58. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் சோழன் பெருந் திருமாவளவன் குராப்பள்ளி யென்னும் இடத்தே உயிர் துறந்தமை கருதிப் பிற்காலத்தான்றோர் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் எனச் சிறப்பித்தனர். இவன் போருடற்றுவதில் தலைசிறந்தவன். தன் காலத்தே வாழ்ந்த சேரமன்னன் கொங்கு நாட்டவர் துணைபெற்று இவனோடு பகை கொண்டானாக, இவன் அக் கொங்கரை வென்று சேரனாடு புகுந்து, அதன் தலைநகராகிய வஞ்சி நகரையே போர்க்களமாகக் கொண்டு போருடற்றி வென்றி யெய்தினான். இவன், பகைவர் புகழ்ந்த ஆண்மையும் நகைவர்க்குத், தாவின் றுதவும் பண்பும் உடைய னெனக் கோவூர் கிழார் பாடுகின்றார். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு முன்னோ பின்னோ அடுத்திருந்தவன். ஏனையோர் போலாது தனது ஆட்சி நிலைபெறுதற்குச் சோழனொடு நட்புற்றிருப்பதே வேண்டுவதெனத் துணிந்து சோழன் குராப்பள்ளித ் துஞ்சிய பெருந் திருமாவளவனது நட்பைப் பெற்று இனிதிருந்தான். ஒருகால் இருவரும் ஒருங்கிருப்பக்கண்ட காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனா ரென்னும் சான்றோர் இப் பாட்டால், நீவிர் இருவீரும் ஒருவர்க்கொருவர் உதவி நட்பு மாறா தொழுகுவீராயின், இந் நிலவுலகு முற்றும் நும் கையகப்படுவது பொய்யாகாது என வற்புறுத்தினார். சோழனிலும் பாண்டியனையே சிறப்புற வெடுத்தோதி இப் பாட்டின் கண் வற்புறுத்துவதால், சோழன் அவர் கருத்துக்கு இனி தியைந்திருப்பதும் பாண்டியன் தெருட்டப்பட்ட வேண்டியிருப்பதும் நன்கு விளங்குகின்றன. | நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே முழுமுத றொலைந்த கோளி யாலத்துக் கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது | 5. | நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ | | இளைய தாயினுங் கிளையரா வெறியும் அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவ ரேறே நீயே அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே | 10. | நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென | | வரைய சாந்தமுந் திரைய முத்தமும் இமிழ்குரன் முரச மூன்றுட னாளும் தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே பானிற வுருவிற் பனைக்கொடி யோனும் | 15. | நீனிற வுருவி னேமி யோனுமென் | | றிருபெருந் தெய்வமு முடனின்றா அங் குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி இன்னீ ராகலி னினியவு முளவோ இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே | 20. | ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவிரும் | | உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப் பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே அதனால், நல்ல போலவும் நயவ போலவும் | 25. | தொல்லோர் சென்ற நெறிய போலவும் | | காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும் ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா தின்றே போல்கநும் வேலே கொடுவரிக் | 30. | கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி | | நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே. (58) |
திணை: பாடாண்டிணை. துறை: உடனிலை. சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
உரை: நீயே தண் புனல் காவிரிக் கிழவனை - நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனே - இவன்; முழு முதல் தொலைந்த கோளி யாலத்துக் கொழு நிழல் நெடுஞ் சினை - பரிய அடிமாய்ந்த கோளியாகிய ஆலத்துக் கொழுவிய நிழலையுடைய நெடிய கொம்பை; வீழ் பொறுத் தாங்கு - அதன் வீழ் தாங்கினாற் போல; தொல்லோர் மாய்ந் தென - தனக்கு முன்னுள்ளோர்; இறந்தாராக; துளங்கல் செல்லாது - தான் தளராது; நல்லிசை முது குடி நடுக்கறத் தழீஇ - நல்ல புகழையுடைய பழைய குடியைத் தடுமாற்றமற அணைத்து; இளைய தாயினும் - தான் சிறிதே யாயினும்; கிளை அரா எறியும் - கிளையுடனே பாம்பை யெறியும்; அரு நரை உருமின் - பொறுத்தற்கரிய வெள்ளிய உருமேறு போல; பொருநரைப் பொறாஅ - இளமைக் காலத்தும் பகைவர்க் காணப் பொறாத; செரு மாண் பஞ்சவர் ஏறு - போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியுள் ஏறு போல்வான்; நீயே அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை - நீ அறம் தங்கும் உறையூரின்கண் அரசன்; இவனே - இவன்; நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய - நெல்லும் நீரும் யாவர்க்கும் எளிய வெனக் கருதி; வரைய சாந்தமும் - அவை போலாது யாவர்க்கும் பெறுதற்கரிய பொதியின்மலையிடத்துச் சந்தனமும்; திரைய முத்தமும் - கடலிடத்து முத்துமென இவற்றை; இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் - ஒலிக்கும் குரலையுடைய முரசம் மூன்றுடனே யாளும்; தமிழ் கெழு கூடல் தண் கெழு வேந்து - தமிழ் பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்; பால் நிற உருவின் பனைக் கொடி யோனும் - பால்போலும் நிறத்தையுடைய பனைக் கொடியை யுடையோனும்; நீல் நிற வுருவின் நேமியோனும் என்று - நீல நிறம்போலும் திருமேனியையுடைய ஆழியை யுடையோனு மென்று சொல்லப்படும்; இரு பெருந் தெய்வமும் உடனின்றாங்கு - இரண்டு பெரிய தெய்வமும் ஒருங்கு நின்றாற்போல; உருகெழு தோற்றமொடு - உட்குப் பொருந்திய காட்சியோடு; உட்கு வர விளங்கி - அச்சம் வர விளங்கி; இன்னீ ராகலின் - நீர் இத்தன்மையிராகுதலின்; இனியவும் உளவோ - இதனினும் இனிய பொருள் உளவோ; இன்னும் கேண்மின் - இன்னமும் கேளீர்; நும் இசை வாழிய - நும்முடைய புகழ் நெடுங்காலம் செல்வதாக; ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் - நும்முள் ஒருவீர் ஒருவீர்க் குதவுவீராக; இருவிரும் உடனிலை திரியீ ராயின் - நீங்க ளிருவீரும் கூடி நிற்கின்ற இந்நிலையின் வேறுபடீராயின்; இமிழ் திரைப் பௌவம் உடுத்த இப் பயங்கெழு மாநிலம் - ஒலிக்கும் திரையையுடைய கடல் சூழ்ந்த இப் பயன் பொருந்திய உலகங்கள்; கையகப் படுவது பொய்யாகாது - கையகத்தே யகப்படுதல் பொய்யாகாது; அனால் - ஆதலால்; நல்ல போலவும் - நல்லன போலே யிருக்கவும்; நயவ போலவும் - நியாயத்தை யுடையன போலே யிருக்கவும்; தொல்லோர் சென்ற நெறிய போலவும் - பழையோ ரொழுகிய ஒழுக்க முடையனபோலே யிருக்கவும்; காதல் நெஞ்சின் - அன்பு பொருந்திய நெஞ்சையுடைய; நும் இடை புகற்கு அலமரும் ஏதில் மாக்கள் - நும்மிடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலாருடைய; பொது மொழி கொள்ளாது - சிறிப்பில்லாத மொழியைக் கேளாது; இன்று போல்க நும் புணர்ச்சி - இன்று போல்க நுமது கூட்டம்; வென்று வென்று அடு களத்து உயர்க நும் வேல் - வென்று வென்று போர்க்களத்தின்கண் மேம்படுக நும்முடைய வேல்; கொடு வரிக் கோண்மாக்குயின்ற - வளைந்த வரியை யுடைய புலி வடிவாகச் செய்யப்பட்ட; சேண் விளங்கு தொடுபொறி - சேய்மைக்கண் விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனையை; நெடு நீர்க் கெண்டை யொடு பொறித்த - பெரிய நீரின்கண் வாழும் கயலுடனே பொறித்த; குடுமிய வாக - சிகரங்களை யுடையவாக; பிறர் குன்று கெழு நாடு - பிறருடைய குன்றையுடைய நாடுகள் எ-று.
குன்று கெழு நாடென்ற தாயினும் கருதியது பிறர் நாட்டுக் குன்றுக ளென்றதாகக் கொள்க. கோளி யென்றது, பூவாது காய்க்கும் மரம். தழீஇப் பொறாவென வியையும் முரச மூன்றாவன: வீர முரசும் நியாய முரசும் தியாக முரசும்; மண முரசுடனே ஏனை யிரண்டு முரசென்பாரு முளர். தொடு பொறி, பெயர்மாத்திரையாய் நின்றது. ஒருவீர் ஒருவீர்க்கு உதவியாய் வலியையுடையீராய் நீங்கள் இருவீருமென்பாரு முளர்.
இருவ ரரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இஃது உடனிலையாயிற்று. விளக்கம்: ஆலமரத்தின் கிளையைத் தாங்குதற்குரிய வீழ் தோன்றித் தாங்கத் தொடங்கிய வளவில் அதன் அடி முதல் புரை யோடித் தொலைந்து போதலின், முழுமுதல் தொலைந்த கோளி யால மென்றார். துளங்கல் செல்லாது. ஒரு சொல்லாய்த் துளங்கா தென்பது படநின்றது. உருமின்பால் உள்ள அருமை யிது வென்றற்குப், பொறுத்தற்கரிய என்றார். இளைய தாயினும் கிளையரா வெறியும் உருமின் என்ற உவமத்தால், பொருநரைப் பொறாஅ என்றதற்கு, இளமைக்காலத்தும் பகைவரைக் காணப் பொறாத என்று உரை கூறினார். நெல்லும் நீரும் பாண்டியர்க்கே யன்றி, ஏனைச் சோழ சேரர்க்கும் எளியவாய்க் கிடைப்பது பற்றி, எல்லார்க்கும் எளிய என்றும், வரைய சாந்தமும் திரைய முத்தமும் பாண்டியர்க்கே யுரிய, ஏனையோர்க்கு அரிய வென்றும் அறிக. உடனிலை, நட்பாற் கூடி யொன்றியிருக்கும் நிலை. யாவராலும் நயக்கப்படுவது நடுவு நிலையாதலின், அதனை நயம் என்றும் அதனைப் புலப்படுத்தும் மொழிகளை நயவ வென்றும் கூறுவர். காதல் நெஞ்சின் நும் - காதல் நெஞ்சினையுடைய நுங்கள் என்க. தொடு பொறி - கல்லின்கண் வெட்டப்படும் பொறி. இரண்டு முரசாவன வெற்றியும் கொடையுமாம். தொடு பொறி, தொடராற்றலால் வேறு பொருள் பயவாமையின் பெயர்மாத்திரையாய் நின்ற தென்றார். |