51. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கூடகார மென்பது பாண்டிநாட்டி லிருந்ததோர் ஊர். இவ் வேந்தன் தன் நாட்டிற்கு வடக்கிலிருந்த வேந்தருடன் பெரும்போருடற்றி வெற்றி மேம்பட்டவன். இவனுடைய போர்த் திறலை வியந்து, ஐயூர் முடவனார். மதுரை மருதனிள நாகனார் என்ற இரு சான்றோரும் அழகிய பாட்டுக்களைப் பாடியிருக்கின்றனர். இவன் காலத்தே, சோழ நாட்டைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி புரிந்து வந்தான். இவ் வழுதிக்குப் பின் வந்த பாண்டி வேந்தன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில்மலைத் தலைவனான வள்ளுவனும் இவன் காலத்தவனே. ஆசிரியர் முடவனார் ஐயூர் என்னு மூரினர். இவர், முடவ ரெனப் படுதலால், நடந்து செல்ல இயலாதவரென்றும், இதனால் இவர் தாமான் தோன்றிக்கோன் என்பானை யடைந்து வண்டியிழுத்தற்குப் பகடு பல தரப்பெற்றன ரென்றும் கூறுவர். தாம் கிள்ளிவளவனைக் காணச் சென்றதாகவும், இடை வழியில் மாட்டாமை வந்துற, கிள்ளி வளவனுள்ளியவற் படர்ந்தும், செல்லேன் செல்லேன் பிறர்முக நோக்கேன் என்று வருந்தி ஒருபால் இருப்ப, அதனை யறிந்த தோன்றிக்கோன் இவர்க்குச் சிறப்புச் செய்தாகவும்; இவர் அவனை, கடுந்தேர் அள்ளற் கசாவா நோன்சுவல், பகடே யத்தை யான் வேண்டி வந்ததுவென விரும்பியதாகவும், அவன் விசும்பின் மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை, ஊர்தியொடு நல்கினா னெனவும் இவரே பிறிதோரிடத்திற் (புறம்:399) பாடியுள்ளார். இப்பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்து வருகையில், தன் னேவல் வழிநின்று திறை செலுத்தி வாழ்தலின்றிப் பகைத்துப் போருடற்றிய வேந்தரது வலியினை யழித்துத் தன்னாணையே அவர் நாட்டினும் செல்வித்தான். அதுகண்ட ஆசிரியர் ஐயூர் முடவனார், வேந்தே, நீர் மிகின் சிறையும், தீ மிகின் நிழலும், காற்று மிகின் வலியும் இல்லாதவாறு போல, நீ மிக்கெழின் எதிர்ந்துய்யும் வேந்தர் பிறரில்லை; எவரேனும் உளராயின், அவர் வாழ்வும் அரணும், ஈயலும் அதன் புற்றும் போலச் சிறிது போதிற் கெடுதல் திண்ணம் என இப் பாட்டின்கண் புகழ்ந்து பாராட்டுகின்றார். | நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின் மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை வளிமிகின் வலியு மில்லை யொளிமிக் கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி | 5. | தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து | | கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே அளியரோ வளியரவ னளியிழந் தோரே நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த | 10. | செம்புற் றீயல் போல | | ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே. (51) |
திணை: வாகை. துறை: அரசவாகை. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.
உரை: நீர் மிகின் சிறையு மில்லை - நீர் மிகுமாயின் அதனைத் தாங்கும் அரணு மில்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை - நெருப்பு மிகுமாயின் உலகத்து நிலை பெற்ற உயிர்களை நிழல் செய்யும் நிழலுமில்லை; வளி மிகின் வலியும் இல்லை - காற்று மிகுமாயின் அதனைப் பொறுக்கும் வலியு மில்லை; ஒளி மிக்கு - விளக்கம் மிக்கு; அவற்றோர் அன்ன சினப் போர் வழுதி - அவற்றை யொத்த சினம் பொருந்திய போரையுடைய வழுதி; தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் - குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது வென்று கூறப் பொறானாய்; போரெதிர்ந்து - போரை யேற்று; கொண்டி வேண்டுவனாயின் - திறையை வேண்டுவனாயின்; கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனர் - கொள்க வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர் நடுக்கம் தீர்ந்தார்; அளியரோ அளியர் - கொடாமையின் யாவராலும் மிக இரங்கத்தக்கார்; அவன் அளியிழந்தோர் - அவனது அருளை யிழந்த அரசர்; நுண் பல சிதலை - நுண்ணிய பல கறையான்; அரிது முயன்று எடுத்த - அரிதாக உழந்தெடுக்கப்பட்ட; செம்புற் றீயல் போல - செம்புற்றினின்றும் புறப்பட்ட ஈயலைப்போல; ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோர் ஒரு - பகற் பொழுதின்கண் வாழும் உயிர்வாழ்க்கையின் பொருட்டுச் சுழல்வோர் எ-று. வழுதி, தமிழ் பொதுவெனப் பொறானாய்க் கொண்டி வேண்டுவனாயின், கொடுத்த மன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன் அளியிழந்தோர், ஒரு பகல் வாழ்க்கைக் குலமருவோர்; ஆதலான் அவர் அளியரோ அளியர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க; அவன் அளியிழந்தோராகிய உலமருவோர் அளியரெனக் கூட்டி யுரைப்பினு மமையும். அளியரோ அளிய ரென இரங்கற்குறிப்புத் தோன்ற அடுக்கி நின்றது.
விளக்கம்: மாறன் வழுதி போர் வேட்டெழுந்த எழுச்சி காண்போர் தம்முட் கூறுவதுபோல் அமைந்துள்ளது. அரணழித்தற்கு நீர் மிகுதியும், வெம்மை செய்தற்குத் தீ மிகுதியும், மோதி முருக்குதற்கு வளியும் உவமமாயின. கொள்ளப்படுவது கொண்டி; அஃது ஈண்டுக் கொள்ளப்படும் திறைமேல் நின்றது. திறையை முன்னே செலுத்திவிட்டு இதனைக் கொள்க எனப் பின்னே வாயாற் சொல்லி வேண்டுதல் திறை செலுத்தும் முறையாதலால், கொள்க வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர் என வுரைத்தார். கொடாதார் ஈயல் போல ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோராவர் என்க. அவரது உலமரும் நிலையினைக் கண்டு இரங்கிக் கூறுதலின் அளியரோ வளியர் என்று இயம்புகின்றார். திறை செலுத்தாத வேந்தர்க்கு ஈயலை உவமை கூறலின், அவரது செல்வ வரண், அரிது முயன்றெடுத்த செம்புற்றை யொக்கு மென்றவாறாம். சுழற்சிப் பொருளதாகிய அலமரல் என்பது உலமரம் என வந்தது. |