46. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     கிள்ளி வளவன் தன் பகைவனான மலயமான் மக்களைக்
கொணர்ந்து கொலையானைக் காற்கீழிட்டுக் கொல்ல முயறல் கண்ட
கோவூர் கிழார், அதனைத் தவிர்க்க வேண்டி, இப் பாட்டின்கண், “நீயோ
புறாவின் பொருட்டுத் தன்னை வழங்கிய சோழன் மரபிற் பிறந்துள்ளாய்;
இவர்களோ புலவர்கட்குப் பெருங் கொடை நல்கி வாழும் பெரியோர்
மரபினர்; மிக்க இளையர்; இம்மன்றினை யஞ்சி மருண்டு நோக்குகின்றனர்;
யான் கூறுவது கேட்டபின் விரும்புவது செய்க” என்று இயம்புகின்றார்.

நீயோ, புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
5.களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே. (46)

     திணையும் துறையு மவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் கிடுவுழிக் கோவூர்
கிழார் பாடி உய்யக் கொண்டது.

     உரை: நீயே - நீதான்; புறவின் அல்லல் அன்றியும் - புறாவுற்ற
துன்ப மன்றியும்; பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை -
பிறவு முற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்த சோழன் மரபினுள்ளாய்;
இவர் - இவர்தாம்; புலன் உழு துண்மார் புன்கண் அஞ்சி -
அறிவான் உழுதுண்ணும் கற்றோரது வறுமையை யஞ்சி; தமது
பகுத்துண்ணும் தண் ணிழல் வாழ்நர் - தம்முடைய பொருளைப்
பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலை யுடையராய் வாழ்வாரது
மரபினுள்ளார்; களிறு கண்டழூஉம் - இவர் இப்பொழுது களிற்றைக்
கண்டு தம் இளமையால் தாம் முன்பு வெருவி யழுகின்ற; அழாஅல்
மறந்த புன் றலைச் சிறாஅர் - அழுகையை மறந்த புல்லிய
தலையையுடைய சிறு பிள்ளைகள்; மன்று மருண்டு நோக்கி - மன்றை
வெருவிப் பார்த்து; விருந்திற் புன்கண் நோவுடையர் - முன்பு
அறியாத புதியதொரு வருத்தத்தை யுடையர்; கேட்டனை யாயின் -
இது கேட்டா யாயின்; நீ வேட்டது செய்ம்மே - நீ விரும்பியதைச்
செய்வாயாக எ-று.

     தண்ணிழல் வாழ்நர் சிறாஅரென வியைப்பினு மமையும். அழால்
களிறு கண்டு மறந்த வெனக் கூட்டுக. நீ புறா முதலாயினவற்றின் துயர்
தீர்த்தற்கு உயிர்க் கொடை பூண்டோன் மருக னாதலானும், இவர் கற்றோர்
வறுமை யஞ்சிப் பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் மரபினுள்ளாராதலானும்
இவர் நின்னால் அருளத் தகி னல்லது முனியத்தகா ரென்பதாம்.

     இதுவும் இவரைக் கொல்லாமற் சந்து செய்வித்தலின், துணை வஞ்சியாயிற்று.

     விளக்கம்: களிறு கண்டழுதற்குக் காரணம் விளக்குதற்கு, இளமையால்
வெருவி யழும் என்றுரைத்தார். உயிரிழக்கும் துன்பமாதலின் அதனை
“விருந்திற் புன்கண்” என்றார். அழூஉம் அழாஅல் - அழுகின்ற அழுகை;
அழாஅல்: தொழிற்பெயர் செய்ம்மே என்றது, ஈற்றுமிசை யுகரங்கெட்ட
செய்யுமென் முற்றன்று; அது முன்னிலைக்கண்செல்லாது, “நின்மே”
யென்றாற்போல ஏவற்பொருட்கண் வந்தது.