196. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பாண்டி நாட்டிலிருந்து அரசுபுரிந்து வருகையில், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் முதலிய பேரரசர்களைப் பாடி அவர்கள் தந்த பரிசில் பெற்றுச் சிறப்புற்றிருந்த ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார், இந்த நன்மாறனுடைய மேம்பாட்டைக் கேள்வியுற்று இவன்பால் வந்தார். இவன் மதுரை மருதனிளநாகரால், கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப், பிறைநுதல் விளங்கு மொருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார் மாற னென்று பாராட்டவும், மதுரைக் கணக்காயனார் மகனாரால், மணிமிடற்றோனும், பனைக்கொடியோனும், திருமாலும், முருகனும் என்ற ஞாலம் காக்கும் கால முன்பின், தோலா நல்லிசை நால்வரையும் ஒவ்வோராற்றலின் ஒத்தலின், இப் பாண்டியற்கு அரியவும் உளவோ? என வியந்து, வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத் தண்கதிர் மதியம் போலவும், நின்று நிலைஇயர் உலகமோ டுடனேஎன வாழ்த்தவும், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரால், இமிழ் குரல் முரச மூன்றுட னாளும், தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தெனச் சிறப்பிக்கவும் பெற்றிருத்தலின், இவனைக் காண்பதில் ஆவூர் மூலங்கிழார்க்கு விருப்பமுண்டாவதாயிற்று. அக்காலை மூலங்கிழார்க்கு வறுமைத் துன்பமும் வந்து பொருந்தியிருந்தது. இந்நிலையில் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் இவர்க்குச் செவ்வி கொடானாயினன். செவ்வி பெறுதல் வேண்டிச் சின்னாள் தங்கினார். செவ்வி பெற்றுத் தமது புலமை நலத்தையும் தோற்றுவித்தார். ஓரொருகால், அவரைச் சிறப்பிக்கக் கருதினான்போல நன்மாறனும் நடந்துகொண்டானே யன்றிப் பரிசில் நல்கினானின்லை. ஆவூர் மூலங்கிழார்க்கு உள்ளத்தே அடங்காத வெம்மை யுண்டாயிற்று. அது பொங்கி வெளியே ஒரு பாட்டாய் வெளிவந்தது. அந்த இப்பாட்டின்கண், வேந்தே, இயல்வதனை இயலுமெனச் சொல்லி யீதலும், இயலாததனை இயலாதெனச் சொல்லி விடுதலும், தாளாண் மையுடையார்க்குரிய நற்செயல்களாம். இயலாததை இயலு மென்றலும், இயல்வதனை யியலா தென்றலும் இரப்போரை யேமாற்றும் புகழைக் கெடுத்துக்கொள்ளும் செயல்களாகும். இரப்போராகிய எமது வாழ்வில் இக் குறைபடும் செயல்கள் புரவலாபால் உளவாதலை இதுகாறும் கண்டதில்லை; இப்போதே கண்டோம். வேந்தே, நின் வாழ்நாள் சிறக்க; நின்புதல்வர் நோயிலராகுக; பனி யென்றும் வெயிலென்றும் பாரேன்; கற்புடை என் மனைவியை நினைந்து யான் செல்கின்றேன் என்ற கருத்தைப் புலப்படுத்தினார். இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனும், தவற்றுக்கிரங்கி அவர்க்கு வேண்டுவன நல்கிவிடுத்தான். | ஒல்லுவ தொல்லு மென்றலும் யாவர்க்கும் ஒல்லா தில்லென மறுத்தலு மிரண்டும் ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே ஒல்லா தொல்லு மென்றலு மொல்லுவ | 5 | தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே | | இரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை அனைத்தா கியரினி யிதுவே யெனைத்தும் சேய்த்துக் காணாது கண்டன மதனால் | 10 | நோயில ராகநின் புதல்வர் யானும் | | வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நாணல தில்லாக் கற்பின் வாணுதல் மெல்லியற் குறுமக ளுள்ளிச் | 15 | செல்வ லத்தை சிறக்கநின் னாளே. (196) |
திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் கடாநிலை. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: ஒல்லுவது ஒல்லும் என்றலும் - தம்மாற் கொடுக்க இயலும் பொருளை இயலுமென்று சொல்லிக் கொடுத்தலும்; யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும் - யாவர்க்கும் தம்மாற் கொடுக்க இயலாத பொருளை இல்லை யென்று சொல்லி மறுத்தலுமாகிய; இரண்டும் ஆள்வினை மருங்கில் கேண்மைப் பால் - இரண்டும் தாளாண்மைப் பக்கத்து உளவாகிய நடபின் கூற்றினுள்ளன; ஒல்லாது ஒல்லும் என்றலும் - தனக்கு இயலாததனை இயலுமென்றலும்; ஒல்லுவது இல்லென மறுத்தலும் - இயலும் பொருளை இல்லையென்று மறுத்தலுமாகிய; இரண்டும் வல்லே இரப்போர் வாட்டம் - இரண்டும் விரைய இரப்போரை மெலிவித்தல்; அன்றியும் புரப்போர் புகழ் குறைபடூஉம் வாயில் - அன்றியும் ஈவோர் புகழ் குறைபடும் வழியாம்; இனி அனைத்தாகியர் இப்பொழுது நீ எம்மளவிற் செய்த செய்தியும் அத்தன்மைத்தாகுக; இது எனைத்துத் சேய்த்துக் காணாது கண்டனம் - இஃது எத்துணையும் எங்குடியிலுள்ளார் முன்பு காணாதது யாம் கண்டேம்; அதனால் - அத் தீங்கினால்; நின் புதல்வர் நோயிலராக - நின் பிள்ளைகள்நோயின்றியே யிரப்பாராக; யானும் வெயிலென முனியேன் - யானும் வெளிலென்று நினைந்து போக்கை வெறேனாய்; பனி யென மடியேன் - பனியென்று கொண்டு மடிந்திரேனாய்; கல் குயின் றன்ன என் நல்கூர் வளிமறை - விட்டு நீங்காமையால் கல்லாற் செய்தாற்போன்ற என் நல்குரவின் மிகுதியான் வளி மறையாகிய மனையிடத்து; நாணலதுஇல்லாக் கற்பின் - நாணல்லது வேறில்லாத கற்பினையும்; வாணுதல் மெல்லியல் - குறுமகள் உள்ளி ஒளியை யுடைத்தாகிய நுதலினையும் மெல்லிய இயலினையுமுடைய குறுமகளை நினைந்து; செவ்வல் - போவேன்; நின் நாள் சிறக்க - நின்னாயுள் மிகுவதாக எ-று.
நோயிலராக நின் புதல்வர்என்பதூஉம், சிறக்க நின் நாள் என்பதூஉம் குறிப்பு மொழி. அன்றி, பரிசில் மறுத்தலான் இவன் புதல்வர்க்கும் இவனுக்கும் தீங்கு வருமென்றஞ்சி நோயிலராக வெனவும், சிறக்க நின் நாளெனவும் கூறினாராக வுரைப்பினு மமையும். நல்குர வென்பது நல்லெனக் குறைந்துநின்றது. கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறையென்பதற்குக் கல்லாற் செய்தாற்போன்ற பயன் கொள்ளாத யாக்கையுடைய எனது நல்கூர்ந்த வளிமறை யெனவும், கல்லைத் துளைத்தாற்போன்ற காற்றடை மாத்திரையாகச் செய்யப் பட்ட நல்கூர்ந்த என் மனை யெனவு முரைப்பாரு முளர்.
விளக்கம்: கொடுப்பது போலக் காட்டிக் கொடாது நீட்டித்தமை யின், இஃது இரப்போர் வாட்டலன்றியும், புரப்போர் புகழ் குறைபடும் வாயிலுமாதலின், அனைத்தாகியர்என்றார். இதனைக் கூறும் பொருட்டே ஒல்லுவ தொல்லு மென்றலும்முதலாயவற்றை யெடுத்தோதினார். என்றல். என்று சொல்லிக் கொடுத்தல் அத்தை, அசைநிலை. கண்டனம் எனத் தன்மைக்கண் கூறுதலின், காணாமை தம் குடியிலுள்ளோர் வினையாயிற்று. அதனால், எம் குடியிலுள்ளார் முன்பு காணாதது யாம் கண்டேம் என்றார். எனவே, இப் பாண்டியன் முன்னோரும், இதுகாறும் பரிசில் நீட்டித்தது இல்லை யென்றாராயிற்று. குடிப் பிறப்புக்கு மாறாகச் சான்றோர் நோவன செய்த குற்றத்தால் நின் புதல்வர் நோயுற்று வருந்துவ ரென்பார், அதனால் நோயிலராக நின் புதல்வர் என்று குறிப்பு மொழியார் கூறினார். குறிப்புமொழியாவது, எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப், பொருட்புறத்ததுவே குறிப்புமொழி யென்ப (தொல் செய். 177) என்பதனாலறிக; இதனை எதிர்மறைக் குறிப்பென்றும், கூற்றிடை வைத்த குறிப்பென்றும் கூறுவர். முனிவுக்குப் பொருள் வெயிலன்மையின், போக்கை யென்பது வருவிக்கப்பட்டது. நல்குரவு கூர் வளிமறை யென வரற்பாலது, நல்கூர் என வந்ததற்கு அமைதிகாட்டுவார், நல்குர வென்பது நல்லெனக் குறைந்துநின்றது என்றார். நல், வறுமை. நீங்காது பிணித்துக் கொண்டிருத்தலால் வறுமையை, கல்குயின் றன்ன வறுமையேன்றார். மனையின் மேற்கூரை வெயிலும் பனியும் மழையும் மறையா தொழியினும், சுவர் நின்று காற்றை மறைப்பது தோன்ற, வளி மறை யென்றார், |