17. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை

     இச் சேரமன்னனின் இயற்பெயர்  சேய்  என்பது.   இவன்  சேரர் 
மரபில் இரும்பொறைக் குடியில் பிறந்தவன்.  யானையினது   நோக்குப்  
போலும் நோக்கினையுடையவன் என்பது பற்றி  இவன் யானைக்கட்சேய்
மாந்தரஞ்சேர லிரும்பொறை யெனப்படுகின்றான். “வேழ நோக்கின் விறல்
வெஞ்சேய்” என இவனைக்  குறுங்கோழியூர்கிழார்  பாராட்டுவர்.  இவன்
காக்கும்  நாடு  “புத்தேளுலகத்  தற்று” என்பது. இவனுக்கும் பாண்டியன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் ஒருகால் நடந்த
போரில் இச்சேரமான்  தோல்வியுற்று  அவனாற்  சிறைப்படுத்தப்பட்டான்.
அச் சிறையினின்றும் தன் வலியினால் சிறைக் காவலரை  வென்று தப்பிச்
சென்று தன் அரசுகட்டிலிற் சிறப்புற்றான்.இவன்பால் நல்லிசைச் சான்றோர்
பலர்க்கும் பேரீடுபா டுண்டு. இவனது இறுதிக் காலத்தே,  வானத்தே ஒரு
மீன் வீழ்ந்தது. அதன் வீழ்ச்சி நாடாளும் வேந்தர்க்கு எய்தும்  தீங்கினை
யுணர்த்தும் குறியென்று அக் காலத்தவர் கருதியிருந்தனர்.  இக்காலத்தும்
ஞாயிற்றினிடத்தே  காணப்படும்  கருப்புக்குறியே   இப்போது   நிகழ்ந்த
போர்க்கும்     வற்கடத்துக்கும்     காரணமென      ஆராய்ச்சியாளர்
கூறுகின்றனரன்றோ!  மீன்  வீழ்ச்சி   கண்ட சான்றோருள் கூடலூர்கிழார்
என்பவர்  பெரு வருத்தமெய்தி  ஏழுநாள்   கழித்து   யானைக்கட்சேய்
மாந்தரஞ்சேர லிரும்பொறை யிறந்தானென்றறிந்தார். அறிந்தவர்,அப்போது
தாம் கொண்ட கையறவை ஒரு பாட்டில் (புறம்.229) குறித்துள்ளார்; அஃது
இந்நூலுள்ளே யுளது.

     இப்பாட்டில்   ஆசிரியர்   குறுங்கோழியூர்கிழார்,  இச்சேரமான்
தலையாலங்கானத்துச்   செருவென்ற   பாண்டியன்   நெடுஞ்செழியன்
சிறையிலிருந்து தன்  வலியாற் றப்பிச் சென்று அரசுகட்டி லேறியிருக்க,
அவனைக்கண்டு; “குடவர்  கோவே,   சேரர்   மரபைக் காத்தவனே,
தொண்டிநகரத்தோர் தலைவனே, நின்னைக் காணவந்தேன்” என்று
கூறுகின்றார். சிறையினின்று இவன்  தப்பிச்  சென்ற   திறத்தை,  தான்
கைப்படுக்கப்பட்ட  குழியினின்றும்  கரையைக் குத்தித் தப்பிப்போகும்
யானை யொன்றின் செயலோ டுவமித்திருப்பது மிக்க நயமுடையதாகும்.

 தென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவெல்லை
குன்றுமலை காடுநா
டொன்றுபட்டு வழிமொழியக்
5.கொடிதுகடிந்து கோறிருத்திப்
 படுவதுண்டு பகலாற்றி
இனிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல
குலையிறைஞ்சிய கோட்டாழை
10.அகல்வயன் மலைவேலி
  நிலவுமணல் வியன்கானற்
றெண்கழிமிசைச் சுடர்ப்பூவின்
தண்டொண்டியோ ரடுபொருந
மாப்பயம்பின் பொறைபோற்றாது
15. நீடுகுழி யகப்பட்ட
 பீடுடைய வெறுழ்முன்பிற்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
20. நீபட்ட வருமுன்பிற்
 பெருந்தளர்ச்சி பலருவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய வுயர்மண்ணும்
25. சென்றுபட்ட விழுக்கலனும்
  பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும்
ஏந்துகொடி யிறைப்புரிசை
வீங்குசிறை வியலருப்பம்
இழந்துவைகுது மினிநாமிவன்
30. உடன்றுநோக்கினன் பெரிதெனவும்
 வேற்றரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழேத்திக்
காண்கு வந்திசிற் பெரும ஈண்டிய
மழையென மருளும் பஃறோன் மலையெனத்
35.தேனிறை கொள்ளு மிரும்பல் யானை
உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானே யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
40.வரையா வீகைக் குடவர் கோவே. (17)

