70. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மீண்டும் ஒருமுறை
ஆசிரியர் கோவூர்கிழார் சென்று கண்டார். முன்பு சென்று கண்டபின்
காவிரியின் வடகரையில் உள்ள சிறுகுடி யென்னும் ஊரை யுடையவனும்,
“தனக்கென வாழாப் பிறர்க் குரியாள”னெனச் சான்றோராற்
சிறப்பிக்கப்பட்டவனுமாகிய பண்ணன் என்பானைக் கண்டு பெருஞ்சிறப்புத்
தரப்பெற்றாராயினும், கிள்ளி வளவனுடைய அன்பு நலத்தால் மீளவும்
சென்றார். அவர்க்குச் சோழன் மிக்க பொருளைத் தந்து சிறப்புச் செய்தான்.
அப்போது நாட்டில் சோறும் நீரும் குறைவின்றி யிருப்பதும், அவனுடைய
நல்லிசை விளக்கமிக்கிருப்பதும், அவன் இரவலர்க்குப் பெருவண்மை புரிவதும்
அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. அதனைப் பாணாற்றுப்படை வாயிலாக
இப்பாட்டின்கண் குறித்துச் சிறப்பித்தார்.

தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்கிவட் டணிகெனக் கூறி
5.வினவ லானா முதுவா யிரவல
தைஇத் திங்கட் டண்கயம் போலக்
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
அடுதீ யல்லது சுடுதீ யறியா
திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்
10.கிள்ளி வளவ னல்லிசை யுள்ளி
நாற்ற நாட்டத் தறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பன் ஞாங்க ரூதும்
கைவள் ளீகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழு மோதி யொண்ணுதல்
15.இன்னகை விறலியொடு மென்மெல வியலிச்
செல்வை யாறிற் செல்வை யாகுவை
விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பா டன்றவ னீகை
நினைக்க வேண்டா வாழ்கவன் றாளே.
(70)

     திணையுந் துறையு மவை. அவனைக் கோவூர் கிழார் பாடியது.

     உரை: தேஎந் தீந்தொடைச் சீறி யாழ்ப் பாண - தேன் போல
இனிய நரப்புத்தொடை பொருந்திய சிறிய யாழையுடைய பாண; கயத்து
வாழ் யாமை காழ் கோத் தன்ன - கயத்தின்கண் வாழும் யாமையை
நாராசத்தின்கண்ணே கோத்தாற் போன்ற; நுண் கோல் தகைத்த தெண்
கண் மாக் கிணை - நுண்ணிய கோலாற் பிணிக்கப்பட்ட தெளிந்த
கண்ணையுடைய பெரிய உடுக்கை யோசை; இனிய காண்க இவண்
தணிக எனக் கூறி வினவல் ஆனா - இனிய காண்க, இவ்விடத்தே
சிறிது ஆறிப் போவீராக என்று சொல்லிப் பலவும் என்னை வினவுத
லமையாத; முது வாய் இரவல - முதிய வாய்மையுடைய இரவலனே!;
யான் சொல்லுவதனைக் கேட்பாயாக; தைஇத் திங்கள் தண் கயம்
போல - தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போல; கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் - கொள்ளக் கொள்ளத்
தொலையாத சோற்றையுடைய அகன்ற நகரிடத்து; அடு தீ யல்லது சுடு
தீ யறியாது - அடு நெருப்பல்லது சுடு நெருப்பறியாது; இரு மருந்து
விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் - சோற்றையும் தண்ணீரையும்
விளைக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தன்; கிள்ளி வளவன் நல்லிசை
உள்ளி - கிள்ளி வளவனது நல்ல புகழை நினைத்து; நாற்ற

