93.அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் பகைவர் எதிர்ந்த போர்க்களத்தில், அப்பகைவர் பலரையும் வென்று வெற்றி மேம்பட்டான்; ஆயினும் அவனுடைய முகத்தினும் மார்பினும் பகைவர் எறிந்த படையால் புண்கள் உண்டாயின. போர் முடிவில் வாகை சூடி வென்றி பெற்று நிற்கும் அவனுடைய புண்களைக் கண்ட ஒளவையார்க்குப் பெருமகிழ்ச்சி யுண்டாயிற்று. அதனால் அவர் தம் மகிழ்ச்சியை இப்பாட்டால் புலப்படுத்தினார். இதன் கண், பெருந்தகையே, நீ விழுப்புண் பட்டு ஓய்வு பெறுதலால், நின்னொடு பொருது உடைந்தோடி இழிவுற்ற பகை வேந்தர் நின் வாளால், சிதைந்தழிந்தமையின், நினக்குத் தோற்றார் என்ற பழியும், சுற்றத்தாற் கூடி வாளாற் போழ்ந்தடக்கும் சிறுமையும் இல்லாதபடி பட்டொழிந்தனர்; இனி நின்னைப் போரில் எதிர்ப்பார் இல்லை; ஆகவே நீ இனி முரசு முழங்கச் சென்றாற்றும் போர் எங்கே யுண்டாகப் போகிறதுஎன்ற கருத்துப் படப் படியுள்ளார். | திண்பிணி முரச மிழுமென முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது வந்தோர் தார்தாங் குதலு மாற்றார் வெடிபட் டோடன் மரீஇய பீடின் மன்னர் | 5 | நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த | 10 | நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத் தண்ணல் யானை யடுகளத் தொழிய அருஞ்சமந் ததைய நூறிநீ | 15 | பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே. (93) |
திணை: வாகை. துறை: அரசவாகை. அவன் பொருது புண்பட்டு நின்றானை அவர் பாடியது.
உரை: திண் பிணி முரசம் இழும் என் முழங்க - திண்ணிய பிணிப்பையுடைய முரசம் இழு மென்னும் ஓசையை யுடைத்தாய் ஒலிப்ப; சென்று அமர் கடத்தல் யாவது - மேற் சென்று போரை வெல்லுதல் இனி எங்கே யுளது; வந்தோர் - நின்னோடு எதிர்ந்து வந்தோர்; தார் தாங்குதலு மாற்றார் - நினது தூசிப்படையைப் பொறுத்தற்கும் மாட்டாராய்; வெடி பட்டு ஓடல் மரீஇய பீடில் மன்னர்- சிதறிக் கெட்டுப் போதலிலே மருவிய பெருமையில்லாத அரசரது; நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ - நோயின் பக்கத்தான் இறந்த உடம்பை யணைத்து; காதல் மறந்து - தமது ஆசைத்தன்மையை மறந்து; அவர் தீது மருங்கு அறுமார் - அவர் வாளாற் படாத குற்றம் அவரிடத்தினின்றும் நீக்க வேண்டி; அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையுமுடைய அந்தணர்; திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி - நல்ல கூற்றிலே பொருந்திய பசிய தருப்பைப் புல்லைப் பரப்பினராய்க் கிடத்தி; மறம் கந்தாக - தமது ஆண்மையே பற்றுக்கோடாக; நல்லமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்கென - நல்ல பூசலிலே பட்ட மேம்பட்ட வீரக் கழலினையுடைய வேந்தர் செல்லும் உலகத்திலே செல்க வென்று;வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் - வாளோக்கி யடக்கும் இழிதகவும் பிழைத்தார்கள்; வரி ஞிமிறார்க்கும் வாய் புகு கடா அத்து - வரியையுடைய தேனீ யொலிக்கும் வாயின்கண் வந்து புகுகின்ற மதத்தினையுடைய; அண்ணல் யானை - தலைமை பொருந்திய யானை அடு களத் தொழிய - போர்க்களத்தின்கண்ணே பட; அருஞ் சமம் ததைய நூறி பொறுத்தற்கரிய பூசற்கண்ணே சிதற வெட்டி; பெருந் தகை பெரிய தகைமையையுடையாய்; நீ விழுப்புண்பட்ட மாறு - நீ சீரிய புண்பட்ட படியால் எ-று.
