149. கண்டீரக் கோப்பெரு நள்ளி

     கண்டீரக் கோப்பெரு நள்ளியின் பரிசில் பெற்று விருந்துண்டு
மகிழ்ந்திருக்கும் கூட்டத்தே ஒருகால் ஒரு சிறு நிகழ்ச்சி தோன்றிற்று.
அவருள், பாடற்குரிய பாணர், காலையில் இசைத்தற்குரிய மருதப்
பண்ணையும் மாலையிற் பாடற்குரிய செவ்வழிப் பண்ணையும் முறை
மயங்கி முறையே மாலையிலும் காலையிலும் தவறிப் பாடினர். அது
குறித்து வியப்புற்ற நள்ளி, அவர்க்குத் தலைமை தாங்கும் வன்பரணரை
வினவினனாக, அவர் வித்தகம் பட, “நள்ளி! காலையில் மருதமும்
மாலையிற்செவ்வழியும் பாடுதல் வரலாற்று முறை; நீ அவர்க்கு வறுமை
புலனாகா வண்ணம் வேண்டுவன நிரம்ப வளித்து ஓம்புதலால்
அம்முறைமையினை மறந்தனர்”என்ற கருத்தை இப் பாட்டின்கண்
அமைத்துப் பாடியுள்ளார்.

 நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தன ரதுநீ
5புரவுக்கடன் பூண்ட வண்மை யானே.  (149)

    திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.

     உரை: நள்ளி வாழி - நள்ளி, வாழ்வாயாக; நள்ளி-;
நள்ளென் மாலை - நள்ளென்னும்  ஓசையையுடைய
மாலைப்பொழுதின்கண்; மருதம் பண்ணி - மருத மென்கின்ற
பண்ணை வாசித்து; காலை - காலைப்  பொழுதின்கண்; கைவழி
மருங்கிற் செவ்வழிப் பண்ணி - கைவழியாகிய  யாழின்கண்
செவ்வழி யென்னும் பண்ணை வாசித்து; வரவு எமர் மறந்தனர் -
வரலாற்று முறைமையை எம்முடைய பாணர் சாதியிலுள்ளார்
மறந்தார்; அது -அவ்வாறு மறந்தது; நீ புரவுக் கடன் பூண்ட
வண்மையான் - நீ கொடுத்து   ஓம்புதலைக் கடனாக மேற்கொண்ட
வண்மையான் எ-று.

     கையகத் தெப்பொழுதும் இருத்தலான் யாழைக் கைவழி
யென்றார், ஆகுபெயரான். வரவவர் மறந்தனர் என்பதூஉம் பாடம்.

     விளக்கம்: காலையில் மருதப் பண்ணும், மாலையிற் செவ்வழிப்
பண்ணும் இசைத்தற் குரியவாம். நள்ளியால் அளிக்கப்பட்ட பாணர், இசை
மரபை  மறந்து,  செவ்வழியைக்  காலையிலும்  மருதத்தை மாலையிலும்
முறைபிறழ்ந் திசைக்கின்றனர் என்பார், “மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி  மருங்கிற்   செவ்வழி  பண்ணி” இசைநூன்  முறையை மறந்தனர்
என்றார். வரவு - இசைநூல் வரலாற்று முறைமை.. இப்பிழைக்கும் எமர்
காரண மல்லர்; நினது வண்மை அவரை அம்முறைமையை மறக்கச் செய்த
தென்பதாம்.