185. தொண்டைமான் இளந்திரையன் கச்சியைத் தலைநகராகக்கொண்ட தொண்டைநாட்டு வேந்தர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர். அவர்களைத் தொண்டையர் என்றும் வழங்குவர். இவ்விளந்திரையனையும் சான்றோர் தொண்டையோர் மருகஎன்பர். தொண்டை நாட்டுக்கு வடக்கெல்லை வேங்கடமாகும். வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம் (அகம். 213) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதற்குத் தென்னெல்லை பெண்ணையாறும், மேலெல்லை வடார்க்காட்டையும் சேலமா நாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத்தொடருமாமென்பது கல்வெட்டுக்களால் அறிகின்றோம். இத்தொண்டையரை, உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டை யோர்(பெரும்பாண். 454-5) என்றும், பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்(குறுந். 240) என்றும், வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் (அகம்.213) என்றும், சான்றோர் கூறுவதை, நோக்கின் இத் தொண்டையர் யானைப்படை கொண்டு பெரும்போருடற்றும் சிறப்புடையரென்பது தெளிவாம். அதியமான் நெடுமானஞ்சியின் பொருட்டு ஒளவையார் தூது சென்றதும், இத்தொண்டைமான்களில் ஒருவனிடமேயாகும்.
இத் தொண்டைமான்களில் இளந்திரையன் என்பவன் மிக்க சிறப்புடையவன். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார், இருநிலங்கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த், திரை தருமரபின் உரவோன் உம்பல்(பெரும்பாண்.29-31) என்பதனால், இவன் முன்னோன் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டுக்கு வேந்தனாயினானென்றும், அவன் வழித் தோன்றல் இவனென்றும் அறியலாம். வென்வேற்கிள்ளி யென்னும் சோழனுக்கும், நாகநாட்டு வேந்தன் மகள் பீலிவளை யென்பாட்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் அது சிதைந்ததாக, இவன் திரையில் மிதந்து கரை யடைந்தானென மணிமேகலை கூறுகிறது. பின்பு அவன் அக் காரணத்தால் திரையனெனப்பட்டானென்றும், வேந்தன் மகனென்றற் கடையாளமாகத் தொண்டைக்கொடி யணிந்திருந்ததுபற்றி அவன் தொண்டைமானாயினான்; அவனாண்ட நாடு தொண்டை நாடாயிற்றென்றும் கூறுப. இத்திரையன் தமிழ் வேந்தர் மூவருள்ளும் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் உடைமையாற் சிறந்தவனென்றும், குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண், பகற்செய் மண்டிலம் பாரித் தாங்கு, முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி மேம்பட்டவனென்றும், புலவர் பூண்கட னாற்றிப் பகைவர், கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும், வென்றி யல்லது வினையுடம் படினும், ஒன்றல் செல்லாஉரவோனென்றும், அவன் நாட்டில் ஆறலைகள் வரும் பிற தீங்கு புரிவோரும் இலரென்றும் பெரும்பாணாற்றுப்படை பெரிதெடுத்துப் பேசுகின்றது.
இவ்வாறு செங்கோன்மையால் சிறப்புமிக்க இளந்திரையன் ஆட்சியில் அளியுந் தெறலும் எளிய முறையில் நடந்தன. இவனைப் பகைத்து மலைந்த வேந்தர்களின் மன்றங்கள் பாழ்பட்டன; இவனை நயந்தவர் நாடுகள் நன்பொன் பூப்ப நலமிகுந் தோங்கின. நாடோறும் வேந்தர் பலரும் பல்வேறு வகையில் பணிந்து, நட்புக் கொளல் வேண்டி நயந்திசினோரும், துப்புக் கொளல்வேண்டிய துணையி லோரும், கல்வீ ழருவி கடற்படர்ந்தாங்குஇவன்பால் வந்தவண்ண மிருந்தனர். இவர்கட்கு வேண்டுவனவற்றை அருளிய இவ் விளந்திரையன், அரசியலின் செம்மை குறித்து அவர்கட்குச் சில அறிவுரைகளும் வழங்கினன். அவற்றுட் சில பாட்டுமாம். இங்கே காட்டப்படும் பாட்டு அவற்றுள் ஒன்றாகும். இதன்கண், அரசியலை ஒரு சகடமாக வுவமித்து, சகடத்தை உகைப்பவன் உகைக்குந் திறத்தை மாண்புற அறிந்தானாயின், அஃது இடையூறு சிறிதுமின்றி இனிது செல்லும்; அத்திறம் அறியானாயின், நெறியல்லா நெறியிற் சென்று சேற்றில் அழுந்தி மிக்க துன்பத்துக் குள்ளாவன்; அவ்வாறே அரசியலை நடத்தும் வேந்தன் அரசியல் முறையைத் திறம் பட அறிந்தானாதல் வேண்டும்; அதனால் நாடு நலம் பெறும்; அவனும் சீர்பெறுவான்; அறியானாயின் உட்பகை புறப்பகைகளாகிய சேற்றில் அழுந்திக் கெடுவன்என்று அறிவுறுத்துள்ளான். | கால்பார் கோத்து ஞாலத் தியக்கும் காவற் சாகா டுகைப்போன் மாணின் ஊறின் றாகி யாறினிது படுமே உய்த்த றேற்றா னாயின் வைகலும் | 5 | பகைக்கூ ழள்ளற் பட்டு | | மிகப்பஃறீநோய் தலைத்தலைத் தருமே. (185) |
திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.
