலம் நீ வாழ்வாயாக எனச் சொல்லி வாழ்த்துகின்றார். | ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென | 5. | நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் | | செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ காலை யந்தியு மாலை யந்தியும் புறவுக் கருவன்ன புன்புல வரகின் | 10. | பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக் | | குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலோ டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக் கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க் | 15. | கலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் | | எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின் பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற் படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச் | 20. | சான்றோர் செய்த நன்றுண் டாயின் | | இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக் கொண்டன் மாமழை பொழிந்த நுண்பஃ றுளியினும் வாழிய பலவே. (34) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
உரை: ஆன் முலை அறுத்த அற னிலோர்க்கும் - ஆனினது முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்; மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் - மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும்; குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் - தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந் தொழிலை யுடையோர்க்கும்; வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என - அவர் செய்த பாதகத்தினை யாராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள வெனவும்; நிலம் புடை பெயர்வ தாயினும் - நிலம் கீழ் மேலாம் காலமாயினும்; ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதலில்லை யெனவும்; அறம் பாடிற்று - அற நூல் கூறிற்று; ஆயிழை கணவ - தெரிந்த ஆபரணத்தை யுடையாள் தலைவ;காலை யந்தியும் மாலை யந்தியும் - காலையாகிய அந்திப் பொழுதும் மாலையாகிய அந்திப் பொழுதும்; புறவுக் கருவன்ன புன்புல வரகின் - புறவினது கருவாகிய முட்டை போன்ற புல்லிய நிலத்து வரகினது அரிசியை; பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி - பாலின்கட் பெய்து அடப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு; குறு முயற்கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு - குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட; இரத்தி நீடிய அகன்றலை மன்றத்து - இலந்தை மரமோங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண்; கரப்பில் உள்ளமொடு-ஒன்றனையும் மறைத்தலில்லாத உள்ளத்துடனே; வேண்டுமொழி பயிற்றி - வேண்டி வார்த்தைகளைப் பலகாலும் கூறி; அமலைக்கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு - பெரிய கட்டியாகிய கொழுவிய சோற்றை யருந்திய பாணர்க்கு; அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் - நீங்காத செல்வ மெல்லாவற்றையும் செய்தோன்; எங்கோன் வளவன் வாழ்க என்று - எம்முடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக வென்று சொல்லி; நின் பீடு கெழுநோன்றாள் பாடேனாயின் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடிற்றிலே னாயின்; பல் கதிர்ச் செல்வம் படுபறியலனே - வாழ்நாட் கலகாகிய பல கதிரையுடைய செல்வன் தோன்றுத லறியான்; யானோ தஞ்சம் - யானோ எளியேன்; பெரும-; இவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின் - இவ்வுலகத்தின்கண் நற்குணங்களால் அமைந்தோர் செய்த நல்வினை யுண்டாயின்; இமயத்து ஈண்டி- இமய மலையின்கண்ணே திரண்டு; இன்குரல் பயிற்றி - இனிய ஓசையைப் பயிற்றி; கொண்டல் மாமழை பொழிந்த நுண் பல் துளியினும் பல வாழிய - கீழ் காற்றால் வரும் பெரிய முகில் சொரிந்த நுண்ணிய பல துளியினும் பல காலம் வாழ்வாயாக எ-று.
நிலம் புடை பெயர்வதாயினும் என்பதற்கு ஊழி பெயருங் காலத்து யாவரும் செய்த இருவினையும் நீங்குதலின், அக்காலத்தும் செய்தி கொன்றோர்க்கு உய்தியில் லென்றும், நிலத்துள்ளார் யாவரும் இவர் கூற்றிலே நிற்பாராயினும் என்றும் உரைப்பாரு முளர். புன்கம் இவன்பாற் செல்வதற்கு முன்பு பெற்ற உணவாகவும், அமலைக் கொழுஞ் சோறு இவன்பாற் பெற்ற உணவாகவும் கொள்க. அன்றிச், சென்ற இடந்தோறும் பெற்ற உணவாக வுரைப்பினு மமையும். மன்றத்துச் சூடு கிழித்த வொக்கலொடு கூட வேண்டு மொழி பயிற்றி ஆர்ந்த பாணர்க்கெனக் கூட்டுக. பாணர்க்கெனத் தம்மைப் பிறர் போலக் கூறினார்.
