69. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

     இக் கிள்ளிவளவனும் உரையூரின்கண் ணிருந்து சோழநாட்டை ஆட்சி
செய்த வேந்தன். ஒருகால், ஆலத்தூர், கிழா ரென்ற சான்றோர் இவனைக்
காண்டற்குச் சென்றார். அங்கே வாயில் காப்போர் ஒரு தடையும் செய்யாது
அவரை உட்புக விடுத்தனர். இவனும் அவரை அன்புடன் வரவேற்றான்.
அங்கே இவனுடன் அவர் சின்னாள் தங்கினார். அப்போது அவர் இவனது
தானைச் சிறப்பையும் போர்க்குச் சென்று பாடி வீட்டில் தங்கும் இருப்பையும்
வேற்படையில் மாண்பையும் நேரிற் கண்டு மகிழ்ந்தார். முடிவில் இவன்
அவர்க்கு மிக்க பொருளை நல்கிச் செல விடுத்தான். இவன் பெற்ற
பெருவளத்தைப் பாண னொருவற்குக் கூறி, ஆற்றுப்படுக்கும் வகையில்
இப்பாட்டால் வளவனைச் சிறப்பித்தார்.

கையது கடனிறை யாழே மெய்யது
புரவல ரின்மையிற் பசியே யரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி யுடுத்த வுயவற் பாண
5.பூட்கை யில்லோன் யாக்கை போலப்
பெரும்புல் லென்ற விரும்பே ரொக்கலை
வையக முழுதுடன் வளைஇப் பையென
என்னை வினவுதி யாயின் மன்னர்
அடுகளி றுயவுங் கொடிகொள் பாசறைக்
10.குருதிப் பரப்பிற் கோட்டுமா தொலைச்சிப்
புலாக்களஞ் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே
பொருநர்க் கோக்கிய வேல னொருநிலைப்
பகைப்புலம் படர்தலு முரியன் றகைத்தார்
15.ஒள்ளெரி விரையு முருகெழு பசும்பூட்
கிள்ளி வளவற் படர்குவை யாயின்
நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல்
தேர்வீ சிருக்கை யார நோக்கி
நீயவற் கண்ட பின்றைப் பூவின்
20. ஆடும்வண் டிமிராத் தாமரை
சூடா யாத லதனினு மிலையே. (69)

     திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார் பாடியது.

     உரை: கையது - நின் கையகத்து; கடன் நிறை யாழ் -
இலக்கண முறைமை நிரம்பிய யாழ்; மெய்யது - உடம்பின்கண்ணது;
புரவலரின்மையின்
பசி - ஈத்தளிப்போ ரில்லாமையால் பசி;
அரையது வேற்றிழை நுழைந்த வேர் நனை சிதா அர் -
அரையதாகிய வேற்றிழை யூடுபோன வேர்ப்பால் நனைந்த 
சீரையை; ஓம்பி உடுத்த உயவற் பாண - அற்ற மறைத்துடுத்த
வருத்தத்தையுடைய பாண; பூட்கை யில்லோன் யாக்கை
போல - மடியால் மேற்கோ ளில்லாதவன் உடம்பை யொப்ப; பெரும்
புல்லென்ற இரும் பேர் ஒக்கலை - பெரிதாகப் புற்கென்ற மிகப் பெரிய
சுற்றத்தை யுடையையாய்; வையக முழுதும் வளைஇ - உலக
மெல்லாவற்றையும் சூழ்வந்து; என்னைப் பையென வினவுதியாயின் -
பின்னை என்னை மெல்ல வறுமை தீர்ப்பார் யார் எனக்
கேட்கின்றாயாயின் கேளாய்; மன்னர் அடு களிறு உயவும் - வேந்தரது
கொல் யானை புண்பட்டு வருந்தும்; கொடி கொள் பாசறை - கொடி
யெடுக்கப்பட்ட பாடிவீட்டின் கண்; குருதிப் பரப்பில் கோட்டு மா
தொலைச்சி - குருதிப் பரப்பின்கண்ணே யானையைக் கொன்று; புலால்
களஞ் செய்த கலாஅத் தானையன் - புலாலையுடைய போர்க்களத்தை
யுண்டாக்கிய போர் செய்யும் படையை யுடையவன்; பிறங்கு நிலை
மாடத்து உறந்தையோன் - உயர்ந்த நிலையை யுடைத்தாகிய
மாடத்தையுடைய உறையூரிடத்திருந்தான்; பொருநர்க் கோக்கிய வேலன்
- அவன் பொருவோர் பொருட் டெடுக்கப்பட்ட வேலை யுடையவனாய்;
ஒரு நிலைப் பகைப்புலம் படர்தலும் உரியன் - ஒரு பெற்றியே பகைவர்
நாட்டின்கண் போதலு முரியன்; தகைத்தார் - சுற்றப்பட்ட
மாலையையும், ஒள்ளெரி புரையும் உருகெழு பசும்பூண் - ஒள்ளிய
எரியை யொக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னாற் செய்யப்பட்ட
பூணினையுமுடைய; கிள்ளி வளவற் படர்குவையாயின் - கிள்ளி
வளவனிடத்தே செல்குவையாயின்; நெடுங் கடை நிற்றலும் இலை -
அவனது நெடிய வாயிலின்கண் காலம் பார்த்து நிற்றலும் உடையை
யல்லை; கடும் பகல் - விளங்கிய பகற்பொழுதின்கண்; தேர் வீசு
இருக்கை ஆர நோக்கி - அவன் பரிசிலர்க்குத் தேர் வழங்கியிருக்கும்
இருப்பை நின் கண்ணாரப் பார்த்து; நீ அவற் கண்ட பின்றை - நீ
அவனைக் கண்ட பின்பு; பூவி னாடும் வண்டு இமிராத் தாமரை சூடா
யாதல் - பூவின்கணாடும் வண்டு ஊதாத பொற்றாமரைப் பூவைச்
சூடாயாதல்; அதனினும் இலை - அந் நெடுங்கடை நிற்றலினும்
ஊடையை யல்லை; அதனால் ஆண்டுச் செல்வாயாக எ-று.