     திணை : வாகை. துறை:  அரசவாகை;  இயன்மொழியுமாம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற்
பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை வலிதிற்
போய்க் கட்டி லெய்தினானைக்  குறுங்கோழியூர்  கிழார்  பாடியது.

     உரை: தென் குமரி - தென்றிசைக்கட் கன்னியும்; வட பெருங்
கல் - வடதிசைக்கண் இமயமும்; குண  குட  கடல்  எல்லையா -
கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக;
குன்று மலை காடு நாடு - நடுவுபட்ட நிலத்துக் குன்றமும் மலையும்
காடும் நாடும் என இவற்றை யுடையோர்; ஒன்று பட்டு வழி மொழிய
- ஒரு பெற்றிப்பட்டு வழிபாடு கூற; கொடிது கடிந்து -தீத்தொழிலைப்
போக்கி; கோல் திருத்தி - கோலைச் செவ்விதாக்கி; படுவதுண்டு -
ஆறிலொன்றாகிய இறையை யுண்டு;பகல் ஆற்றி -நடுவுநிலைமையைச்
செய்து; இனி  துருண்ட  சுடர்  நேமி -  தடை  யின்றாகவுருண்ட
ஒளியையுடைய  சக்கரத்தால்;  முழுதாண்டோர்  வழி   காவல -
நிலமுழுதையும் ஆண்டோரது மரபைக் காத்தவனே;குலை இறைஞ்சிய
கோள் தாழை - குலை தாழ்ந்த கோட்புக்க தெங்கினையும்; அகல்
வயல் - அகன்ற  கழனியையும்;  மலை  வேலி -  மலையாகிய
வேலியையும்;  நிலவு  மணல் வியன் கானல் - நிலாப்  போன்ற
மணலையுடைய அகன்ற கடற் கரையையும்;  தெண்  கழி  மிசைச்
சுடர்ப்    பூவின் -   தெளிந்த   கழியிடத்துத்   தீப்போலும்
பூவினையுமுடைய; தண் தொண்டியோர் அடு பொருந - குளிர்ந்த
தெண்டியி லுள்ளோருடைய அடு பொருந; - மாப் பயம்பின் பொறை
போற்றாது - யானை படுக்கும் குழிமேற் பாவின பாவைத் தன் மனச்
செருக்கால் பாதுகாவாது; நீடு குழி அகப்பட்ட அழத்தால் - நெடிய
குழியின் கண்ணே அகப்பட்ட; பூடுடைய எறுழ் முன்பின் -
பெருமையை யுடைத்தாகிய மிக்க வலிமையுடைய; கோடு முற்றிய
கொல் களிறு - கொம்பு முதிர்ந்த கொல்லுங் களிறு; நிலை கலங்கக்
குழி கொன்று - அதன் நிலைசரியக் குழியைத் தூர்த்து; கிளை புகல
- தன் இனம் விரும்ப; தலைக்கூடி யாங்கு தன்னினத்திலே சென்று
பொருந்தினாற்போல; அரு முன்பின்
பொறுத்தற்கரிய வலியால்
பகையை  மதியாது;  நீ  பட்ட  பெருந் தளர்ச்சி - நீயுற்ற பெரிய
தளர்ச்சி நீங்க;பிறிது சென்று - பிறிதொரு சூழ்ச்சியாற் போய்; பலர்
