161.குமணன் பெருஞ்சித்திரனார் குமணனிடத்தில் இருக்கையில், அவர் நெஞ்சம் அடிக்கடி தன் மனைவி மக்கள் எய்தி வருந்தும் வறுமை நிலையை யெண்ணி யெண்ணி வருந்துவதாயிற்று. இவரது மனநிலையை யறிந்ததும், குமணனும் அவர்க்குப் பெருஞ்செல்வம் தந்து சிறப்பிக்க எண்ணினான். பெருஞ்சித்திரனார் அவன் திருமுன் சென்று, வேந்தே, யான் மலைபோலும் யானை யூர்ந்து என்னுடைய ஊர்க்குச் செல்ல விரும்புகின்றேன்; யானைமேலேறிச் செம்மாந்து போதரும் என் செல்வ நிலையை என் மனைக்கண்ணிருந்து பெருந்துன்ப முழக்கும் என் மனையாட்டி கண்டு வியக்க வேண்டும்; அதற்கேற்ற செல்வம் தருவாயாக. அதனைப் பெறுதற்குரிய தகுதி என்பால் உளதாயினும் இலதாயினும் நீ என் தகுதி நோக்காது, நின் தகுதி நோக்கி அதற்கேற்ப வழங்குக. யான் கொடாத பிறவேந்தர் நாணச் செல்லும் கருத்துடையேன்; என் வேண்டுகோளை ஏற்றருள்கஎன இப் பாட்டால் வேண்டி, அவன் மிக்க செல்வத்தோடு பகடொன்று கொடுக்கப்பெற்றுச் செல்கின்றார். | நீண்டொலி யழுவங் குறைபட முகந்துகொண் டீண்டுசெலற் கொண்மூ வேண்டுவயிற் குழீஇப் பெருமலை யன்ன தோன்றல சூன்முதிர் புருமுரறு கருவியொடு பெயல்கட னிறுத்து | 5 | வளமழை மாறிய வென்றூழ்க் காலை | | மன்பதை யெல்லாஞ் சென்றுணக் கங்கைக் கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங் கெமக்கும் பிறர்க்குஞ் செம்மலை யாகலின் அன்பி லாடவர் கொன்றாறு கவரச் | 10 | சென்றுதலை வருந வல்ல வன்பின்று | | வன்கலை தெவிட்டு மருஞ்சுர மிறந்தோர்க் கிற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயரவெனக் கண்பொறி போகிய கசிவொ டுரனழிந் தருந்துய ருழக்குமென் பெருந்துன் புறுவிநின் | 15 | தாள்படு செல்வங் காண்டொறு மருளப் | | பனைமரு டடக்கையொடு முத்துப்பட முற்றிய உயர்மருப் பேந்திய வரைமரு ணோன்பக டொளிதிக ழோடை பொலிய மருங்கிற் படுமணி யிரட்ட வேறிச் செம்மாந்து | 20 | செலனசைஇ யுற்றனென் விறன்மிகு குருசில் | | இன்மை துரப்ப விரைதர வந்துநின் வண்மையிற் றொடுத்தவென் னயந்தனை கேண்மதி வல்லினும் வல்லே னாயினும் வல்லே என்னளந் தறிந்தனை நோக்காது சிறந்த | 25 | நின்னிளந் தறிமதி பெரும வென்றும் வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்தருந்திப் பல்பொறிக் கொண்ட வேந்தெழி லகலம் மாணிழை மகளிர் புல்லுதொறும் புகல நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பினின் | 30 | தாணிழல் வாழ்நர் நன்கல மிகுப்ப வாளம ருழந்தநின் றானையும் சீர்மிகு செல்வமு மேத்துகம் பலவே. (161) |