உரை: கால் பார் கோத்து - உருளையையும் பாரையும் கோத்து; ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு - உலகின் கண்ணே செலுத்தும் காப்புடைய சகடந்தான்; உகைப்போன் மாணின் - அதனைச் செலுத்து வோன் மாட்சிமைப்படின்; ஊறு இன்றாகி ஆறு இனிது படும் - ஊறு பாடில்லையாய் வழியை இனிதாகச் செல்லும்; உய்த்தல் தேற்றானாயின்- அவன் அதனை இனிதாகச் செலுத்துதலைத் தெளியமாட்டானாயின்; வைகலும் பகைக்கூழ் அள்ளற்பட்டு - அது நாடோறும் பகையாகிய செறிந்த சேற்றிலே யழுந்தி; மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தரும் - மிகப் பல தீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும் எ-று.
இஃது உலகாளும் முறைமை கூறுதலை யுட்கொண்டு சகடம் செல்லுறுமாற்றைக் கூறினமையின், நுவலா நுவற்சி யென்னும் அலங்கார மாயிற்று; ஒட்டென்று கூறுவாருமுளர். அன்றி, இதற்கு உலகத்தின்கண்ணே உலகியற்கையை நிறுத்தி, அதனோடு ஞாலத்தின்கண்ணே செலுத்தப்படும் காப்பாகிய சகடம் தன்னைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின், தனக்கு ஓரிடையூறின்றாகி நெறிமுறைமையே நடக்கும்; அதனைச் செலுத்துதல் தெளியானாயின், அச் சாகாடு மறுதலை யென்னும் செறிந்த அள்ளலிலே அகப்பட்டுத் தனக்கும் தன்கீழ் வாழ்வார்க்கும் மிகப் பலவாகிய தீக்கேட்டினை மேன்மேலே தருமெனவும் பொருளுரைப்பர். இப் பொருட்குப் பாரென்றது, உலகிற்கையை. கால் - உருளை.
விளக்கம்: உலகாளு முறைமை கூறுதலை யுட்கொண்டு உரைக்கும் மிடத்து, அரசியலாகிய சகடத்தை யுகைப்போனாகிய வேந்தன் மாட்சிமைப்படின், ஊறுபாடின்றி ஆட்சியைக் கடைபோக இனிது செலுத்துவன்; அதனைச் செலுத்து முறைமையை அறியானாயின், நாளும் உட்பகையும் புறப்பகையுமாகிய இவற்றிடையே அகப்பட்டுத் தனக்கும் தன்னாட்டவரக்கும் மிகப் பல துன்பத்தை மேன்லேும் செய்து கொள்வன் எனவரும். இப் பாட்டின் கருத்தைத் திருத்தக்கதேவர், ஆர்வலஞ் சூழ்ந்த ஆழியலைமணித் தேரை வல்லான், நேர்நிலத் தூருமாயின் நீடுபல் காலஞ் செல்லும், ஊர்நில மறிதல் தேற்றா துருமேல் முறிந்து வீழும், தார்நில மார்பவேந்தர் தன்மையு மன்ன தாமே(சீவக. 2909) என்று கூறுதல் காண்க. |