உவப்ப - பலரும் மகிழ; மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக்
கூறலின் - பரந்த உரிமையையுடைய இடத்தின் நின் சுற்றத்தார்
பலர்க்கு நடுவே  உயர்த்துச்   சொல்லப்படுதலால்; உண்டு ஆகிய
உயர் மண்ணும் - நீ செழியனாற் பிணிப்புண்பதற்கு முன்பு நின்னா
லழிக்கப்பட்டுப் பின்பு தம் மரசு வௌவாது  நின் வரவு பார்த்திருந்த
அரசர் நமதாய் இவனாற் கொள்ளப்பட்டு உண்டு அடிப்பட்டுப் போந்த
மேம்பட்ட நிலமும்; சென்று பட்ட விழுக் கலனும் பெறல் கூடும் -
இவன்பாற் சென்றுற்ற சீரிய அணிகலமும் கிடைத்த லுண்டாம்; இவன்
நெஞ்சுறப் பெறின் எனவும் - இவனது நெஞ்சு நமக்கு உரித்தாகப்
பெறின் என நினைந்தும்; ஏந்த கொடி இறைப்புரிசை -நின் வரவு
பார்த்திராது தம் மரசு வௌவிய பகைவர் எடுத்த கொடியையுடைய
உயர்ந்த மதிலையும்; வீங்கு சிறைவியல் அருப்பம் - மிக்க காடும்
அகழும் முதலாய காவலையுடைய அகலிய அரணினையும்; நாம் இனி
இழந்து வைகுதும் - நான் இனி இழந்து தங்குவேம்; உடன்று
நோக்கினன் பெரிது எனவும் - இவன் நம்மை வெகுண்டு பார்த்தான்
மிகவென  நினைந்தும்;  வேற்றரசு - பகை வேந்தர்; பணி தொடங்கும்
நின் ஆற்றலொடு புகழேத்தி - ஏவல் செய்யத் தொடங்குதற்குக்
காரணமாகிய நினது வலியுடனே புகழை வாழ்த்தி; காண்கு வந்திசின் -
காண்பேனாக வந்தேன்; பெரும-; ஈண்டிய மழை யென மருளும் பல்
தோல் - திரண்ட முகிலெனக் கருதி மயங்கும் பல பரிசைப்
படையினையும்; மலையெனத் தேன் இறை கொள்ளும் இரும்பல்
யானை - மலையென்று கருதித் தேனினம்  தங்கும் பெரிய பல
யானையினையும் உடலுநர் உட்க வீங்கி - மாறுபடுவோர் அஞ்சும்படி
பெருத்தலால்;கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை - கடலெனக்
கருதி மேகம் நீர் முகக்க மேற்கொள்ளும் படையினையும்; ஆனாது -
அமையாது;கடு ஒடுங்கு எயிற்ற-நஞ்சு சுரக்கும் பல்லினையுடையவாகிய;
அரவுத் தலை பனிப்ப - பாம்பினது தலைநடுங்கும் பரிசு; இடி யென
முழங்கும் முரசின் - இடியென்று கருத முழங்கும் முரசினையும்;வரையா
ஈகை - எல்லார்க்கும் எப்பொருளும் வரையாது கொடுக்கும்
வண்மையையுமுடைய; குடவர் கோவே - குடநாட்டார் வேந்தே எ-று.