திணை: அது. துறை: பரிசிற்றுறை. அவனை அவர் பாடியது. உரை:நீண்டொலி அழுவம் குறைபட முகந்து கொண்டு - பெரிதாய் ஒலிக்கின்ற பரப்பினையுடைய கடல் குறை பட நீரை முகந்துகொண்டு; ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ - விரைந்த செலவையுடைய முகில்கள் வேண்டிய விடத்தே திரண்டு; பெருமலை யன்ன தோன்றல - பெரிய மலைபோலுந் தோற்றத்தை யுடையவாய்; சூல் முதிர்பு - சூல் முதிர்ந்து; உரும் உரறு கருவி யொடு பெயல் கடன் இறுத்து - உருமேறிடிக்கும் மின் முதலாகிய தொகுதியுடனே கூடிப் பெயலை முறையாகப் பெய்து; வள மழை மாறிய என்றூழ்க் காலை - வளத்தைத் தரும் மழை நீங்கிய கோடைக்காலத்து; மன்பதை யெல்லாம் சென்றுண - உயிர்ப்பன்மைக ளெல்லாம் சென்று நீருண்டற்கு; கங்கை கரைபொரு மலி நீர் நிறைந்து தோன்றி யாங்கு - கங்கையினது கரையைப் பொரும் மிக்க வெள்ளம் நிறைந்து தோன்றியவாறு போல; எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின் - எங்கட்கும் பிறர்க்கும் தலைமையுடைய யாதலின்; அன்பில் ஆடவர் கொன்று ஆறு கவர - யாவரோடும் உறவில்லாத ஆறலை கள்வர் கொன்று வழியிலே அடித்துப் பறித்தலால்; சென்று தலைவருந அல்ல - போய் முடிவனவல்ல; அன்பின்று வன்கலை தெவிட்டும் அருஞ் சுரம் இறந்தோர்க்கு - அருஞ் சுரமாயிருக்கத் தம்முயிர்மேல் அன்பின்றி வலிய கலைகிடந்து அசையிடும் போதற்கரிய அச் சுரத்தின் கண்ணே அளவின்றிப் பிரிந்தவர்க்கு; இற்றை நாளொடும் யாண்டு தலைப் பெயர என -இற்றை நாளொடுங் கூடி யாண்டு கழிக வெனச் சொல்லி; கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து - கண்ணொளி மழுங்கிய இரக்கத்துடனே வலி கெட்டு;அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி - பொறுத்தற்கரிய துன்பமுறும் எனது பெரிய வறுமை யுறுவோள்; நின் தாள் படு செல்வம் காண்டொறும் மருள - நினது முயற்சியாலுண்டாகிய செல்வத்தைக் காணுந்தோறும் வியப்ப; பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய உயர் மருப்பு ஏந்திய - பனையை யொக்கும் பெருங் கையுடனே முத்துப்படும்படி முதிர்ந்த உயர்ந்த கொம்பேந்திய; வரை மருள நோன் பகடு - மலையை யொக்கும் வலிய களிற்றை; ஒளி திகழ் ஓடை பொலிய - ஒளி விளங்கும் பட்டம் பொலிய; மருங்கில் படு மணி இரட்ட ஏறி - பக்கத்தே யொலிக்கும் மணி ஒன்றற்கொன்று மாறி யொலிப்ப ஏறி; செம்மாந்து செலல் நசைஇ உற்றனென் - தலைமை தோன்ற இருந்து போதலை விரும்பினேன்; விறல் மிகு குருசில் - வென்றி மிக்க தலைவனே; இன்மை துரப்ப இசை தர வந்து- எனது வறுமை பின்னே நின்று துரத்த நின் புகழ் கொடுவர வந்து; நின் வண்மையில் தொடுத்த என் நயந்தனை கேண்மதி - நினது கைவண்மையிலே சிலவற்றைத் தொடுத்த வென்னைக் காதலித்துக் கேட்பாயாக; வல்லினும் வல்லே னாயினும் - சிலவற்றைச் சொல்ல அறிவேனாயினும் அறியேனாயினும்; வல்லே என் அளந்து அறிந்தனை - விரைய என் கல்வி யறிவை ஆராய்ந்தறிந்தனையாய்; நோக்காது சிறந்த நின் அளந்து அறிமதி - ஆராயாது சிறந்த நின் அளவை