பெருந்தகாய், நீ அருஞ்சமம் ததைய நூறி விழுப்புண் பட்டவாற்றால்நின்னோடு எதிர்த்து வந்தோர் தாம் பீடின் மன்னர் விளிந்த யாக்கை தழீஇ நீள் கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள் போழ்ந் தடக்கலும் உய்ந்தனராதலின், இனி நின்னோடு டெதிர்ப்பா ரின்மையின் முரசு முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவதெனக் கூட்டுக. சென்றமர் கடத்தல் யாவதென்றதனானும் வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தன ரென்றதனானும் வந்தோர் பட்டமை விளங்கும்.
இன்னும் இதற்கு நின் வாளாற் பட்டுத் துறக்கம் பெற்றதே யன்றி வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தனராதலின், அவர்க்குப் பிறர்மேற் சென்று அமர் கடத்தல் என்ன பயனுடைத்தென்றுரைப்பினு மமையும். இனி வந்தோராகிய மன்னர் நீ விழுப்புண் பட்டபடியாலே வாள் போர்ந் தடக்கலு முய்ந்தார். இனி நின்னோ டெதிர்ப்பா ரின்மையின் மேற் சென்ற அமர் கடத்தல் யாவதெனக் கூட்டி அதற்கேற்ப உரைப்பாருமுளர்.
தார் தாங்கலு மென்ற உம்மை இழிவு சிறப்பு. வாள் போழ்ந் தடக்கலு மென்பது நினக்குத் தொலைந்தா ரென்னும் இழிதகவே யன்றித் தமர் வாள் போழ்ந் தடக்கு மிழிவையும் உய்ந்தன ரென எச்சவும்மையாய் நின்றது.
விளக்கம்: இழும் என்றது, முழவின் முழக்கத்தைக் குறித்து நின்றது. நின் தூசிப் படைக்கே ஆற்றாது கெட்டன ரென்பார், தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு ஓடல் மருவினர் என்றார். பகைவர் வாள்வாய்ப் படாது வெடிபட்டு ஓடி வீழ்ந்து மாண்டனர் என்பதாம். போரில் வேலும் வாளுமாகிய படையாற் பட்டோர் நோற்றவர் என்றும், ஏனை நோய் முதலியவாற்றால் இறந்தவர் நோலாதவரென்றும் பண்டையோர் கருதுவர். நோற்றோர் மனற் தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்(அகம்.61) என்று சான்றோர் கூறுதல் காண்க. நோலாத வேந்தரைப் பீடில் மன்னர் என்றார். தீது - வீரர் எறியும் படையால் இறவாமல் நோயுற்று இறந்த பழி, தருப்பையிற் கிடத்தி வாளாற் போழ்ந்து அடக்கியவழி, அப்பழி, வழி வழியாகத் தொடராது என்ப. பசும் புல் - தருப்பை. அஃது உலர்ந்த வழியும் நிறம் மாறாது நெடிதிருத்தல்பற்றி, அவ்வாறு கூறப்பட்டது. வாளாற் போழுமிடத்து, அம்மன்னர்பால் வைத்த காதல் நீங்கி விடுதலால் காதல் மறந்துஎனல் வேண்டிற்று. வாள் போழ்ந்தடக்கல் அவரது நோலாமையை யுணர்த்துதலின் அதுவும் இழிதகவாயிற்று. இப் பீடில் மன்னர், நோலாமையால் வீரராற் படுவதுமின்றி, நோயுற்றிற வாமையால் வாள் போழ்ந் தடக்கலுமின்றி பட்டழிந்தனராதலால், வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் என்றார். வந்தோர், மன்னரை வாள்போழ்ந் தடக்கும் அவ் விழிதகவும் பெறாது உய்ந்தனராதலின், இனி நீ முரசம் முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவதுஎன்பதாம். தூசிப்படை, மருங்கிலும் பின்னும் அணிவகுத்து வரும் கூழைப் படையினும் வலிகுறைந்த தாதலால், தார் தாங்கலுமென்ற உம்மை இழிவு சிறப்பாயிற்று. |