177. மல்லிகிழான் காரியாதி

     காரியாதி யென்பவன் மல்லி யென்னும் ஊர்க்குத் தலைவன். இது
சீவில்லிபுத்தூர் நாட்டின்கண் உள்ளத்தோர்    ஊர். இவன் வேளாண்குடி
முதல்வனாய்ப் பரிசிலர்க்கு வேண்டுவன வழங்கிப் புலவர் பாடும் புகழ்
பெற்றவன். சோழன்  குளமுற்றத்துத் துஞ்சிய  கிள்ளிவளவனையும் பூஞ்
சாற்றூர்ப்பார்ப்பன் விண்ணந்தாயனையும் பாடிப் பரிசில் பெற்று மேம்பட்ட
ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் காரியாதியின் ஊராகிய மல்லிக்குச்
சென்று அவனது    கைவண்மையைக்    கண்களிப்பக்     கண்டார்.
அங்கே இம்மல்லிகிழான் தந்த கள்ளை அவ்வூரிடத்துக் குறிய பல
அரண்களிலிருந்துஆடவர் பலரும் நிரம்ப வுண்டு தேக்கெறிந்து
புளிச்சுவையை  விரும்பிக் களாப்பழத்தையும்    துடரிப் பழத்தையும்  
விரவி யுண்பதையும், பின்பு கான்யாற்றின் எக்கர் மணற்குன்றேறியிருந்து
குடநாட்டு    மறவர் எறிந்து கொணர்ந்த எய்ப்பன்றியின் கொழுவிய
நிணங் கலந்து சமைத்த சோற்றை வருவார்க் களித்துத் தாமும்
பனையோலையில் வைத்து விடியற் காலையில் உண்பதையும் கண்டனர்.
உடனே அவர் நெஞ்சில் இவ்வா றுண்ணும் பரிசிலர் வேந்தர் நெடுநர்
முன்னே நின்று கண் சிவக்க நாவுலரப் பாடிக் களிறு முதலிய பரிசில்
பெறுவது தோன்றிற்று. வேந்தர் செய்யும் களிற்றுக் கொடையையும்,
இக்காரியாதி விடியலில் தரும் சோற்றையும் சீர் தூக்கினார்; “மன்னர்
ஒண்சுடர் நெடுநகர், வெளிறு கண்போகப் பன்னாள் திரங்கிப் பாடிப்பெற்ற
பொன்னணி யானை பெரும்புலர் வைகல் சீர்சா லாது”என்ற கருத்தமைத்த
இப் பாட்டைப் பாடி, இதன்கண் மேலே தாம் கண்ட காட்சியைச்
சொல்லோவியம் செய்துள்ளார்.

 ஒளிறுவாண் மன்ன ரொன்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமரெனின் யாவரும் புகுப வமரெனில்
5திங்களு நுழையா வெந்திரப் படுபுழைக்
 கண்மாறு நீட்ட நணிநணி யிருந்த
குறும்பல் குறும்பிற் றதும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்க ணாடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
10மட்டற னல்யாற் றெக்க ரேறிக்
 கருங்கனி நாவ லிருந்துகொய் துண்ணும்
பெரும்பெய ராதி பிணங்கரிற் குடநாட்
டெயினர் தந்த வெய்ம்மா னெறிதசைப்
பைஞ்ஞிணம் பொருத்த பசுவெள் ளமலை
15வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
 இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.
 (177)

     திணையுந் துறையு மவை. மல்லிகிழான் காரியாதியை ஆவூர்
மூலங்கிழார் பாடியது.