அளந்தறிவாயாக; பெரும - பெருமானே; என்றும் - எந்நாளும்; வேந்தர் நாணப் பெயர்வேன் - எனது மிகுதியைக் கண்டு அரசர் நாணும்படி பெயர்வேன்; சாந்து அருந்திப் பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் - சாந்து பூசப்பட்டுப் பல நல்ல இலக்கணத்தைப் பொருந்திய மேம்பட்ட அழகினையுடைய மார்பை; மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல - மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் தழுவும் தோறும் விரும்ப; நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்- நாட் காலையே முரசு முழங்கும் இடனுடைத்தாய் எல்லையின்கண்; நின் தாணிழல் வாழ்நர் நன்கலம் மிகுப்ப - நினது தாணிழற்கண் வாழ்வார் நல்ல ஆபரணத்தை மிகுப்ப; வாள் அமர் உழந்த நின் தானையும் - வாளாற் செய்யும் போரின்கண்ணே உழக்கப்பட்ட நினது படையையும்; சீர் மிகு செல்வமும் பல ஏத்துகம் - நினது சீர்மிக்க செல்வத்தையும் பலபடப் புகழ்வேம் எ-று.
அருஞ் சுரம் சென்று தலைவருவனவல்ல வென முற்றாக்கி, அவ்வருஞ்சுரம் இறந்தோ. ரெனவும், அன்பின்றி யிறந்தோ ரெனவும் கூட்டுக. நின் வண்மையிற் றொடுத்த வென்பதற்கு நின் வண்மையால் வளைத்துக் கொள்ளப்பட்ட வெனினு மமையும். புகல, மிகுப்ப வென்னும் செயவெனெச்சங்கள் வாளம ருழந்த வென்னும் பிறவினையொடு முடிந்தன.
துன்புறுவி மருளப் பகடேறிச் செலல் நசைஇ உற்றனென் எனவும், மகளிர் புகலத் தாணிழல் வாழ்நர் நன்கல மிகுப்ப வாளம ருழந்த நின் தானையும் செல்வமும் ஏத்துக மெனவும் கூட்டுக. விளக்கம்: கார்காலத்து இமயத்திற் பெய்த மழைநீர் பனியாய் உறைந்திருந்து கோடையில் உருகிக் கங்கையிற் பெருகி வரு மென்ப; அதனால் தாளாண்மையாலும் போராண்மையாலும் ஈட்டப்பெற்றிருந்த குமணன் செல்வம் பரிசிலர்க்கு வறுமைக் காலத்திற் பயன்படுதலின், கங்கை யாற்றை யுவமித்து, “கங்கை நீர் நிறைந்து தோன்றியாங்கு எமக்கும் பிறர்க்கும் செம்மலை”யென்றார். இனி, தன் மனைக்கண் இருக்கும் மனைவி தன்னை நினைந்து துன்புறுந் திறத்தை யெடுத்தோது வாராய், சுரத் தருமையை ‘அன்பில் ஆடவர் கொன்றாறு கவர”கடை போகச் சென்று முடியும் இயல்பிற்றன்று என்றும், அச் சுரத்தின்கண் நெடிது சென்றவர்க்குக் கேடுண்டாமென அஞ்சும் திறத்தை, “இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர வென”ினைந்து உரன் அழிந்து, “அருந்துய ருழக்கும் பெருந் துன்புறுவி”யென்றும், சிறிது கொடுத்து எள்ளிய இளவெளிமான் கண்டு நாணச் செல்லவேண்டுமென்ற வேட்கையால், “என்றும் வேந்தர் நாணப் பெயர்வேன்”என்றும், குமணன் செய்த போர்களால் விளைந்த நலத்தால் அவன் தாணிழல் வாழ்வாரும் நன்கலம் இரவலர்க்களிக்கும் பெரும்புகழ் பெற்றனரென்றும் கூறி, அவனுடைய தானையையும் செல்வத்தையும் பாராட்டியுள்ளார். |