103.அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான்பால் பரிசில் பெற்றுச் சென்ற ஒளவையார், வழியில் ஒரு சுரத்தில் தன் சுற்றத்தோடு போந்து தங்கியிருந்த விறலி யொருத்தியைக் கண்டார். அவள் தான் உற்று வருந்தும் வறுமையைத் தெரிவித்து, கவிழ்ந்துகிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கியிருப்பது கண்டு, சில்வளை விறலி, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமானஞ்சி யுள்ளான்; அவன்பாற் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப வுடையன்; அலத்தற்காலையாயினும் புரத்தல் வல்லன்; அவன் பாற் செல்கஎன, இதனால் ஆற்றுப்படுத்துள்ளார். | ஒருதுலைப் பதலை தூங்க வொருதலைத் தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக் கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச் சுரனமுத லிருந்த சில்வளை விறலி | 5 | செல்வை யாயிற் சேணோ னல்லன் முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும் பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை | 10 | மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப அலத்தற் காலை யாயினும் புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே. (103) |
திணை:அது. துறை: விறலியாற்றுப்படை. அதியமானெடுமா னஞ்சியை அவர் பாடியது.
உரை:ஒரு தலை பதலை தூங்க - காவினது ஒருதலைக் கண்ணே பதலை தூங்க; ஒரு தலை - ஒரு தலைக்கண்ணே; தூம்பகச் சிறு முழாத் தூங்கத் தூங்கி - துளையை யகத்தேயுடைய சிறிய முழாவைத் தூங்கும் பரிசு தூக்கி; கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என - இடுவோ ரின்மையின் ஏலாது கவிழ்ந்த என் மண்டையை இட்டு மலர்த்த வல்லார் யார் எனச் சொல்லி; சுரன் முதல் இருந்த சில் வளை விறலி - சுரத்திடத்தே யிருந்த சிலவாகிய வளையையுடைய விறலி; செல்வை யாயின் - நீ அவன்பாற் போவையாயின்; சேணோன் அல்லன் - அவன் சேய்மைக்கண்ணானல்லன்; முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை - முனைப் புலத்தைச் சுடுதலா னெழுந்த இருட்சியையுடைய கரிய புகை; மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் - மலையைச் சூழும் முகில் போல இளங்களிற்றைச் சூழும்; பகைப்புலத்தோன் - பகைவர் தேயத் திருந்தான்; பல்வேல் அஞ்சி - பல வேற்படையையுடைய அதியமான்; பொழுது இடைப் படாஅ - ஒருபொழுதும் ஓயாமல்; புலரா மண்டை - உண்ணவும் தின்னவும் படுதலான் ஈரம் புலராத மண்டை; மெழுகு மெல்லடையின் கொழு நிணம் பெருப்ப - மெழுகான் இயன்ற மெல்லிய அடை போலக் கொழுத்த நிணம் மிக; அலத்தற் காலை யாயினும் - உலகம் வறுமையுறுதலையுடைய காலமாயினும்; புரத்தல் வல்லன் - பாதுகாத்தலை வல்லன்; அவன் தாள் வாழ்க - அவன் தாள் வாழ்க எ-று.
பதலை யென்பது ஒருதலை முகமுடைய தொரு தோற்கருவி. பகைப்புலத்தோ னென்ற கருத்து, பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின், நீ வேண்டிய வெல்லாந் தருதல் அவனுக்கெளி தென்பதாம். உம்மை: சிறப்பு. சேணோ னல்ல னென்பதற்குப் பரிசில் நீட்டிபானல்லன் என்று உரைப்பினு மமையும். விளக்கம்:காவடியின் ஒருபுறம் பதலையும் ஒருபுறம் சிறுமுழாவும் சம எடைபடத் தொங்கவிட்டாலன்றிக் காவிச் செல்ல முடியாதாகலின், “தூங்கத் தூக்கி”யென்றார். பகைப்புலத்தே இருக்குமாறு வற்புறுத்தற்குச் “சேணோ னல்லன்”என முன் மொழிந்தார். பொழுது இடைப் படாமையால் புலராத மண்டையைப் பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை”யென்றார். பெருப்ப என்புழிப் பெருத்தல் மிகுதல். அடிசிறுத்து முகம் அகன்றிருப்பது பற்றி, நாட்டுப்புறங்களில் வாழும் மகளிர் ஒருவரோ டொருவர் உறுப்பு நலம் பழித்து வைதுரைக்குமிடத்துப் “பதலை மூஞ்சி“ யென்று கூறுவர். இதனால், ஒருதலை முகமுடைய தோற்கருவியாகிய இதன் முகத்தியல்பு அறியப்படும். பகைப்புலத்தோன்பால் ஆற்றுப்படுத்துவது, அப்பகைப் புலத்தே திறையாகப் பெறப்படும் அனைத்தையும் நல்குவன் என்பது குறித்து நிற்றலின், “பகைப் புலத்தோன்......என்பதாம்”என்றார். “அலத்தற் காலையாயினும்,”என்புழி உம்மை புரத்தலின் அருமையை மிகுதிப்படுத்தி நிற்றலின், “உம்மை சிறப்பு”என்றார். நீட்டித்தலை எவ்வழியும் அறியாதானைப் பரிசில் நீட்டிப்பானல்லன்என்பது சிறப்பன்மையான், “நீட்டிப்பானல்ல னென்றுரைப்பினு மமையு”மென்றொழிந்தார். அலத்தற்காலை யாயினும் மண்டை நிணம் பெருப்ப நல்கிப் புரத்தல் வல்லன் என இயைத்துக் கொள்க. நல்கி யென ஒருசொல் வருவித்துக் கொள்க. |