நாட்டத் தறுகாற் பறவை - மணத்தை யாராயும் ஆராய்ச்சியையுடைய
வண்டு; சிறு வெள்ளாம்பல் ஞாங்கர் ஊதும் - சிறிய வெளிய
ஆம்பலின்மீதே யூதும்; கை வள் ஈகைப் பண்ணன் சிறு குடி -
கையான் வள்ளிய தொடையையுடைய பாணனது சிறுகுடிக்கண்; பாதிரி
கமழும் ஓதி - பாதிரி நாறும் மயிரினையும்; ஒண்ணுதல் இன்னகை
விறலியொடு - ஒள்ளிய நுதலினையும் இனிய முறுவலையுமுடைய
விறலியுடனே; மென் மெல இயலிச் செல்வை யாயின் - மெல்ல மெல்ல
நடந்து செல்வையாயின்; செல்வை யாகுவை - செல்வத்தையுடைய
யாவை; விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் - விறகைக்
காட்டினின்றும் ஊரகத்துச் செலுத்தும் மாந்தர் அக் காட்டகத்து விழுப்
பொருள் எடுத்துக்கொண்டாற் போல்வதொரு; தலைப்பாடு அன்று -
நேர்பா டன்று; அவன் ஈகை அவனது வண்மை; நினைக்க வேண்டா -
அது பெறுவேன்கொல் என்று கருதவேண்டா;அவன் தாள் வாழ்க -
அவனது தாள் வாழ்க எ-று.

     பாண, தணிக எனக் கூறி வினவலானா இரவல, விறலியொடு மென்மெல
இயலிச் செல்குவையாயி னென இயையும்; வியனகர்ச் செல்வையாயி னெனவு
மமையும். நகரையுடைய நாடென இயைப்பாரு முளர். “விறகொய் மாக்கள்
பொன்பெற் றன்னதோர் தலைப்பாடன்” றென்பதற்கு விறகிற்குச் சென்றோர்
பொன் பெற்றாற்போல்வதொரு தலைப்பாடதென்று பொருளுரைப்பாரு முளர்;
அது பொருந்துமே லறிந்து கொள்க.

     விளக்கம்: தீந் தொடை யென்றவிடத்துத் தொடையின் இனிமையைத்
தேனாகிய உவமையால் விளக்கினா ரென்றற்குத் “தேன்போலும் இனிய
தொடை” யென வுரைத்தார். வறுமை யுற்றிருக்கும் இரவலன் வளவன்பால்
பொருள்பெற்று வரும் பாணனை நோக்கி, “பாண, மாக்கிணை இனிய காண்க;
இவண் தணிக” எனச் சொல்லித் தன் வறுமை நீக்குதற்குரியவர் யாவரென
வினவுகின்றான். “கயத்துவாழ் யாமை காழ்கோத்தன்ன” வென்றது, கிணையின்
உருவமைப்பைப் புலப்படுத்துதல் காண்க. தணிதல், பசி தணித்து
இளைப்பாறுதல். முது வாய் இரவலன் இரவல னுடைய முதுமையும் சொல்லின்
வாய்மையும் தோன்ற நின்றது. மழைக் காலத்து நீர்ப் பெருக்கால்
கலக்கமுற்றிருக்கும் நீர், தைத் திங்களில் தெளிந்து தண்ணிதாயிருத்தலால்,
“தைத் திங்கள் தண்கயம்” என்றார். “பனிச்சுனைத் தெண்ணீர், தைஇத்
திங்கள் தண்ணிய” (குறுந். 196) என்ப. “கூதிராயின் தண்கலிழ் தந்து, வேனி
லாயின் மணிநிறங் கொள்ளும், யாறு” (ஐங்.45) என்பது ஈண்டுக் குறிக்கத்
தக்கது. பகைவர் ஊர்களைச் சுடு நெருப்பு, ஈண்டுச் சுடுநெருப் பெனப்
பட்டது. செலவு - செல்வம். ஒய்தல் - செலுத்துதல்; “உப்பொய் ஒழுகை”
(புறம்.116) எனப் பிறரும் கூறுப. தலைப்படுதல் - நேர்படுதல். விறகு விற்போர்
ஊருக்குக் கொண்டுசென்று ஆங்கே விற்றுப் பெறும் பொருளை அக்
காட்டிடத்தே பெற்றுக்கொள்ள நேரும் வாய்ப்பு; அது போல்வதன்று;
போல்வதாயின், அஃது ஐயத்துக் கிடமாம் என்பார், “தலைப்பா டன்று”
என்றார். விறகு வெட்டப் போனவன் புதையல் கண்டாற்போல்வதொரு
வாய்ப்பெனக்கொண்டு அதற்கேற்பப் பொருள் கோடல் பொருந்தா தென்பது.