140. நாஞ்சில் வள்ளுவன்

      ஒருகால் நாஞ்சில் வள்ளுவனது நாட்டிற்கு ஒளவையார் விறலியர்
பலர்சூழ்வரச் சென்றிருந்தார். அக்காலை அவ்விறலியர் தாம் தங்கியிருந்த
மனைப் பக்கத்தே முளைத்துத் தழைத்திருந்த கீரைகளைப் பறித்துச்
சமைக்கலுற்றனர். அவர்கட்கு அதன் கண்ணுறையாக இடற்குத்துவரை யரிசி
இல்லை. அதனால் அவர் பொருட்டு ஒளவையார் வள்ளுவனிடம் சென்று
சில அரிசி தருமாறு வேண்டினர். அவன் அவரது வரிசையும் தன்
நிலைமையும் சீர்தூக்கி மலைபோல்வதொரு களிறு சுமக்கும் அளவில்
களிற்றின்மேலேற்றி விடுத்தான். ஒளவையார் அவன் கொடை மடத்தை
வியந்து, ஏனைச் சான்றோர்களை நோக்கி, “செந்நாப்புலவீர், நாஞ்சில்
வள்ளுவன் மடவன்போலும். யாம் சில அரிசி வேண்ட, எமக்கு
மலைபோல்வதொரு களிற்றை நல்கினனே! இப்பெற்றிப் பட்டதொரு
கொடை மடமும் உண்டுகொல்! பெரியோர் தமது செய்தற்குரிய கடமையை
முன்பின் ஆராய்ந்து செய்யாரோ? கூறுமின்” என்று இப் பாட்டைப்
பாடியுள்ளார்.

 தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாஞ்சில
5அரிசி வேண்டினெ மாகத் தான்பிற
 வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர்
தேற்றா வீகையு முளதுகொல்
10போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே.      (140)

     திணை : அது. துறை : பரிசில் விடை. அவனை ஒளவையார்
பாடியது.

     உரை : தடவு நிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன் - பெரிய
நிலைமையையுடைய பலாமரத்தை யுடைத்தாய நாஞ்சில் மலைக்கு
வேந்தன்; மடவன் மன்ற - அறிவு மெல்லியன் நிச்சயமாக; செந்நாப்
புலவீர் - செவ்விய நாவையுடைய புலவீர்; வளைக் கை விறலியர் -
வளையணிந்த கையையுடைய விறலியர்; படப்பைக் கொய்த அடகின்
கண்ணுறையாக - மனைப்பக்கத்தின்கட் பறித்த இலைக்கு மேல்
துவுவதாக; யாம் சில அரிசி வேண்டினேமாக - யாங்கள் சில அரிசி
வேண்டினேமாக; தான் வரிசை அறிதலின் - தான் பரிசிலர்க் குதவும்
வரிசை யறிதலான்; தன்னும் தூக்கி - எம் வறுமையைப் பார்த்தலே
யன்றித் தனது மேம்பாட்டையும் சீர்தூக்கி; இருங் கடறு வளைஇய -
பெரிய சுரஞ் சூழ்ந்த; குன்றத் தன்னதோர் பெருங் களிறு
நல்கியோன்- மலை  போல்வதொரு  பெரிய  யானையை யளித்தான்;
அன்னதோர் தேற்றா ஈகையும் உளது கொல் - ஆதலான் ஒருவர்க்கு
ஒன்றனைக் கொடுக்குமிடத்து அப்பெற்றிப்பட்டதொரு தெளியாக்
கொடையும் உளதோ தான்; பெரியோர் தம் கடன் போற்றார் -
பெரியோர் தாங்கள் செய்யக் கடவ முறைமையைத் தெரிந்து
பாதுகாத்துச் செய்யார்கொல் எ-று.

    பிறவென்ப தசைநிலை, கொல்லென்பது பின்பும் கூட்டியுரைக்கப்
பட்டது.

    விளக்கம் :
“தடவும் கயவும் நளியும் பெருமை” (தொல். உரி. 22)
என்பவாகலின்,  தடவு  நிலை  யென்றதற்குப் பெரிய நிலைமை யெனப்
பொருள்  கூறினார்.   மறந்தும்  பொய்கூறா  நாவினராகலின், புலவரைச்
“செந்நாப் புலவீர்” என்றார். அவர்கள் இவர்க்கு வள்ளுவனுடைய அறிவு
நலத்தைப் பாராட்டிக் கூறியிருத்தலின், அவர்களை நோக்கி, “நாஞ்சிற்
பொருநன்  மடவன்  மன்ற”  என்றார்.   மேலே  மடவன்  என்பதனைச்
சாதித்தற்குரிய  ஏதுவை  விரித்துக்  கூறலின்  மடவன்  “மன்ற”  என்றார்.
அரிசியென்றது, துவரையின் பருப்பினை; அதனைத் துவரை யரிசி யென்பதும்
வழக்கு. பெருங் களிறு சுமக்கும் அளவாய துவரையை அக் களிற்றோடு
நல்கியதை, பெருங்களிறு நல்கினான் என்றார். தேற்றா ஈகை பெரியோர்பால்
உண்டென்பவாயின், பெரியோர் தாம் தம் கடனைப் போற்றார்கொல்லோ
என்பதுபட, “போற்றாரம்ம பெரியோர்தங் கடனே” என்றார். கண்ணுறை -
வியஞ்சனம்; துணைக்கறி.