ஆயிழை கணவ, செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம் பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வ முழுதுஞ் செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலை யந்தியும் மாலை யந்தியும் நின்றாள் பாடேனாயின், பல் கதிர்ச் செல்வன் படுபறியான்; பெரும, யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்றுண்டாயின், நுண் டுளியினும் பல காலம் வாழ்வாயாக வெனக் கூட்டுக.
கோவதை முதலாயின வாக்காற் சொல்லவும் படாமையின்,ஆன்முலை யறுத்த வெனவும், மகளிர் கருச்சிதைத்த வெனவும், குரவர்த் தப்பிய வெனவும் மறைத்துக் கூறப்பட்டன. இது பரிசில் பெற்றுப் போகின்றானை நீ எம்மை நினைத்து வருவையோ வென்றாற்கு, இவ்வாறு செய்த நின்னை வளவன் வாழ்க வென்று பாடேனாயின், யானிருக்குமிடத்துப் பல் கதிர்ச் செல்வன் படுதலறியான்; அதனால் இம்மை யின்பம் பெற்றேன் எனவும், செய்ந்நன்றி கொன்றோர்க்கு உய்தி யில்லை யெனவே மறுமையின்கண் நரகம் புகுவே னெனவும் கூறியதாகக் கொள்க.
விளக்கம்: ஆன் முலை யறுக்கும் கொடியவர்குறிப்பு அதனாற் பெறும் பயனைக் கெடுப்பதென்பதாதலின், அதற் கேற்பவே உரை கூறினார். குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கு மெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத் திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது. நிலம் கீழ் மேலாங் காலமாவது நில நடுக்கத்தால் மேடுபள்ள மாதலும், பள்ள மேடாதலுமாகிய காலம். இமயம் கடலாகவும், அரபிக்கடல் நிலமாகவும் இருந்த காலமு முண்டென்ப. மண்ணுலகம் விண்ணுலக மென்பன தலைகீழாக மாறுங் காலமாகிய பேரூழிக் காலமெனச் சமய நூல்கள் கூறும் இக்காலத்தில் வினைகள் மூலப்பகுதியில் ஒடுங்குமெனச் சாங்கிய நூல்களும் மாயையி லொடுங்கு மெனச் சைவ நூல்களும் பிறவும் கூறலால். ஊழி பெயருங் காலத்து வினை நீங்குதலின் என்று உரைகாரர் கூறுகின்றார். புன்புலம், புன்செய்க்கொல்லை. மயக்குதல் - கலத்தல், தேன் மயங்கு பாலினும் இனிய (ஐங்.203) என்றாற் போல. முயலின் சூட்டிறைச்சியைக் கிழித்தெடுப்பது தின்றற்காகையால், கிழித்த ஒக்கல் என்றதற்கு, தின்ற ஒக்கல் என உரை கூறினார். அருந்திய வென்பது ஆர்ந்த வென வந்தது, ஏற்றினம் மேய லருந்தென ((ஐங்.93) என வருதல் காண்க. படுபறியலன் - படுதல் ஈண்டு தோன்றுதல் என்னும் பொருளது; எற்படக் கண்போன் மலர்ந்த காமர் சுனைமலர்...... அரிக்கணம் ஒலிக்கும் (முருகு.74-76) என்றாற் போல. ஞாயிறு வாழ்நாட் கலகா மென்பது, வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம் (நாலடி:22) என்று பிறரும் கூறுதல் காண்க. மழை. மழையைச் சொரியும் முகின்மே னிற்றலின், முகில் என வுரைத்தார். தன்னைப் பிறன்போல் வைத்துக் கூறலும் உயர்ந்தோர் கூற்றுட்படும் மரபுகளுள் ஒன்றாதலின், பாணர்க்கெனத் தம்மையும் அகப்படுத்திக் கூறினார். ஒழுக்கமுடைய சான்றோர் தீயவற்றை வழுக்கியும் வாயாற் சொல்லாராதலால், சொல்லுமிடத்து அத் தீமையை மறைத்து வேறுபாட்டாற் கூறுவது மரபாயிற்று. அதனால், ஆன் முலை யறுத்த வென்றும், தப்பிய வென்றும் கூறினார். இவை யாவும் கொலைப் பொருள் என அறிக. |