     உரை: ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் -
விளங்கியவாளையுடைய வேந்தரது  ஒள்ளிய விளக்கத்திணையுடைய
உயர்ந்த கோயிற் கண்; கண் வெளிறு  போக - கண்ணொளி கெட;
பன்னாள் திரங்கி - பன்னாள் நின்றுலர்ந்து; பாடிப் பெற்ற
பொன்னணி யானை - அவ்விடத்துப்    பாடிப்    பெற்ற  
பொற்படை  யணிந்த யானை; தமரெனின்    யாவரும்  புகுப -
தமக்குச் சிறந்தாராயின் எல்லாரும் எளிதிற் புகப் பெறுவர்;
அமரெனின் திங்களும் நுழையா - போராயின் திங்களாலும்
நுழையப்படாத;  எந்திரப்     படு புழை - பொறிகளைப்
பொருந்திய இட்டிய வாயிலை யுடைத்தாய்; கள் மாறு நீட்ட - கள்ளை
யொருவர்க்கொருவர் மாறு மாறாக நீட்டிட; நணி நணி இருந்த குறும்
பல்    குறும்பின் - ஒன்றற்கொன்று அணித்தாயிருந்த குரிய பல
அரணின் கண்ணேயிருந்து; ததும்ப வைகி - அக்கள்ளை நிரம்பவுண்டு
காலங் கழித்து; புளிச் சுவை வேட்ட செங்கண் ஆடவர் - பின்னைச்
செருக்கினால் விடாய் மிக்குப் புளிச்சுவையை விரும்பிய மதத்தாற்
சிவந்த கண்ணையுடைய ஆண் மக்கள்; தீம் புளிக் களாவொடு துடரி
முனையின் - இனிய புப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப்
பழத்தைத் தின்று வெறுப்பின்; மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி
- கரை மரத்துப் பைந்தேன் அரித் தொழுகுகின்ற நல்ல கான்
யாற்றினது மணற்குன்றின் கண்ணே யேறி; கருங் கனி நாவல் இரந்து
-கொய்துண்ணும் கரிய நாவற்பழத்தைப் பறித்து இருந் துண்ணும்;
பெரும் பெயர் ஆதி - பெரிய பெயரையுடைய னாகிய ஆதியினது;
பிணங் கரில் குட நாட்டு - பிணங்கிய அரில் பட்ட காட்டடையுடைய
குடநாட்டின்கண்; எயினர் தந்த எய்ம்மான் எறி தசை - மறவர் எய்து
கொடு வரப்பட்ட எய்ப் பன்றியினது கடியப்பட்ட தசையினது;
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை - செவ்வியையுடைய
நிணமிக்க புதிய வெண்சோற்றுக் கட்டியை; வருநர்க்கு வரையாது
தருவனர் சொரிய - வருவார்க்கெல்லாம் ஒப்பக் கொடுவந்து
சொரிய; இரும் பனங்குடையின் மிசையும் பெரிய பனையோலையான்
இயன்ற குடையிலே நுகரும்; பெரும்புலர் வைகறைச்சீர் சாலாது -
பெரிய புலர்ச்சியையுடைய விடியற்காலத்துச் சீருக்கு நிகரொவ்வாது எ-று.

எந்திரப் புழையையுடைய நணிநணியிருந்த குறும்பிற் கள்மாறு
நீட்டத் தும்பவுண்டு வைகிப் புளிச்சுவை வேட்ட ஆடவர் முனையின்
எக்கரேறி யிருந்து நாவற்கனி கொய்துண்ணு மென இயையும். பாடிப்
பெற்ற யானையும் பன்னாள் திரங்கிப் பெற்றமையின், பனங்குடையின்
மிசையும் வைகறைச்சீர் சாலாதென்றார். வெளிறுகண் போகப்
பாடியெனக் கூட்டி, வெண்மை இடத்தினின்றும் நீங்கப் பாடி யெனினு
மமையும். வைகறைச்சீர் சாலாதென்றது, அக்காலத்து அவன் செய்யும்
சிறப்பினை நோக்கி. ‘‘கைம்மாறு நீட்டி நணிநணி யிருந்து குறும்பல்
குறும்பின் ததும்ப உண்டு வைகி’’ என்று பாடமோதுவாரு முளர்.

