40. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் கிள்ளிவளவனைக் காண வந்தார்; அவர்க்கு இவனைக் காண்டல் அரிதாயிற்று. நாட்கள் சில கழிந்தன. ஒருநாள் அவனைக் காண்டற்கு வேண்டும் செவ்வி கிடைத்தது. அக்காலத்தே இப் பாட்டினைப் பாடினராதலால், இப் பாட்டின்கண், வளவனை நோக்கி, வேந்தே, நீ இன்சொல்லும் எளிய காட்சியும் உடையனாதல் வேண்டும்; யாங்கள் நின்னை இகழ்வோர் தலை மடங்கவும், புகழ்வோர் பொலிவுற்றுத் திகழவும் இன்று காண்பதுபோல் என்றும் கண்டு பாடிப் பரவுவோம் என்று செவியறிவுறுத்துகின்றார். | நீயே, பிறரோம்புறு மறமன்னெயில் ஓம்பாது கடந்தட்டவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழறைஇய | 5. | வல்லாளனை வயவேந்தே | | யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப் புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும் இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும | 10. | ஒருபிடி படியுஞ் சீறிடம் | | எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே. (40) |
திணை: அது. துறை: செவியறிவுறூஉ. அவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: நீ-; பிறர் ஓம்புறு மற மன் னெயில் ஓம்பாது - பகைவரது பாதுகாத்த மறம் நிலைபெற்ற அரண்களைப் பாதுகாவாது; கடந்தட்டு - எதிர் நின் றழித்து; அவர் முடிபுனைந்த பசும் பொன்னின் - அவரைக் கொன்று அவர் மகுடமாகச் செய்யப்பட்ட பசும்பொன்னால்; அடி பொலியக் கழல் தைஇய - நினது அடி பொலிய வீரக் கழல் செய்து புனைந்த; வல்லாளனை - வலிய ஆண்மையை யுடைய; வய வேந்தே; - யாம் - யாங்கள்; நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க - நின்னை இழித்துரைப்போர் கழுத் திறைஞ்ச; புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற - புகழ்ந்துரைப்போர் பொலிவு தோன்ற; இன்று கண்டு ஆங்குக் காண்குவம் - இன்று கண்டாற்போலக் காண்குவம்; என்றும் - எந்நாளும்; இன் சொல் - இனிய மொழியொடு; எண்பதத்தை ஆகு மதி - எளிய செவ்வியை யாகுக; பெரும-; ஒரு பிடி படியும் சீறிடம் - ஒரு பிடி கிடைக்கும் சிறிய விடம்; எழு களிறு புரக்கும் நாடு கிழவோய் - ஏழு களிற்றியானையைப் பாதுகாக்கும் நாட்டை யுடையோய் எ-று.
நாடு கிழவோய், இன் சொல் எண் பதத்தை யாகுமதி; அதனால் நின் இகழ் பாடுவோர் எருத்தம் அடங்கப், புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, யாம் இன்று கண்டாங்குக் காண்குவ மெனக் கூட்டுக. வல்லாளனை யென்பதனுள் ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது; அசைநிலையுமாம். மதி: முன்னிலை யசைச்சொல். கழல் தைஇய வல்லாளன் என்றதனாற் பகை யின்மையும், ஒரு பிடி படியுஞ் சீறிடம் ஏழு களிறு புரக்கும் நாடு கிழவோய் என்றதனால் பொருட்குறை வின்மையும் கூறியவாறாயிற்று. விளக்கம்: நண்பரைப் பிற ரென்றல் வழக்கன்மையின், பிறரென்றது பகைவரை யாயிற்று. எருத்து - கழுத்து; எருத்துக் கடக்கமாவது நாணால் தலை குனிதல். நாண்அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின் (பொருந:31) எனச் சான்றோர் கூறுதல் காண்க. பொலிவு தோன்ற வென்றது, பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்க வென்பதாம். கண்டு ஆங்கு என்றவிடத்துக் கண் டென்னும் செய்தெனெச்சம் பிறவினை முதல்வினை கொண்டு முடிதற்கு அமைதி கூறுவாராய், ஆசிரியர் பேராசிரியர், நடை கற்றன்ன வென்புழிக் கற் றென்னும் வினையெச்சம் தன்னெச்சவினை இகந்ததாயினும், அஃது உவமப் பகுதியாகலான், அங்ஙனம் வருதலும் வகை யென்றதனானே கொள்ளப்படும் (தொல்.உவம:1) என்பது காண்க. எழுகளிறு புரக்கும் நாடு - ஏழு களிற்றியானைகட்கு வேண்டும் உணவினை விளைக்கும் நாடு. |