     காவல, பொருந, பெரும, கோவே, ஏத்திக் காண்கு வந்தேன் எனக்
கூட்டி வினைமுடிவுசெய்க. குன்றென்றது சிறு மலைகளை; அன்றி
மணற்குன்றென்று நெய்தல்  நிலமாக்கி,  ஏனை   மூன்றோடுங்  கூட்டி
நானிலத்தோருமென் றுரைப்பாரு முளர். அடுபொருந வென்றது, வேந்தற்கு
வெளிப்படையாய்  நின்றது.  தளர்ச்சி  யென்பதன்பின்  நீங்கவென ஒரு
சொல் வந்தது. “அருமுன்பிற் பெருந்தளர்ச்சி பலருவப்பப் பிறிது சென்று”
என்பதற்கு, முன்போலே தளர்ச்சி  பிறிதாகப்   பலருவப்பச்   சென்று
எனினுமமையும்; அன்றி முன்பின் தளர்ச்சி பிறிதாகச் சென் றென்றுரைப்
பாரு முளர். ஆனாது முழங்கும் முரசு என்க.

     விளக்கம்: குண  குட  கடல்  என்றாற்போலக் குமரிக்கண் கடல்
கூறப்படாமையால்,   குமரி    கடல்கோட்    படுதற்கு    முன்னையது
இப்பாட்டென்பது தெளிவாகும். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்,
இல்லறத்தானாகிய தான் என்ற கூறு ஐந்தொழிய எஞ்சி நிற்கும் ஆறாவது
கூறு அரசர்க்காதலின், அதனைப் “படுவது”  என்றார். தடையுண்டாகிய
வழி, அரசு இனிது நடவாதென்பதுபற்றி, இனிது  உருண்ட  என்பதற்குத்
தடையின்றாக வுருண்ட என்றார். முழுதாளுதல்- நிலம் முழுதும் ஆளுதல்
கோள் தாழை - கோட்புக்க தாழை; குலை தாழ்ந்து மக்கள் ஏறி  இனிது
கொள்ளத்தக்க வகையில் உயர்ந்த தெங்கு என்றற்குக் கோட்புக்க தெங்கு
என வுரைத்தார். நிலாப்போல் வெண்மையான  மணலை “நிலவு மணல்”
என்றமையின், “நிலாப்போன்ற மணல்” என வுரைத்தார். நிலா, நிலவென
வந்தது. பயம்பு, பள்ளம். யானை வரும் வழியில் ஆழ்ந்த பள்ளஞ்செய்து
அதன்மேல் மெல்லிய கழிகளைப் பரப்பி மணலைக் கொட்டி பொய்யே
நிலம் போலத் தோன்றச் செய்து வைப்பர் யானை  வேட்டம் பரிவோர்.
அதனை யறியாது வரும் யானை அப்பள்ளத்தில் வீழ்ந்துவிடும். பின்னர்ப்
பழகிய  யானைகளைக்  கொண்டு  அதனைப்  பிணித்துக்   கொள்வர்.
இக்கரவினை யறிந்த யானைகள்,செல்லுமிடத்து மிக்க கருத்தோடு செல்லும்.
ஈண்டு யானை அகப்பட்டமைக்குக் காரணம் மனச்செருக்கா  லுண்டாகிய
கருத்தின்மை  யென்பார்,  “மாப்பயம்பின்  பொறை போற்றாது” என்றார்.
மிக  முதிர்ந்த களிறென்பது தோன்ற, “கோடு  முற்றிய  கொல்  களிறு”
என்றார்.   எனவே,  இவ்வாறு  பல  இடையூறுகளைக்  கண்டு  தேறிய
களிறென்பது  பெற்றாம். அரு முன்பு, முன்பு-வலி.  இதனையுடைமையின்
பயன்,பகைக்கஞ்சாமையாதலால்,அரு முன்பின் என்பதற்கு“பொறுத்தற்கரிய
வலியால் பகையை மதியாது” என  வுரைத்தார்.  இறைப்புரிசை:  இறை -
உயர்வு காடு, அகழ் மதில்  முதலிய  அரண்களின்  பன்மை  தோன்ற,
“வீங்கு சிறை” என்றார். சிறை,   காவல்.  மலையிடத்தே   தேனினம்
கூடமைத்தல் இயல்பாதலால், யானைகளின் மதநாற்றங் குறித்துத் தங்கும்
தேனினத்தை, “மலையெனத் தேனிறை கொள்ளும்  யானை” யென்றார்.
வான், மேகம்; “வான் பொய்ப்பினும் தான் பொய்யா” (பட்டி.5) என்றாற்
போல. குன்றுமலை  காடு  நாடென்றவிடத்துக்  குன்றொழிந்த ஏனைய
தனித்தனியே    குறிஞ்சி,    முல்லை,   மருதங்களைக்   குறித்தலின்,
குன்றென்பதும் ஒரு  நிலப்பகுதி  குறித்ததென்றற்கும்  இடமுண்மையின்,
“அன்றி......உளர்” என்றார்.  பொருநர்,  வேந்தர்க்கும்,    போர்க்களம்
ஏர்க்களம் என்ற  இருவகைக் களம்  பாடுவோர்க்கும்  பொதுப்பெயர்.