     தகை தார், தகைத்தா ரென நின்றது; மேம்பட்ட தாருமாம். பாண,
ஒக்கலையாய் வளைஇ வினவுதியாயின், தானையை யுடையவன், உறந்தை
யோன், அவன்பாற் படர்குவையாயின், நின் கைவது யாழாதலானும், மெய்யது
பசியாதலானும் நெடுங்கடை நிற்றலுமில்லை: நீ அவற்கண்ட பின்றைத் தாமரை
சூடாயாதல் அதனினு மிலையென மாறிக் கூட்டுக. பூவாகிய தாமரை யெனினு
மமையும்; அதற்கு இன் அல்வழிச் சாரியை; புகழ்த்தகையில்லோன் 
என்பதூஉம் பாடம்.

     ஒரு நாளுள், முதலன பத்து நாழிகையும் அறத்தின்வழி யொழுகிப் பின்
பத்து நாழிகையும் இறையின் முறைமை கேட்டுச் செய்த பொருளைப்
பரிசிலர்க்குக் கொடுத்து மகிழ்ந்திருத்தலால், “கடும் பகல் தேர் வீசிருக்கை”
யென்றார்.

     விளக்கம்: கடன் - முறைமை; ஈண் டஃது இலக்கண முறைமை குறித்து
நின்றது. மெய்யிடத்துப் பசியுண்மைக் கேது, ஈத்தளிப்போரில் லாமையாதலின்,
அதனைப் பெய்துரைத்தார். பூட்கை யில்லோன் பால் அப்பூட்கை யில்லாமைக்
கேது மடிமையாதலின், அதனை வருவித்தார். பாசறையில் தங்கும் படைக்குரிய
கொடிகள் அப் பாசறையில் கட்டப்படிருக்குமாதலால், “கொடிகொள் பாசறை”
யென்றார். கலாஅத்தானை; கலாஅம் - போர். தகை யென்பது
மேம்பாட்டையும் குறித்தலின், தகைத்தார் என்றற்கு, மேம்பட்ட தாருமாம்
என்றார். நெடுங் கடை நிற்றல் - காவலர்களால் தடைப்பட்டு நிற்பதன்றி,
வளவனைக் காண்பதற்கு வேண்டும் காலம் நோக்கி நிற்றலாதலால், அதனைப்
பெய்துரைத்தார். வேந்தர் பரிசிலர்க்குத் தேர் முதலியன வழங்கும்
திருவோலக்கக் காட்சி காண்டற் கினிதாதலால், “தேர்வீ சிருக்கை
ஆரநோக்கி” என்றார். “ஈர நெஞ்சமோடிச் சேண் விளங்கத் தேர்வீ சிருக்கை
போல” (நற்.381) என்று பிறரும் கூறுதல் காண்க. பூவின் ஆடும் வண்
டிமிராத்தாமரை யென்பது, பூவின் தாமரை யென இயைந்து, பூவாகிய தாமரை
யெனப் பொருள்படின், இன் அல்வழிப் புணர்ச்சிக்கண் வந்த சாரியையாம்.
பூட்கையில்லோன் என்பது சில ஏடுகளில் “புகழ்த்தகை யில்லோன்” என்று
பாட வேறுபாடுற்றுக் காணப்படுகிற தென உரைகாரர்” குறிக்கின்றார்.
பொருளை யீட்டுக வென்பார். “பொருள் செய்க” வென்ப வாதலால்,
ஈட்டப்பட்ட பொருளைச் “செய்த பொருள்” என்றார்.