33. சோழன் நலங்கிள்ளி

     ஆசிரியர் கோவூர் கிழார் இப் பாட்டின்கண் சோழன் நலங்கிள்ளியின்
வென்றி நலம்  கூறலுற்று,  “வேந்தே,   தென்னவன்   நன்னாட்டிலுள்ள
ஏழெயில்களின் கதவுகளை யெறிந்து, அவ்விடத்தே நின் புலிப்பொறியைப்
பொறிக்கும் ஆற்றலுடையை; நின்னைப் பாடுவோர் வஞ்சிப் பாட்டுப் பாட,
நின் படை  வீரர் தங்கியிருக்கும் பாசறைக் கண்ணேயமைந்த தெருவில்
பாணர்க்கு  ஊன்  சோற்றுத்   திரள்   கொடுக்கப்படும்;   இத்தகைய
முனையிருக்கைகள் பல உள்ளன; ஊரிடத்தே அல்லிய மாடும் விழாக்கள்
பல நிகழ்கின்றனவாயினும், விழாக்களினும் முனையிருக்கைகளே பலவாக
உள்ளன” என்று கூறுகின்றார்.

 கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
5. குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
 முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை
10. பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
  தாதெரு மறுகிற் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
15. செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை
 வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்
காம விருவ ரல்லதி யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
20. ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி
 வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே.
(33)

     திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.

     உரை: கான் உறை வாழ்க்கை - காட்டின் கண்ணே தங்கும்
வாழ்க்கையையுடைய; கத நாய் வேட்டுவன் - சினம் பொருந்திய
நாயையுடைய  வேட்டுவன்;  மான்  தசை  சொரிந்த  வட்டியும் -
மானினது தசையைச் சொரிந்த கடகமும்; ஆய் மகள் தயிர் கொடு
வந்த தசும்பும் - இடை  மகள்  தயிர்கொண்டு  வந்த  மிடாவும்;
நிறைய-; ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் - ஏரான் உழுதுண்டு
வாழ்வாரது பெரிய மனையின்கண் மகளிர்;  குளக்கீழ்  விளைந்த -
குளத்துக்கீழ் விளைந்த;  களக்கொள்  வெண்ணெல்  முகந்தனர்
கொடுப்ப - களத்தின்கட் கொள்ளப்பட்ட வெண்ணெல்லை முகந்து
கொடுப்ப;   உகந்தனர்   பெயரும் - உவந்து  மீளும்;  தென்னம்
பொருப்பன்   நன்னாட்டுள்ளும்  -  தென்றிசைக்கட்  பொதியின்
மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டுள்ளும்; ஏழெயில் கதவம்
எறிந்து கைக் கொண்டு - ஏழாகிய அரணின்கட் கதவத்தை யதித்துக்
கைக்கொண்டு; நின் பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை -
நினது பெரிய வாயையுடைய புலியைப் பொறிக்கும் வலியை
ஆதலான்; பாடுநர் வஞ்சி பாட -
நின்னைப் பாடும் புலவர் நினது
மேற்செலவைப் பாட; படையோர் தாதெரு மறுகிற் பாசறை பொலிய -
படைக்கலத்தினையுடையோர் தாதாகிய எருப்பொருந்திய
மறுகினையுடைய பாசறைக்கண்ணே பொலிவு பெற; புலராப் பச்சிலை
இடை யிடுபு தொடுத்த - புலராத பசிய இலையை யிடையிட்டுத்
தொடுக்கப்பட்ட; மலரா மாலைப் பந்து கண்டன்ன - மலராத
முகையினையுடைய  மாலையினது  பந்தைக் கண்டாற்போன்ற; ஊன்
சோற்றமலை - தசையோடு கூடிய பெருஞ் சோற்றுத் திரளையை; பாண்
கடும்பு அருத்தும் - பாண் சுற்றத்தை யூட்டும்; செம்மற்று நின் வெம்
முனை இருக்கை - தலைமையை யுடைத்து நினது வெய்ய  முனையாகிய
இருப்பிடம்;  வல்லோன் - தைஇய - கைவல்லோனாற் புனைந்து
செய்யப்பட்ட; வரி வனப்புற்ற - எழுதிய அழகு பொருந்திய; அல்லிப்
பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப - அல்லிப் பாவை அல்லிய மென்னும்
கூத்தையாடும் அழகை யொப்ப; காம இருவரல்லது - அன்பினையுடைய
துணைவனும் துணைவியுமாகிய இருவரல்லது; யாமத்து - இடையா
மத்தின்கண்; தனி மகன் வழங்காப் பனிமலர்க் காவின் - தனிமகன்
வழங்காத குளிர்ந்த மலரையுடைய காவின்கண்; ஒதுக்கு இன் திணி
மணல் - இயங்குதற்கினிய செறிந்த மணலையுடைய; புதுப் பூம் பள்ளி
வாயில் - புதிய பூவையுடைய சாலையினது வாயிலின்கண்; மாடந்
தொறும் மை விடை வீழ்ப்ப - மாடந்தோறும் செம்மறிக் கிடாயைப்
படுக்க; நீ ஆங்குக் கொண்ட விழவினும் பல - நீ அவ்விடத்து எடுத்துக்
கொண்ட விழவினும் பல எ-று.

