100.அதியமான் நெடுமான் அஞ்சி

     குடிக்குரிய முதன்மகன் பிறந்த காலத்தில், பிறந்த சின்னாட்
கழித்துத் தந்தை  போர்க்குரிய  உடை  உடுத்துச்  சான்றோர் சூழச்
சென்று அம்மகனைக் காண்டல் பண்டைத் தமிழர் மரபு; உலகிற்பிறந்த
மகன், முதன்முதல்  தன்  தந்தையைக்  காணுமிடத்து  அவன் நெஞ்சில்
போர்க்கோலமும் போர்மறமும் நன்கு பதிய வெண்டுமென்பது கருத்து;
அக் காலநிலை  போர்மறவரையே  பெரிதும்   வேண்டியிருந்தது.
அதியமானுக்கு முதன் மகனாகிய பொகுட்டெழினி பிறந்த சின்னாட்குப்
பின் அதியமான் அவனைக் காணச் சென்றான். அக்காலை ஒளவையார்
அங்கே இருந்தார். அவர் அதியமானது போர்க்குரிய மறநிலையைத் தாம்
குறைவறக் கண்ட காட்சியை இப்பாட்டின் கண் விளங்கக் கூறியுள்ளார்.
 
 கையது வேலே காலன புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு
5வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னு மாறாது சினனே யன்னோ
உய்ந்தன ரல்லரிவ னுடற்றி யோரே
10செறுவர் நோக்கிய கண்டன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே. (100)

     திணையுந் துறையு மவை. அதியமான் தவமகன் பிறந்தவனைக்
கண்டானை அவர் பாடியது.

     உரை: கையது வேலே - கையின் கண்ணது வேலே; காலன
புனை கழல் - காலின் கண்ண அணிந்த வீரக் கழல்; மெய்யது
வியர் - உடம்பின் கண்ணது வேர்ப்பு; மிடற்றது பசும்புண் -
மிடற்றின் கண்ணது ஈரம் புலராத பசிய புண்; வட்கர் போகிய வளர்
இளம் போந்தை - பகைவர் தொலைதற் கேதுவாகிய வளரும் இளைய
பனையினது;  உச்சிக்  கொண்ட - உச்சிக்  கண்ணே  வாங்கிக்
கொள்ளப்பட்ட;  ஊசி  வெண்  தோட்டு - ஊசித்தன்மையைப்
பொருந்திய வெளிய தோட்டையும்; வெட்சி மாமலர் வேங்கையொடு
விரைஇ - வெட்சியினது பெரிய மலரையும் வேங்கைப் பூவுடனே
விரவி; சுரி இரும் பித்தை பொலியச் சூடி - சுருண்ட கரிய மயிர்
பொலிவுபெறச் சூடி; வரிவயம் பொருத வயக் களிறு போல -
புலியொடு பொருத வலிய யானையை யொப்ப; இன்னும் மாறாது
சினன் - இன்னமும்
நீங்காது சினம் ஆதலால்; அன்னோ - ஐயோ;
உய்ந்தனர் அல்லர் - பிழைத்தாரல்லர்;   இவன்  உடற்றியோர் -
இவனைச் சினப்பித்தவர்கள்; செறுவர் நோக்கிய கண் - பகைவரை
வெகுண்டு பார்த்த கண்; தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனா -
தன்னுடைய புல்வனைப் பார்த்தும் சிவப்பமையா வாயின எ-று.

     காலன புனைகழ லென்பது, வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின;
போர்த்தோறும் வென்றுகட்டின வெனவுமாம். உம்மை: சிறப்பு.
தோட்டையும் மலரையும் வேங்கையொடு விரைஇச் சூடிச் செறுவர்
நோக்கிய கண் சிறுவனை நோக்கியும் சிவப்பானா; ஆதலால், அன்னோ,
இவனுடற்றியோர் உய்ந்தன ரல்லரெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வட்கா
ரென்பது வட்கரெனக் குறுகிநின்றது; வட்கர் - குற்ற மெனினுமமையும்.

     விளக்கம்: நன்கு ஆறாத புண், பசும் புண் என்றும் ஈரம் புலராத
பசும் புண் என்றும் கூறப்பட்டது. சுரிதல் - சுருளுதல். வரி வயம் -
வரிகளையுடைய புலி. போர்க்கோலம் கண்டு கூறுதலின், “உய்ந்தனரல்லர்
இவன் உடற்றியோர்”என்றார். சிறுவரைக் காணின் செறுநரும் விழைவர்;
இவன் மறம் அவரினும் மிக்க தென்பார், “சிறுவனை நோக்கியும்
சிவப்பானா”வென்றார்; “செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்”
(அகம்:66) எனப் பிறரும் கூறுதல் காண்க.