101.அதியமான் நெடுமான் அஞ்சி ஒருகால், ஒளவையார் அதியமானிடம் பரிசில் வேண்டிப் பாடிச் சென்றார். அவன் அவர்பால் மிக்க விருப்பும் மதிப்பு முடையனாதலால் விரும்பியவுடனே அவர்க்கு அதனை நல்காது சிறிது தாழ்த்தனன். ஆகவே, அவர்க்கு நெஞ்சில் வருத்தம் சிறிது தோன்றிற்று. ஆயினும். அவர் அவனது மனப்பண்பை நன்கறிந்திருத்தலின் நெஞ்சிற்குக் கூறுவாராய், நெஞ்சே! வருந்த வேண்டா; அதியமானது பரிசிலைப் பெறும் காலம் நீட்டினும் நீட்டியாதாயினும், யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல நம் கையகத்ததென்றே கொள்; இது பொய்யாகாதுஎனத் தெருட்டும் கருத்தால் இப்பாட்டைப் பாடியிருக்கிறார். | ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூ ணணிந்த யானை யியறேர் | 5 | அதியமான் பரிசில் பெறூஉங் காலம் நீட்டினு நீட்டா தாயினும் யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே அருந்தே மாந்த நெஞ்சம் | 10 | வருந்த வேண்டா வாழ்கவன் றாளே. (101) |
திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் கடாநிலை. அவனை அவர் பாடியது.
உரை:ஒருநாள் செல்லலம் - யாம் ஒருநாட் செல்லேம்; இரு நாள் செல்லலம் - இரண்டுநாட் செல்லேம்; பல நாள் பயின்று பலரொடு செல்லினும் - பலநாளும் பயின்று பலரோடு கூடச்செல்லினும்; தலை நாள் போன்ற விருப்பினன் - முதற் சென்ற நாள் போன்ற விருப்பத்தை யுடையன்; அணி பூண் அணிந்த யானை - அணிகல மணிந்த யானையையும்; இயல்தேர் அதியமான் - இயன்ற தேரையுமுடைய அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் - பரிசில் பெறுங் காலை; நீட்டினும் நீட்டா தாயினும் - நீட்டிப்பினும் நீட்டியா தொழியினும்; யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல - யானை தனது கொம்பினதிடையே வைக்கப்பட்ட கவளம் போல; கையகத்தது - நமது கையகத்தது அப் பரிசில்; அது பொய்யாகாது - அது தப்பாது; அருந்த ஏமாந்த நெஞ்சம் - உண்ணஆசைப்பட்ட நெஞ்சே; வருந்த வேண்டா - நீ பரிசிற்கு வருந்த வேண்டா; அவன் தாள் வாழ்க - அவன் தாள் வாழ்வதாக எ-று.
அதியமான் விருப்பின னென முன்னே கூட்டுக. கோட்டிடை வைத்த கவளம் போல என்றதற்கு, யானை வாயிற்கொண்டு நுகரு மளவும் கோட்டிடை வைத்த கவளம் போலப் பரிசில் கையகத்தது என்க; அன்றிக் களிறு கோட்டிடை வைத்த கவளத்தைச் சிறிது தாழ்த்ததாயினும், அஃது அதற்குத் தப்பாதவாறு போலப் பரிசில் சிறிது தாழ்ப்பினும், நமக்குத் தருதல் தப்பாது என்பதாக்கி யுரைப்பினு மமையும். தாளை முயற்சி யென்பாரு முளர். அருந்த வென்பது அருந்தெனக் கடை குறைக்கப்பட்டது. அருந்து என முன்னிலையாக்கி யுரைப்பினுமமையும்.
விளக்கம்:ஒரு நாள் இருநாள் அல்ல; பன்னெடு நாட்கள் தனித்துச் செல்வதின்றிப் பலரோடு கூடிப் பன்முறையும் சென்றபோதும் தலைநாளில் வரவேற்று வேண்டுவன அளித்ததுபோலவே நல்குவன் என அதியமானது கொடை நலத்தைப் பாராட்டியது இப்பாட்டு. தலை நாள் - முதல் நாள்; தண்டாக் காதலும் தலைநாட்போன்மே(அகம்.332) என்று பிறரும் கூறுப. கொடை யெதிர்வார் கொடைப் பொருளைப் பெறுதற்குத் தாழ்த்தால் தாழ்க்கலாமே யன்றி, அதியமான் கொடுத்தலில் தாழ்ப்பதிலன் என்பது தோன்ற, பரிசில் தரூஉங் காலமென்னாது, பெறூஉங் காலமென்றார். யானை கோட்டிடை வைத்த கவளம் அதன் வாய்ப்படுதலில் தவறாது; அது போல அவனது கொடையினைப் பெறுதல் தவறாது என்றதற்கு, யானை தன ் கோட்டிடை வைத்த கவளம் போலக், கையகத் ததுவது பொய்யா காதே யென்றார். இதற்குக் காட்டப்பட்ட பிற பொருள்கள் உரையிற் கூறியதுபோல அத்துணைச் சிறப்பிலவாகலின், உரைப்பினு மமையுமென்றொழிந்தார். அருந்த ஏமாந்த வென்புழிப் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. இக் கருத்தையே, உரைகாரர், அருந்த வென்பது அருந்தெனக் கடைக் குறைக்கப்பட்டதென்றார். ஏமாந்த நெஞ்சே, நீ அருந்துவாயாக என்று பொருள்பட, முன்னிலை யேவலாக்கி யுரைப்பினு மமையும்என்றார். ஏமாத்தல். ஆசைப்படுதல்; காமர் நெஞ்ச மேமாந் துவப்ப(புறம்.198) எனப் பிறரும் இப்பொருளில் வழங்குதல் காண்க. நெஞ்சம்:அண்மை விளி. வாழ்க அவன் என்பது, வாழ்கவன் என வந்தது. அருள்புரியுந் தக்கோரை, அவர் அருள் பெற்றோரும் பெற விழைவோரும் வாழ்த்துங்கால், அவர் திருவடியை வாழ்த்துங்கால், அவர் திருவடியை வாழ்த்தும் மரபு கருதி, வாழ்கவன் தாளேஎன்றார். பிறாண்டும் இவ்வாறே வாழ்கவன் தாளே(புறம்.103) என வாழ்த்துதல் காண்க. |