விளக்கம்: மன்னரை ‘‘ஒளிறுவாண் மன்ன’’ ரென்றும், அவர்
மனையை, ‘‘ஒண்சுடர் நெடுநக’’ ரென்றும் கூறியது தாம் வேண்டிய சிறப்பின்மை
முடித்தற்கு கண் வெளிறு போதல், மரம் வெளிறு போவதுபோலப் பயனாகிய 
ஒளி இல்லையாதல். ஒளியிழந்த கண் வெளிதாதலை இன்றும் காணலாம். 
கண் ணென்பதற்கு இடமெனப் பொருள் கொண்டு வெண்மைப்பகுதி 
கண்ணிடத்தினின்றும் நீங்க என்று உரைத்தலு முண்டென்பர் உரைகாரர். 
வெண்மை நீங்குதலாவது, நெடுங்காலம் பாடுதலால்நன்கு சிவந்து விடுதல். 
ஆதிக்குத் தமராயினார் இனிது புகுப வென்பதனால் மாறுபட்டோர் 
புகுதற்கரிதாதலும் காட்டினார். காரியாதியின் அரண்களில் அமைந்திருந்த 
எந்திரப் படு புழையின் இயல்பு கூறுவார், போர்க்காலத்தே காவற்சிறப்பு 
இப்பெற்றித் தென்றற்கு,‘‘அமரெனின் திங்களும் நுழையா’’ தென்றார். கள்ளை 
மிக வுண்டவழி, அதன் களிப்பால் கண் சிவத்தலின், கள்ளுண்டு மதர்க்கும்
மறவரைச் செங்கணாடவ ரென்றார். துடரி, ஒருவகைப் பழம்; ஈச்சம்
பழம் என்றும் கூறுப. இருந்து கொய்துண்ணும் என்பதைக் கொய்து
இருந்துண்ணும் என மாறுக. பிணங்கு அரில் குடநா டென்பதில், அரில்
என்பது ஆகுபெயராய் அரில் பட்ட காட்டை உணர்த்திற்று. அரில்
பிணக்கு; செடி கொடிகள் தம்மிற் செறிந்து பின்னக்கிடப்பது. பெருத்த
என்புழிப் பெருத்தல் மிகுதல். இருள் மயங்கு வைகறையின் வேறுபடுத்த,
‘‘பெரும்புலர் வைகறை’’ யென்றார். பனையோலையாற் செய்யப்பட்டு
உட்குடைவாக இருத்தலின், ‘‘பனங்குடை’’ எனப்பட்டது.

இம் மல்லிகிழானுக்கு இப்போதுள்ள சீவில்லிபுத்தூர் உரியது. சீவில்லிபுத்தூர்
வைத்தியநாதசாமி கோயில் கல்வெட்டுக்களிலும், ஆண்டாள் கோயில் கல்
வெட்டுக்களிலும் ‘‘மல்லிநாட்டுச் சீவில்லிபுத்தூர்’’ என்றே குறிக்கப்படுகிறது.
இந்த மல்லிநாட்டுப்புத்தூர் பின்னர் மல்லிபுத்தூர் என்றும், பிற்காலத்தில்
வில்லிபுத்தூரென்றும் மருவியது. வில்லிபுத்தூராகி வழங்கிய காலத்தில்
பெரியாழ்வாரும், திரு ஆண்டளும் தோன்றி இதனைத் தம்முடைய தெய்வப்
பாடலால் சீவில்லிபுத்தூராகுமாறு செய்தனர். இவ்வூர்க்கு அவ்வப்போது
மலையிலிருந்து வரும் பழையரே இப்பாட்டின்கட் கூறப்படும் குடவராக
இருக்கலாம். இப் பழையர் ‘‘பளியர்’’ என இந்நாட்டவரால் வழங்கப்படுகின்றனர்.