167.ஏனாதி திருக்கிள்ளி திருக்கிள்ளி யென்பான், சோழநாட்டுக் குறுநில மன்னருள் ஒருவன்; சோழ வேந்தர்க்குப் படைத்துணையாய்ப் பல போர்களைச் செய்து மேம்பட்டவன்; பகைவர் படைக்கலங்களாற் புண்பட்ட மேனியும், பகைவர் புறங் காண்டலாலும் இரவலர்க்கு வரையாது வழங்கலாலும் இசைபெற்ற நல்வாழ்வும் உடையன். ஏனாதி யென்பது முடிவேந்தர்களால் கொடுக்கப்படும் சிறப்புப் பெயர். இவன் காலத்தே, சோழவேந்தன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் சேரமான் குட்டுவன் கோதையும் சிறப்புற்றிருந்தனர். குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் வாழ்ந்தானாயினும், ஏனை யிருவரையும் போல அத்துணைச் சிறப்பில னாயினன். சோழ வேந்தற்குப் படைத்துணைவனாக இத் திருக்கிள்ளியோடு சோழிய வேனாதி திருக்குட்டுவனும் விளங்கினான்.
அக்காலத்தே கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனாரென்னும் சான்றோர் இத் திருக்கிள்ளியின் வண்மையும் நல்லிசையும் கேள்வியுற்று இவன்பால் வந்து சேர்ந்தார். திருக்கிள்ளியும் அவரை யன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தான். மதுரைக் குமரனார் திருக்கிள்ளியின் மேனி முற்றும் வாள் வடுவுற்று அவனது போர்த்திறத்தை வெளிப்படுத்தும் நலத்தை வியந்து பழிப்பது போலப் புகழ்ந்து ஒரு பாட்டினைப் பாடினர். அதன்கண், திருக்கிள்ளியையும் அவன் பகைவரையும் ஒப்ப நிறுத்தி, நீ வடுப் பொருந்திய யாக்கையை யுடையனாதலின் கண்ணுக்கு இனிய னல்லை; புகழுடைமையால் கேட்டற் கினியை; நின்பகைவரோ போர்க்கஞ்சி ஒடுங்கி வாழ்வதனால் மெய் சிறிதும் வடுவுறாது கேட்டற்கு இனியரல்லராயினும் காண்டற்கு இனியராயுள்ளனர். இருவீரிடத்தும் இனிமையும் இன்னாமையும் இருப்பவும் அறிவுடைய உலகம் உன்னையே வியந்து கூறுகிறதே! காரணம் என்னையோ?என்று வினவுவார் போலக் குறித்துப் பாடியுள்ளார். | நீயே, அமர்காணி னமர்கடந்தவர் படைவிலக்கி யெதிர்நிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின் னாயே | 5 | அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின் | | ஊறறியா மெய்யாக்கையொடு கண்ணுக் கினியர் செவிக்கின் னாரே அதனா, னீயுமொன் றினியை யவருமொன் றினியர் ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க் | 10 | கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி | | நின்னை வியக்குமிவ் வுலகமஃ தென்னோ பெரும வுரைத்திசி னெமக்கே.(167) |
திணை: அது. துறை: அரசவாகை. ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. உரை:நீயே - நீதான்; அமர் காணின் அமர் கடந்து - போரைக் காணின் அப் போரை வென்று; அவர் படை விலக்கி எதிர் நிற்றலின் - அப்பகைவரது படையை விலக்கி எதிர் நிற்றலான்; வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு - வாள் வாய்க்கத் தைத்த வடு வழுந்தின உடம்புடனே; கேள்விக்கு இனியை - கேட்டசெவிக்கு இனியை; கட்கு இன்னாய் - கண்ணுக்கு இன்னாய்; அவர் - பகைவராகிய அவர்தாம்; நிற்காணின் புறங்கொடுத்தலின் - நின்னைக் காணிற் புறந்தருதலால்; ஊறறியா மெய் யாக்கையொடு - புண்ணறியாதஉடம்பாகிய வடிவுடனே; கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னார் - கண்ணுக்கு இனியர் செவிக்கு இனியரல்லர்; அதனால்-; நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் - இங்ஙனம் நீயு மொன்றினியை அவரு மொன்றினியர்; ஒவ்வா யாவுள - இனி அவரொவ்வாதன வேறு யாவை யுள; வெல் போர்க் கழல் புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி - வெல்லும் போரினைச் செய்யும் வீரக் கழலணிந்த திருந்திய அடியினையும் கடிய செலவினையுடைய குதிரையையுமுடைய கிள்ளி; நின்னை வியக்கும் இவ்வுலகம் - நின்னை மதித்திருக்கும் இவ்வுலகம்;அஃது என்னோ - அதற்குக் காரணம் யாதோ; பெரும எமக்கு உரைத்திசின் - பெருமானே எமக்குச் சொல்லுவாய் எ-று.
நீ கட்கின்னாய் எனப் பழித்தது போலப் புகழ்தலும் அவர்கட்கினிய ரெனப் புகழ்ந்தது போலப் பழித்தலும் சில அணி தோன்ற நின்றன.
விளக்கம்:வாளை யெறியுமிடத்து, அதன் வாய் சென்று நன்கு பொருந்துவதால் உண்டான புண்ணாலாகிய வடுவை, வாள் வாய்த்த வடு என்றார். இன்னாய் என்றது, ஈண்டு அழகின்மை தோன்ற நின்ற தாயினும் குறிப்பாய் இன்பந் தருவதாயிற் றென்பதுபட நின்றது. புறந்தந்தார்மேல் வாள் முதலிய படைகளைத் தூய வீரராயினார் எறியாராகலின், புறங் கொடுத்தலின் ஊறறியா மெய் யாக்கையென்றார். மெய்யும் யாக்கையும் உடம்பையே சுட்டி நின்றனவாயினும், வேறுபடுத்தற்கு உரைகாரர் யாக்கையை வடிவாக்கி மெய்யாகிய வடிவுஎன்றுரைத்தார். விழுப்புண் படாத மெய், மறச் சிறப்பின்றி என்பும் நரம்பும் தோலும் ஆகிய இவற்றால் யாக்கப்பட்டு யாக்கை யெனப்படற் கமைந்து வடிவு தோற்றுதலைப் பயனாகக் கொண்டிருத்தலை வற்புறுத்தியவாறு. நீயுமொன்றினியை அவரு மொன் றினியரென்றது, தம் கூற்றைச் சிறப்பித்துக் காட்டுதற்குக் கொண்ட பொதுமொழி. கண்ணும் செவியுமாகிய இரண்டற்கும் ஒப்ப இனியராதல், புகழ் கருதி அறநெறியில் ஒழுகுவார்க்கு இயலாதாயினும், செவிக்கினிய புகழுடையராதல்பற்றி ஒருவரை அறிவுடை யுலகம் வியக்கு மென்பதை அறிந்துவைத்தும், என்னோ பெரும உரைத்திசி னெமக்கேயென்றது, மதுரைக் குமரனாரின் சொன்னலம் தோற்றுவித்து நின்றது. இது வஞ்சப்புகழ்ச்சி யென்னும் அணி. |