     நன்னாட் டுள்ளு மென்ற  வும்மை,  சிறப்பும்மை  அல்லிப்  பாவை
ஆடுவனப்பென்றது. ஆண் கோலமும் பெண்கோலமுமாகிய அவ்விருவரும்
ஆடுங் கூத்தை. படையோர் பாசறை பொலிய வென்பதற்குப் படையோரது
பாசறை பொலிவு பெற  என்றுரைப்பினும்  அமையும்.  பாசிலை மலைய
வென்று பாடமோதுவாரு முளர்.  தனிமகன்  வழங்காவென்றது,  தனித்து
வழங்கின் அப்பொழில் வருத்து மென்பது. களத்துக்கொள் வெண்ணெல்
என்பது, களக்கொள் வெண்ணெல்லெனத் தொக்கது முகந்தனர் கொடுப்ப,
உகந்தனர் பெயரு  மென்பன  வினையெச்சமுற்று.  உழுவை  பொறிக்கு
மாற்றலை யாகலின், பாண்கடும் பருத்தும் நின் வெம்முனை இருக்கை நீ
கொண்ட  விழவினும்  பல  செம்மற்றெனக்  கூட்டுக.  விழ  வென்பது
சிறுசோற்று  விழவினை; வேள்வி யென்றுரைப்பினுமமையும்.

     விளக்கம்: கடகம், ஓலையாற் செய்யப்பட்ட கடகப் பெட்டி குளம் -
ஏரி குளத்தின் கீழுள்ள வயல்களில் விளையும் நெல்லை  வேறிடத்தே
யமைத்த களத்தின்கண் தொகுத்து வையும் பதரும் களைந்து நெல்லைப்
பிரித்துக்கொள்பவாதலின், “குளக்கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்”
என்றார். ஏழெயிற் கதவம் - ஏழெயில் என்பது சிவகங்கையைச் சார்ந்துள்ள
ஏழு பொன்கோட்டை   யென்னும்  ஊராக  இருக்கலாமென  அறிஞர்
கருதுகின்றனர். இப் பாட்டின்கட் கூறப்படும் பாண்டி நாட்டு மருத வளமும்
அவ்வூர்ப் பகுதியின் இற்றை நிலையும் இக் கருத்தை வலியுறுத்துகின்றன.
வஞ்சி பாடுதல், வஞ்சித் துறைப் பாடாண் பாட்டைப் பாடுதல்; அத்திணைக்
குரிய துறைகளை விதந்து பாடுதலுமாம். முல்லை யரும்புகளாற் றொடுத்த
பூப்பந்து போலச் சோற்றுத் திரளிருந்த தென்பதாம். திரள், திரளை யென
வந்தது. வரிவனப்பு, வரையப்படும்  அழகு;  அதனால்  ஈண்டு “எழுதிய
அழகு” எனப்பட்டது. அல்லிய மென்னும் கூத்தானது கண்ணன், கஞ்சன்
விடுத்த யானையின் கோட்டை யோசித்தற்காடிய கூத்து எனச் சிலப்பதிகார
வுரை கூறுகிறது.  அல்லிப்பாவை, ஆணும் பெண்ணுமாய கோலமுடைய
பாவை;   அலிப்  பேடெனச்  சிலப்பதிகார  வுரைகாரர்  கூறுவர்.  இக்
கூத்தாடுவோர்  வட்டணையும்  அவிநயமு  மின்றி  எழுதிய  வோவியம்
போல்வராதலின், “வரிவனப் புற்ற அல்லிப் பாவை யாடு வனப்பு” என்றார்.
பள்ளி - சாலை. காம விருவர் வழங்கின் வருத்தம் செய்யாது  தனிமகன்
வழங்கின்   அப்பொழில்   வருத்து    மென்றது,    தனித்தோர்க்குக்
காமவுணர்ச்சியை   யெழுப்பி  வருத்தும்  மென்றது,   தனித்தோர்க்குக்
காமவுணர்ச்சியை  யெழுப்பி   வருத்தும்   என்பதாம்.   சிறு   சோறு,
பொருஞ்சோறு என விழாவகை யுண்மையின், சிறு சோற்று விழா
வென்றார்.