102.பொகுட்டெழினி

     அதியமான் நெடுமானஞ்சியின் மகனான இப் பொகுட்டெழினி
தன் தந்தைக்குத் துணையாக ஆட்சி புரிகையில், ஒளவையார் அவனைக்
காணச் சென்றார். இவன் தன் குடிகட்கு உற்றுழி யுதவும் பேருள்ளமுமு்
நிறைந்த கல்வியறிவு முடையவனாய் விளங்குவது கண்டு, அவர், மிக்க
மகிழ்ச்சியும் வியப்பும் கொண்டு, இப் பாட்டின்கண், “நெடியோய், நாணிறை
மதிபோல் நீ விளங்குதலால், நின் நிழற்கண் வாழ்வார்க்குத் துன்ப
மென்பதில்லையாம்” என்று பாராட்டியுள்ளார்.

 எருதே யிளைய நுகமுண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவலிழியினு மிசையேறினும்
அவண தறியுநர் யாரென வுமணர்
5கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாணிறை மதியத் தனையையிருள்
யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே. (102)

     திணை: அது. துறை: இயன்மொழி. அவன் மகன் பொகுட்
டெழினியை அவர் பாடியது.

    உரை:எருது இளைய - எருதுகள் இளைய தாம்; நுகம்
உணரா - நுகம் பூண்டலை யறியா; சகடம் பண்டம் பெரிது
பெய்தன்று - சகடந்தான் பண்டம் பெரியதாக இடப்பட்டது;
அவல் இழியினும் மிசை ஏறினும் - ஆதலால் அது, பள்ளத்தே
யிழியினும் மேட்டிலே யேறினும்; அவணது அறியுநர் யார் என -
அவ்விடத்து வரும் இடையூறறிவார் யார்தான் என்று நினைந்து;
உமணர் - உப்பு வாணிகர்; கீழ் மரத்து யாத்த சேம அச்சன்ன -
அச்சுமரத்தின் கண்ணே யடுத்துக் கட்டப்பட்ட சேம வச்சுப்
போன்ற; இசை விளங்குகவிகை நெடியோய் - புகழ் விளங்கிய
இடக் கவிழ்ந்த கையையுடையஉயர்ந்தோய்; திங்கள் நாள் நிறை
மதியத் தனையை - நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை
யொப்பை; நின் நிழல் வாழ்வோர்க்கு
இருள் யாவணது -
ஆதலின், நின் நிழற்கண் வாழுமவர்கட்குத் துன்பமாகிய இருள்
எவ்விடத்துள்ளது? எ-று.

     திங்கள் நாள் நிறை மதியத் தனையை யென்றது, அறிவும் நிறையும்
அளுரு முதலாகிய குணங்களா லமைந்தா யென்றவாறாம். சேம வச்சன்ன
வென்றது, ஏற்றிழிவுடையவழி அச்சு முறிந்துழிச் சேமவச்சு உதவினாற்போல
நீ காக்கின்ற நாட்டிற்கு ஓரிடையூறுற்றால் அது நீக்கிக் காத்தற்குரியை
யென்பதாம். ‘எருதே இளைய நுகமுண ராவே, சகடம் பண்டம் பெரிதுபெய்
தன்றே’ யென்பது உவமங் கருதாது, சகடத்திற்கு வரும் ஏதம் குறித்து,
உமணர் சேமவச்சு யாத்தற்குக் காரணமாய் நின்றது.

     விளக்கம்:“எருது இளையவாகலின் நுக முணரா; பண்டம் மிகப்
பெய்யப் பெற்றுளது; அவண் நிகழ்வதனை யாவர் அறிகுவ”ரென்பது
உமணர் தம்முட் கருதிக் கூறும் கூற்று. இக்கருத்து உமணர் சேமவச்சு
யாத்துக்      கோடற்கு    ஏதுவாய்    நிற்றலின்,     உரைகாரர்,
“எருதே.........காரணமாய் நின்றது”என்றார். கீழ் மரம், அச்சு மரம்.
“இசை விளங்கு நெடியோய்”என்பவர், பொகுட்டெழினியின் கொடை
நலம் தோன்றுதற்குக் “கவி கை  நெடியோய்”என்று சிறப்பித்தார்.
“அரம்பையின் கீழ்க் கன்றும் கனி யுதவும்”என்று கூறும் நன்னெறிக்கு
இவன் தக்க சான்றாதல் இதனால் விளக்கமுறும். அவல், பள்ளம்; மிசை.
மேடு அவண் உறும் இடையூற்றிணை “அவணது”என்றார். உறுவது
அறிபவர் அரியராதலின், “அறியுநர் யார்”என்றார். நாள் நிறை
மதியம் - நாடோறும் வளர்ந்து நிறையும் முழுத் திங்கள். கலை நிரம்பிய
திங்களை மதியமென வழங்குப. முழுத் திங்கள் தண்ணிய நிலவை மிகப்
பொழிந்து இருளைப் போக்குதலின், “இருள் யாவணது”என்றார். முழுத்
திங்களை அவற் குவமை கூறினமையின், அவன் செய்யும் அருள்
தண்ணிலவும்   அவன்    தாணிழலில்    வாழ்வார்க்    கெய்தும்
துன்பம் இருளுமாயின. கீழ்மரத் தச் சிருப்பவும் சேமவச்சுக் கொண்டது
கூறியதனால், அதியமானஞ்சி யிருப்பவும், பொகுட்டெழினி அவற்குத்
துணையாய் இருந்தானென்பது தெள்ளிதாம்.