42. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     இப் பாட்டின்கண், ஆசிரியர் இடைக்காடனார், இவன் ஏனை
இருவேந்தர் நாடுகளைக் கவரும் கருத்தினனாய் மைந்துற்றிருப்பதும், மலை
போன்ற யானையும் கடல்போலும் தானையும் கொண்டு, புலி, தன்
குருளையைக் காப்பது போலத் தன்னாட்டை இனிது காத்துச்
செங்கோலோச்சி வருவதும், கடல் நோக்கிச் செல்லும் யாறு போலப் புலவர்
பலரும் இவன் புகழ் பாடிப் போதருவதும் எடுத்தோதிப் பாராட்டுகின்றார்.
இடைக்காடன் என்பது இயற்பெயர். இலக்கிய வளஞ் சிறந்த
பாட்டுக்கள் பல இவரால் செய்யப் பெற்றுச் சங்கத் தொகை நூல்களிற்
கோக்கப்பெற்றுள்ளன. தக்க உவமைகளைத் தொடுத்துப் பொருள்களை
விளக்குவதில் நல்ல வாய்ப்புடையர். குறு முயலின் குறு வழியை, “சிறியிலை
நெல்லிக் காய்கண் டன்ன, குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்” என்பர்;
காட்டிடத்தே காயாம் பூவும் தம்பலப் பூச்சிகளும் சிதறிக் கிடப்பதை,
மணிமிடை பவளம் போலும் என்று புனைவர். காட்டிடத்தே ஆட்டிடையன்
கோலூன்றி நின்று செய்யும் வீளை யொலி கேட்டுத் “தெறி மறி பார்க்கும்
குறுநரி” முட் புதற்குள் ஓடி யொளியும் இயல்பை அழகு திகழக்
கூறுகின்றார்.  மகளிர்  விருந்தோம்பும்  செய்கையால்  மேம்படுவதனை,
“அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும், முல்லை சான்ற கற்பின்,
மெல்லியற் குறுமகள்” (நற்.142) என்று சிறப்பிப்பர். விருந்து புறந்தரும்
அறத்தை இப் பாட்டின்கண்ணும் இவர் எடுத்தோதிப் பாராட்டுவதைக்
காணலாம்.

ஆனா வீகை யடுபோ ரண்ணனின்
யானையு மலையிற் றோன்றும் பெருமநின்
தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை
வேலு மின்னின் விளங்கு முலகத்
5. தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற்
புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே
தண்புனற் பூச லல்லது நொந்து
களைக வாழி வளவ வென்றுநின்
முனைதரு பூசல் கனவினு மறியாது
10. புலிபுறங் காக்குங் குருளை போல
மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர்
15. கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
மலையி னிழிந்து மாக்கட னோக்கி
20. நிலவரை யிழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லா நின்னோக் கினரே
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. (42)

     திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை இடைக்
காடனார் பாடியது.

     உரை: ஆனா ஈகை - அமையாத வண்மையையும்; அடு போர்
அண்ணல் - பகையைக் கொல்லும் பூசலையுமுடைய தலைவ; நின்
யானையும் மலையின் தோன்றும் - நினது யானையும் மலை போலத்
தோன்றும்; பெரும-; நின் தானையும் கட லென முழங்கும் - நின்
படையும் கடல் போல முழங்கும்; கூர் நுனை வேலும் மின்னின்
விளங்கும் - கூரிய நுனையையுடைய வேலும் மின்போல விட்டு
விளங்கும்; உலகத்து அரசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின் -
இங்ஙனம் உலகத்தின்கண் வேந்து தலை நடுங்குதற் கேதுவாகிய
வலியையுடைய யாதலால்; புரை தீர்ந்தன்று - குற்றம் தீர்ந்தது; அது
புதுவதோ அன்று - அது நினக்குப் பழையதாய் வருகின்றது; தண்
புனல் பூசல் அல்லது - குளிர்ந்த நீரால் உள்ளதாகிய பூசலல்லது;
நொந்து - வருந்தி; களைக வாழி வளவ என்று - எமது துயத்தைத்
தீர்ப்பாயாக வாழி வளவ என்று சொல்லி; நின் முனை தருபூசல்
கனவினும் அறியாது - நினது முந்துற்றுச் செல்லும் படையுண்டாக்கும்
பூசலைக் கனாவின்கண்ணும் அறியாது; புலி புறங் காக்கும் குருளை
போல - புலி பாதுகாக்கும் குட்டி போல; மெலிவில் செங்கோல் நீ
புறங் காப்ப - குறைவில்லாத செவ்விய கோலால் நீ பாதுகாப்ப;
பெருவிறல் யாணர்த்தாகி - பெரிய விசேடத்தையுடைய புது
வருவாயை யுடைத்தாய்; அரிநர் கீழ் மடைக்கொண்ட வாளையும் -
நெல்லறுப்பார் கடை மடைக்கண் பிடித்துக் கொள்ளப்பட்ட
வாளையும்; உழவர் படை மிளிர்ந்திட்டயாமையும் - உழுவார் படை
வாளால் மறிக்கப்பட்ட ஆமையும்; அறைநர் கரும்பிற் கொண்ட
தேனும் - கரும்பறுப்பார் கரும்பினின்றும் வாங்கப்பட்ட தேனும்;
பெருந்துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும் - பெரிய துறைக்கண்
நீரை முகந்து கொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீரு மென
இவற்றை; வன் புலக்கேளிர்க்கு வருவிருந் தயரும் -
வன்புலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக்
கொடுக்கும்; மென் புல வைப்பின் நன்னாட்டுப் பொருந - மென்புலத்
தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; மலையின் இழிந்து மாக்
கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல் யாறு போல - மலையினின்
றிழிந்து பெரிய கடலை நோக்கி நிலவெல்லையி னின்றிழியும் பல
யாறுகளை யொப்ப; புலவரெல்லாம் நின் னோக்கினர் - புலவர்
யாவரும் நின்னை நோக்கினர்; நீயே - நீதான் அவரக்குப் பரிசில்
கொடுத்தற் பொருட்டு; மருந்தில் கணிச்சி - பரிகாரமில்லாத கணிச்சி
யென்னும் படைக் கலத்தை; வருந்த - உயிர் வருந்த; வட்டித்து -
சுழற்றி; கூற்று வெகுண் டன்ன - கூற்றம் சினந்தாய் போலும்;
முன்பொடு - வலியுடனே; மாற்று இரு வேந்தர் மண்ணோக்கினை -
நினக்கு மறுதலையாகிய இருவேந்தருடைய நிலத்தைக்கொள்ள
நோக்கினாய் எ-று.

