156. கொண்கானங் கிழான்

    கொண்கானங் கிழானது விருந்துண்டு மகிழ்ந்திருக்கும் மோசி
கீரனார் அவனது கொண்கான மலையைக் கண்டு பாடக் கருதினார்.
பாடுமிடத்து அக் கொண்கானத்துக் கிழானையும் பாட நினைந்து,
அவனுடைய கொடைச் சிறப்பையும் வென்றிச் சிறப்பையும் பொருளாக
நிறுத்தி, “இக் கொண்கானம் பிறர் குன்றம்போலாது இரண்டு
நலங்களையுடைத்து; ஒன்று இரப்போருடைய கடன்காரர்களால்
வளைப்புண்டிருக்கும்; மற்றொன்று கொண்கானங் கிழானுக்குத் திறை
செலுத்தி மீளும் சிற்றரசர்களால் சூழப்பட்டிருக்கும்”என்று பாடியுள்ளார்.

 ஒன்றுநன் குடைய பிறர்குன்ற மென்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்
நச்சிச் சென்ற விரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினுங் கிடக்கு மஃதான்று
5நிறையருந் தானை வேந்தரைத்
 திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே. (156)

     திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.

     உரை: பிறர் குன்றம் - பிறருடைய மலைகள்; நன்கு ஒன்று
உடைய வண்மையாதல் - வலியாதல் நன்மையொன்று உடைய;
இரண்டு நன்கு உடைத்து கொண்பெருங் கானம் - எந்நாளும்
இரண்டுநன்மையை யுடைத்துக் கொண்கான மென்னு மலை; அது-;
நச்சிச் சென்ற இரவலர் சுட்டி - தன்பால் பரிசில் நச்சிப் போன
இரப்போர் காரணமாக; தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் - தான்
அவர்க்கு முன்பு கடன் கொடுத்தோராலே  வளைப்புண்ணப்பட்டுக்
கிடப்பினும் கிடக்கும்;அன்று - அதுவன்றி; நிறை யருந் தானை
வேந்தரை - நிறுத்தற்கரிய படையையுடைய   அரசரை;   திறை
கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்து - திறை   கொண்டு
அவரை   மீட்கும் தலைமையுமுடைத்து எ-று.

     இரவலர் சுட்டி யென்று  பாடமோதி, இரவலர் கருதிக்கொண்டு
புகழ்களைத் தொடுத்துண்ணக்  கிடக்கினும்   கிடக்கும்  எனவும், இரவலர்
எமது  எமதென்று கூறிட் டுண்ணக்   கிடக்கினுங்  கிடக்கும் எனவும்
உரைப்பினு  மமையும்.   இது  கொடைச்   சிறப்பும் வென்றிச் சிற்புபம்
கூறியவாறு.

     விளக்கம்: கொண்பெருங்   கானக்  குன்றத்துக்கும்  ஏனைக்
குன்றங்கட்குமுள்ள  வேற்றுமை   கூறுவார்,   கொண்பெருங்  கானம்
வண்மையும்  வலியுமாகிய   இரு  நலங்களையும்  உடைத்து; ஏனைக்
குன்றங்கள் இரண்டனுள்  ஒன்றே  யுடைய  என்றார்.  இவையே யன்றி,
கொண்பெருங்  கானம்   இரவலர்க்குக் கடன் கொடுத்தோராலும் திறை
செலுத்தும்  வேந்தராலும்  சூழப்பட்டிருக்கும்  என்றார்.  எனவே, இச்
சிறப்பு ஏனைக் குன்றங்கட்கு இல்லை யென்பதாம். இரவலர்க்குக் கடன்
கொடுத்தோர், இரவலர் பரிசில் பெறுவதில்  தப்பாராகலின்  தமக்குரிய
கடனைத் தாம்   தவறாதே பெறலாம்  என்ற  கருத்தால் குன்றத்தைச்
சூழ்ந்திருந்தன ரென்றா ரெனக் கொள்க.