     அறியா தென்பதனை அறியாம லெனத் திரிப்பினு மமையும். வன்புலம்,
குறிஞ்சியும் முல்லையும்; மென் புலம், மருதமும் நெய்தலும். கணிச்சியைக்
குந்தாலி யென்றும் மழு வென்றும் சொல்லுவர். யாணர்த்தாகி விருந் தயரும்
நன்னா டென்க.

     பொருந, புலவரெல்லாம் நின் நோக்கினர்; நீ அரசுதலை பனிக்கும்
ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால் இச் செய்தி
புரை தீர்ந்தது; நினக்குப் புதுவ தன்றாகலி னெனக் கூட்டுக.

     புரை தீர்ந்தன் றென்பதற்கு. உயர்ச்சி தீர்ந்த தெனப் பொருளாக்கி,
பொருந, நீ ஆற்றலை யாதலின், இரு  வேந்தர்  மண்  ணோக்கினை;
புலவரெல்லாம் பரிசில் பெறுதற்பொருட்டு நின் னோக்கினர்; இச்செய்தி
நினக்குப் புதிதன்று; ஆதலின் உயர்ச்சி தீர்ந்த தென் றுரைப்பினு மமையும்.

     விளக்கம்: பொருட் குறைபாடு நோக்கித் தன்னளவிற் குன்றாத ஈகை
யென்பது, “ஆனா வீகை” யெனப்பட்டது. புதுவதன் றெனவே, அதன்
மறுதலையாய பழைய தென்பது கொள்ளப்பட்டது. முனை தருபூசல் என்புழி,
முனை யென்பது முந்துற்று முன்னேறிச் செல்லும் படையென வறிக. “நாயே
பன்றி புலிமுய னான்கும், ஆயுங் காலைக் குருளை யென்ப” (தொல்.மரபு:8)
என்றலின், புலிக்குட்டி குருளை யெனப்பட்டது. விறல், ஈண்டுச்
சிறப்புக்குறித்து நின்றது. மிளிர்தல், கீழ் மேலாகப் பெயர்தல்: மாக்கட
லென்புழி பெருமை, தன்னை நோக்கி வரும் நீர்ப் பெருக்கை என்று
கொண்டு தன்னியல்பில் விகாரமின்றி நிற்கும் இயல்பு பள்ள நோக்கி
யோடுதல் நீர்க்கு இயல்பாதலின், பெரும் பள்ளமாகிய “மாக்கடல் நோக்கி”
யென்றார். நோயைத் தடுப்பது மருந்தாதலால், சாக்காடாகிய நோய் செய்யும்
கூற்றுவனை விலக்கும் ஆற்றலுடையது பிறிதியாது மில்லை யாதல் கொண்டு,
“மருந்தில்......கூற்று” என்றார். உயர்ச்சி தீர்ந்த தென்பது,
உயர்ச்சியிலதாயிற்றென்னும் குறிப்பினை யுடையதாயிற்று.